Friday, 31 August 2012

THE PHANTOM 2009
சிறு வயதிலிருந்தே எனது ஆதர்ச காமிக்ஸ் கதாபாத்திரம் ஃபேண்டம்.  ஃபேண்டம் போல குதிரையெல்லாம் சரிப்பட்டு வராது, ஆனால் டெவில் போல ஒரு ஓநாய் இருந்தால் நிறைய விஷயங்களுக்கு வசதி என்று, நானும் ஒரு ஓநாயை வளர்க்க வேண்டும் என்று தீர்மாணித்து இருந்தேன். குடும்பமே சேர்ந்து வீட்டுக்கு ஒரு ஓநாய்க்கு மேல் வளர்க்க முடியாது என்று தடுத்துவிட்டார்கள். பிறகென்ன, ஓநாயின் நெருங்கிய சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட்டை வளர்த்தேன். அந்த ஜெர்மன் ஷெப்பர்டிற்கும் “டெவில்” என்று பேர் வைக்கப் போகிறேன் என்று சொன்னதற்கு,  வீட்டிலிருந்த அத்தனை பேரும் என்னை ஒரு டெவிலைப் பார்ப்பது போல பார்த்து, என் மண்டைக்குள்ளே டெவில் நுழைந்து விட்டது என்று சொல்லி, பிடி பிடி என்று ஒரு பிடி பிடித்து விட்டனர் (சண்டைதான்). கடைசியில் முதலுக்கே மோசம் வந்ததுபோல, ஜெர்மன் ஷெப்பர்டும் பறிபோகும் நிலை வந்ததும், டெவில் பெயரை கைவிட்டு, வேறு ஒரு சாத்வீகமான பெயரை வைத்து பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். வீடும் அமைதி ஆனது. ஆனால் மிஸ்டர் ஜெர்மன் ஷெப்பர்டோ, சாத்வீகத்திற்கும் அதற்கும் ரொம்ப தூரம் என்று தீர்மாணித்து, ஃபேண்டமின் டெவிலைப் போலவே குணம் கொண்டு, எங்கள் ஏரியவிலேயே மிகவும் பேமஸாக ஆகிவிட்டார்.

நமது எடிட்டர் திரு விஜயன் ஏன் ஃபேண்டமிடம் பாராமுகமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. எடிட்டரின் கடைக்கண் பார்வை இவர் மேல் எப்போழுது விழும் என காத்திருக்கின்றேன். அப்படி ஒரு விஷயம் நடந்தால், நம் எல்லோருக்கும் புதிய சைசில், கலரில் ஃபேண்டம் காமிக்ஸ் கிடைக்கும். எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு ஸ்ட்ராங் அப்பீல் போட்டுவிட்டு, போட்டுவிட்டு வேறென்ன செய்ய, எடிட்டரைப் போல் Fingers Crossed. காத்திருப்போம் நம்பிக்கையுடன் நண்பர்களே.


டாம் டைலர் (Tom Tyler) என்ற நடிகர், 1943-ல் ஃபேண்டமாக நடித்து இருந்த படத்தை, வட சென்னையில் இருக்கும் மகாராஜா திரையரங்கத்தில் 1970-களின் வாக்கில் (தோராயமான வருடம்) திரையிடப்பட்டபோது (அந்த திரையரங்கம் பாண்டியன் என்று பெயர் மாறி, இன்று வாகனங்கள் மட்டும் பார்க் செய்யும் இடமாக இருப்பதாக கேள்வி). அந்த படத்திற்கு, என்னை எனது தந்தை அழைத்துச் சென்றார். அந்த படம் பார்க்கும் போது அதில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு படத்தில் துண்டு துண்டாக கதைகள் வந்த படி இருந்தது. அந்த படத்தில் இருந்த பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளும், அதில் நடித்தவர் பெயரும் மட்டுமே நினைவில் இருந்தன. தந்தையிடம் படத்தைப் பற்றிய எனது கேள்விகளுக்கு அவர் சொன்னது, இது ஃபேண்டம் படம் என்று கூறினார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு பேண்டம் காமிக்ஸ் அறிமுகம் ஆகவில்லை. காலப் போக்கில் அந்த படத்தின் பெயர் டாம் டாலர் என்று எனது நினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த நினைவோடு எப்போதும் பேண்டமும் கலந்தே இருந்தார். என்னைப் பொறுத்தவரை, இந்த நினைவு ஒரு குழப்பமான நினைவு.


கம்ப்யூட்டர் யுகம் ஆரம்பித்த பின் இந்த டாம் டாலரை வலையுலகத்தில் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தேன்.  தேடலின் முடிவு எனக்கு தந்த விடை, நான் தேடுவது டாம் டாலர் என்ற திரைப்படமல்ல, நான் சிறுவயதில் பார்த்தது டாம் டைலர் என்ற நடிகர் நடித்த தி பேண்டம் படம் அது என்ற ஞானத்தைத்தான். அது மட்டுமல்ல, அது திரைப்படம் அல்ல, அது ஒரு டிவி சீரியல். ரேடியோவே பிரபலமாகாத காலத்தில் டிவி சீரியலை திரையரங்கத்தில் பார்த்ததால் விளைந்ததே எனது  குழப்பம்.

ஃபேண்டம் கதைகள் பல முறை திரையாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. எனக்குத் தெரிந்த விவரங்களை கிழே வரிசைப்படுத்தி உள்ளேன்.

 1. டாம் டைலர் நடித்த, தி ஃபேண்டம் – 1943
 2. ரேஜர் க்ரீட் நடித்த தி ஃபேண்டம் – 1961
 3. 2040: ஃபேண்டம் அனிமேட்டட் டிவி ஸீரிஸ் - 1994
 4. பில்லி ஸேன் நடித்த தி ஃபேண்டம் – 1996
 5. ரையான் கார்னெஸ் நடித்த தி ஃபேண்டம் – 2009
மேலுள்ள ஐந்து படங்களுள், 1996ல் பில்லி ஸேன் நடித்து வெளிவந்த ஃபேண்டம் படம் தவிர மற்ற அனைத்தும் டிவி சீரியல்கள்.

இப்பொழுது ரையான் கார்னெஸ் நடித்த தி ஃபேண்டம் (2009) படத்தைப் பற்றி இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இது இரண்டு பாகங்களைக் கொண்ட டிவி சீரியல். இதில் சொல்லப்பட்டு இருக்கும் கதை, நமது 21ஃபேண்டம் இறந்து (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 1), அவருடைய மகனான 22-வது பேண்டம், கிட் வாக்கர், ஃபேண்டமாக பொறுப்பேற்பதை காட்டுகிற கதை.


கதை:

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் தன் சிறு மகனுடன் காரில் செல்கையில், பல கார்களால் விரட்டப்படுகிறார். துரத்தும் கார்கள், முன்னால் செல்லும் காரில் இருப்பது ஒரு பெண்ணும் குழந்தையும் என்று கூட பார்க்காமல் பேய் வேகத்தில் விரட்டி, இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள், வெகு தூர துரத்தலுக்குப் பின் கார் ஓட்டிவந்த பெண் நிலை தடுமாற கார் வேகமாக துறைமுகக் கடலுக்குள் பாய்கிறது. விரட்டி வந்த காரிலிருக்கும் நபர்கள், காரிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அந்த தகவலை அவர்களது தலைவனுக்கு போனில் தெரிவிக்கின்றான். கொலைக் கும்பல் அங்கிருந்து அகன்றதும், துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள், துறைமுக சுவற்றில் இடித்து சேதமாகிவிடாமல் இருக்க தொங்க விடப்பட்டு இருக்கும் பெரிய டயருக்குள் உயிர் தப்பிய சிறுவன் இருப்பதை கேமிரா காட்டுகிறது.

அடுத்து நாம் பார்ப்பது அந்த சிறுவன் க்ரிஸ் மூர் என்ற பெயரில் ஒரு தம்பதியினரால் வளர்க்கப் படுகிறான். க்ரிஸ் மூருக்கு தான் அனாதை என்ற விவரம் தெரியாது. அவன் அடிக்கடி பயங்கரமான, கார் தண்ணீருக்குள் பாய்வது போலவும், யாரோ துப்பாக்கியால் சுடுவது போலவும், ஒரு பெண்ணின் உருவமும் கொண்ட கனவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. அவையெல்லாம் வெறும் கனவுகள் என்று அவனது வளர்ப்புப் பெற்றோர்கள் கூறுகிறார்கள். க்ரிஸ்சும் அதை நம்புகிறான். க்ரிஸ் மூர்தான் 22-வது ஃபேண்டம் என்கிற உண்மை அவனுக்கும், அவனது வளர்ப்புப் பெற்றோருக்கும் தெரியாது.

க்ரிஸ் மூர், பார்கோர் (Parkour) என்னும் ஓட்டக் கலையில் தேர்ந்தவராக இருக்கிறார். பார்கோர் என்னும் வார்த்தையை இதுவரை கேட்டிராத நண்பர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பார்கோர் பிறந்த இடம் ஃப்ரான்ஸ் நாடு. பார்கோர் என்றால் ஃப்ரீ ரன்னிங், தமிழில் கட்டு தாண்டுதல் என்று அழைக்கின்றார்கள். இந்த பயிற்சியை கடைப்பிடிப்பவர்கள் சென்னையிலும் இருக்கின்றார்கள். இதை வைத்து பல ஆங்கில படங்கள் வெளிவந்திருக்கிறாது. இது சம்பந்தமாக ஒரு சிறந்த படம் இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் ”யாமகாசி” (Yamakasi) என்ற ஃப்ரெஞ்சு படம் (ஆங்கில சப்டைட்டில் உண்டு), பார்கோருக்கு சிறந்த படம் அது. அது தவிர பார்கோருக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டேனியல் க்ரேய்க் ஜேம்ஸ்பாண்ட்டாக நடித்த கேசினோ ராயல் துவக்க காட்சியில் ஒரு ஆப்ரிக்கரை துரத்திக் கொண்டு ஓடுவார். தமிழில் வெளிவந்த கே.வி. ஆனந்தின் “அயன்” படத்தில் சூர்யாவிடமிருந்து டைமண்ட்களை கவர்ந்து செல்லும் பல ஆப்ரிக்கர்களை துரத்திப் பிடிப்பரே அந்த முறையெல்லாமே பார்கோர் ஸ்டண்ட் மேன்கள் செய்ததுதான். நம்ம கேப்டன் கூட சுவரில் ஜாக்கிசான் போல ஒரு எத்து எத்தி எதிரிகளை பந்தடுவாரே அதன் பெயர் என்ன என்று நண்பர்கள் யாரும் கேட்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

உதாரணத்துக்கு இரண்டு யூடியூப் லிங்க் கொடுத்துள்ளேன்.
பார்கோர் முறையில் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. கரணம் தப்பினால் மரணம் என்ற சொல் வழக்கு தமிழில் உண்டு. குட்டிக் கரணம் போடும் போது தவறினால் மரணம் என்பதை நமது பெரியவர்கள் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள்!. உயிருக்கு உத்திரவாதமில்லாத இந்த ஆபத்தான விளையாட்டு தடை செய்யப்பட்ட ஒன்று.


நண்பனுடன் போட்டி போட்டு ஃப்ரீ ரன்னிங்கில் ஓடும் க்ரிஸ், பந்தயம் முழுக்க முன்னிலையிலேயெ இருக்கிறார். பந்தயத்தின் ஒரு கட்டத்தில், தொடர்ந்து வரும் நண்பன், உயரத்திலிந்து குதிக்கும் போது தவறி விழுந்து அடிபடுகிறது. விழுந்த இடத்திலிருந்து நண்பனால் எழுந்திருக்க முடியாத நிலையில் க்ரிஸ்சும் அங்கேயே நின்று விடுகிறார். ஆம்புலன்ஸ் வந்து அடிபட்ட நண்பனுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அதே நேரத்தில், ஆபத்தான விளையாட்டை விளையாடியதற்கும், தனியார் பேக்டரிக்குள் ட்ரஸ்பாஸிங் செய்ததற்கும் க்ரிஸ் கைது செய்யப்படுகிறார்.

போலிஸ் நிலையத்தில் க்ரிஸ்ஸை போட்டோ எடுத்து, ரத்த சாம்பிளும் எடுக்கிறார்கள். போலிஸ் துறையை சேர்ந்த டிடெக்டிவ், லாக்கப்பில் இருக்கும் க்ரிஸ்ஸை அழைத்துச் சென்று, பிறகு விடுவித்து விடுகிறார். க்ரிஸ்சின் நண்பனுக்கு முதல் உதவி செய்ய வந்த ஆம்புலன்சில் இருந்த ரென்னி டேவிட்சன், கிரிஸ்ஸுடன் பள்ளியில் ஒன்றாக படித்த பெண்.  ரென்னி டேவிட்சனின் தந்தைதான் தன்னை விடுவித்த போலிஸ் ஆபிஸர் என்பது க்ரிஸ்ஸுக்கு தெரிய வருகிறது. க்ரிஸ்ஸும், ரென்னியும் நெருக்கமாகிறார்கள்.


ஒரு நாள் இரவு நேரத்தில் ரென்னியை அவள் வீட்டில் விட்டு திரும்பும் போது, ஏபெல் என்பவரால் க்ரிஸ் கடத்தப் படுகிறார். க்ரிஸ்தான் கிட் வாக்கர் என்றும், அவர்தான் 22-வது ஃபேண்டம் என்றும், அவருடைய உண்மையான பெற்றோர், 21-வது ஃபேண்டமும், டாயானா வாக்கரும்தான் என்று ஏபெல் கூறுகிறார். மேலும் 21-வது பேண்டம் இறந்து 22 வருடங்கள் ஆகின்றது என்றும் (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 2), முதலாம் ஃபேண்டமினல் தோற்றுவிக்கப்பட்ட ஜங்கிள் பேட்ரோல் என்ற வனக்காவல் படை என்னும் குழுவை இன்று ஒரு உலகளாவிய பெரிய இயக்கமாக தான் உருவக்கியிருப்பதாகவும், அதன் தலைமையிடம் பென்கல்லா என்ற இந்தோனேஷிய தீவில் இருப்பதாகவும் ஏபெல் கூறுகிறார்.


சிங் ப்ரதர்ஹூட் எனப்படும் கடல் கொள்ளையர்கள் கும்பல் இன்று ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளந்திருக்கிறது என்றும், அவர்களே க்ரிஸ்ஸின் தாயாரான டயானா இறக்கக் காரணம் என்றும், 21-வது ஃபேண்டம் கேன்சரினால் இறந்ததாகவும், க்ரிஸ் தன்னுடன் வந்து அடுத்த ஃபேண்டமாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். க்ரிஸ் இவை அனைத்தும் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு செல்கிறார். வீட்டில், தன் பெற்றோரை தேடும் க்ரிஸ், அவர்கள் இருவரும் பாத் டப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்க்கிறார். கொலையாளிகள் க்ரிஸையும் தீர்த்துக் கட்ட முயலும் போது, அவர்களிடமிருந்து தப்பித்து செல்கிறார். க்ரிஸ்ஸை துரத்தும் இரு கொலையாளிகளில் ஒருவன் துரத்தும் முயற்சியில், க்ரிஸ்ஸால்  ஏற்படுத்தப்படும் விபத்தில் இறக்கிறான். ஏபெல்தான் ஆட்களை வைத்து தன் பெற்றோர்களை கொலை செய்தார் என்று நினைத்து, ஏபெல் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்று, ஜன்னல் வழியாக உள்ளே க்ரிஸ் நுழைய, சலனத்தினால் எச்சரிக்கையடைந்த ஏபெல், க்ரிஸ்ஸை மடக்குகிறார். பின் விஷயம் அறிந்து, கொலைகளுக்கு தான் காரணம் இல்லையென்றும், க்ரிஸ் இனியும் இங்கிருப்பது மிகவும் ஆபத்து என்றும் கூறி க்ரிஸ்ஸை தன்னுடன் பென்கல்லா வருமாறு கட்டாயமாக கூறுகிறார். வேறு வழியின்றி க்ரிஸ்ஸும் சம்மதிக்க, விமானம் பென்கல்லா செல்கிறது. அங்கே, க்ரிஸ் மண்டையோட்டு குகைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அங்கே க்ரிஸ்ஸுக்கு அனைத்து விதமான பயிற்சியும் தரப்படுகிறது. பயிற்சியின் முடிவில் க்ரிஸ்ஸுக்கு, இனி அவரை கிட் வாக்கர் என்று அழைக்கலாம். பயிற்சியின் முடிவில் வாக்கருக்கு புதிய குண்டு துளைக்காத ஃபேண்டமின் உடைகளை கொடுக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை ஃபேண்டமின் அந்த புதிய முகமூடி யூனிபார்ம். (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 3).


இதற்கிடையே சிங் ப்ரதர்ஹூட் & தொலைக்காட்சி கம்பெனி, டாக்டர் பெல்லா லிதியா என்ற பெண் ஆராய்ச்சியாளரின், புதிய விதமான, சாட்டிலைட் டிவி மூலம் மக்களை மூளைச் சலவை செய்து அவர்களை தாங்கள் விரும்பும் முறையில் கட்டுப்படுத்தி, தங்களின் சுவடே தெரியாத அளவுக்கு தங்களின் குற்ற நடைமுறைகளை செயல்படுத்திக் கொள்ளுகிறார்கள். இதில் பல கொலைகளும் அடக்கம். பல பேர் காரணமே இல்லாமல் இறப்பதிலும், கொலைகளை செய்வதினாலும் போலிஸ் எந்த துப்பும் கிடைக்காமல் திண்டாடுகிறது.

வாக்கரின் (அதாங்க க்ரிஸ்) காதலி ரென்னி, தன் தந்தையுடன் பேசி, க்ரிஸ் காணாமல் போனதை கண்டுபிடிக்க கேட்டுக் கொள்ள, அவரும் சம்மதிக்கிறார். ரென்னியின் தந்தையின் முயற்சியில் சில விஷயங்களை கண்டுபிடிக்க, அந்த விவரத்தை  டிவியில் வாக்கர் பார்க்கிறார். உடனே அவர் ஏபெலிடம் சென்று தன் நண்பர்களுக்கு சிங் பிரதர்ஹுட்டினால் ஆபத்து என்றும், அவர்களை காப்பாற்ற தான் நியூயார்க் செல்ல வேண்டும் என்றும் கேட்கிறார். இதற்கு ஏபெல் மறுத்துவிடுகிறார். மண்டையோட்டு குகையில் இருந்து வெறுப்புடன் வெளியேறும் வாக்கரை அங்கு மறைந்திருக்கும் ஆதிவாசி கும்பல் பிடித்து கீழே தள்ளி, சூழ்ந்து கொக்கரிக்கின்றனர். எழ முயற்சிக்கும் வாக்கரிடம், ஆதிவாசிகளின் தலைவன், அவன் கையை நீட்டி எரியும் நெருப்பை சுட்டிக் காட்டுகிறான். எரியும் நெருப்பின் நடுவே, ஃபேண்டமின் மண்டையோட்டு முத்திரை மோதிரம் இருக்கிறது. வாக்கரும் எரியும் நெருப்பில் கையை நுழைத்து மண்டையோட்டு மோதிரத்தை எடுக்க, நெருப்பும், நெருப்புப் பிழம்பாக இருக்கும் மோதிரமும், வாக்கருடைய கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


ஏபெலுக்குத் தெரியாமல், ஏபெலின் உதவியாளரின் உதவியோடு, வாக்கர் பென்கல்லாவை விட்டு நியூயார்க் செல்கிறார். அங்கே ரென்னியின் தந்தையை சாலையில் பார்த்து, அவருக்கு ஆபத்திருப்பதாக எச்சரிக்கை செய்யும் நேரத்தில், ரென்னியின் தந்தையை அவரது தந்தையின் இன்னொரு நெருங்கிய நண்பரான போலிஸ் ஆபிசர், சிங் பிரதர்ஹுட்டினால் மூளை கண்ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், ரென்னியின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தலையில் சுட்டுக் கொண்டு இறக்கிறான். குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தந்தைக்கு முதலுதவி செய்ய ரென்னியே வர நேரிடுகிறது. ரென்னியின் தந்தை பிழைத்தாலும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையின் எதிர் கட்டிடத்தில் ஒருவன் ரென்னியையும், அவர் தந்தையையும் கொல்ல டெலஸ்கோப் துப்பாக்கியினால் குறிபார்க்கும் நேரத்தில் அங்கே ஃபேண்டம் தோன்றுகிறார். கொலையாளி கட்டிடத்தின் மேல் இருந்து கீழே விழுந்து இறக்கிறான். ஃபேண்டம் ரென்னியிடம் பேசி, இங்கிருந்தால் ரென்னிக்கும், அவள் தந்தைக்கும் ஆபத்து என்று கூறி அவர்களை வனக்காவல் படையின் மூலம் பென்கல்லா அனுப்பிவிடுகிறார்.


இதன் பிறகு சிங் பிரதர்ஹூட்டினுடைய சாட்டலைட் கம்பெனியை ஃபேண்டம், ஏபெலின் உதவியொடு தரைமட்டமாக்குகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி உடன்படிக்கைக்காக வரும் ஒரு முக்கியமான நபரை கொல்ல சிங் பிரதர்ஹுட் திட்டத்தை சாதூர்யமாக முறியடிக்கிறார். கடைசியில் மண்டையோட்டுக் குகைக்கே வந்து சேர்ந்து, தன் காதலியுடன் இணைகிறார். கடைசி காட்சியில் ஏபெலின் உதவியாளரான பெண், அவர் தான் குரானாம் (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 4) ஃபேண்டமிடம் கூறுகிறார், “ஒவ்வொரு ஃபேண்டமின் முக்கியமான பல கடமைகளுள் ஒன்று, அடுத்த ஃபேண்டமிற்காக சந்ததியை உருவாக்குவதும் ஒன்று என்று.

நண்பர்களே ஃபேண்டம் ரசிகராக இருந்தால் ஒரு முறை இந்த டிவி படத்தை பார்த்துவிடுங்கள். ஒரு ஃபேண்டம் படம் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். அவெஞ்சர் படத்தில் ப்ரூஸ் பேன்னராக இருக்கும் நபர், ஹல்க்காக மாறி எதிரிகளை துவம்சம் செய்யும் போது நமது மனதில் ஒரு உற்சாக உணர்வு பீரிடும். அது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தும் சில காட்சிகள் இந்த ஃபேண்டம் படத்தில் இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை பில்லி ஸேன் நடித்து 1996-ல் வந்த தி ஃபேண்டம் படம் மிகச் சிறந்த படம். அதைப் பற்றிய பதிவை வேறு ஒரு சமயம் இடுகிறேன்.


இது ஒரு ஃபேண்டம் படம். ஆனால் இதில் இல்லாதவை லிஸ்ட் கீழே;
 1. ஆப்ரிக்காவின் ஆழநடுக்காடு
 2. வெள்ளைக் குதிரை கேசரி இல்லை.
 3. ஓநாய் வாலி இல்லை
 4. தனுஷ் சொல்வது போல பார்க்கப் பார்க்க கூட பிடிக்காத வேதனையை உண்டாக்கும் மண்டையோட்டு குகை. குகை அமைப்பையும் அதன் இருப்பிடத்தையும் பார்த்தால் நமது மனம் பேதலித்துவிடும். அவ்வளவு கொடுமை.
 5. வழக்கமான பேண்டம் உடைகளும், முகமூடியும் இல்லை
 6. விஷ அம்புடன் இருக்கும் பந்தர் குள்ளர்கள் இல்லை
 7. வம்பேசி இனத்தவராக காட்டப்பட்டு இருப்பவர்கள் கொடுமைக்கு கொடுமை சேர்க்கிற ரகம்.
 8. குரான் என்ற கேரக்டரை பெண்ணாக மாற்றியவர்களுக்கும், ஃபேண்டம் கதையின் அஸ்திவாரத்தையே கொத்து பரோட்டா போல ஆக்கியவர்களுக்கும், ஃபேண்டமைச் சார்ந்த எந்த விஷயங்களும் (மோதிரத்தைத் தவிர) இல்லாமல், ஃபேண்டம் படம் எடுத்தவர்களுக்கு   பாப விமோசனமே கிடையாது. இதுபோன்ற யோசனைகளின் சொந்தக்காரர்களுக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனை ஜென்மங்களும் அவர்கள் கரண்ட் என்பதே என்னவென்று தெரியாத இருண்ட கண்டத்தில் காட்டுவாசிகளாகத்தான் பிறப்பார்கள், அந்த இருண்ட கண்டத்தை விட்டு வெளியே போகாமல் அங்கேயே இருப்பார்கள். (நண்பர்களே இருண்ட கண்டம் என்று நான் இந்தியாவை சொல்லவில்லை). 


சிங் பிரதர்ஹுட்டைப் பற்றி சில வார்த்தைகள். ஃபேண்டம் கதைகளில், ஃபேண்டமின் முக்கிய எதிரியாக, கடற்கொள்ளையர்களாக காட்டப்படும் சிங் பிரதர்ஹுட்டின் தலைவன் ஒரு இந்திய சிங். நாம் என்னதான் ஃபேண்டம் காமிக்ஸ்களை விரும்பினாலும் அதில் ஒரு குறை இருக்கும். அந்த குறை ஃபேண்டம் காமிக்ஸில் மட்டும் அல்ல, அந்த சமயத்தில் வந்த மற்ற சில மேலை நாட்டு காமிக்ஸ்களிலும் இருக்கும். அது என்னவென்றால், மறைமுகமாக இழையோடும் நிறவெறிதான் அது. பல காமிக்ஸ்களில் பார்த்திருக்கின்றேன். ஒரு இந்தியரை சித்தரிப்பதென்றாலே அவரின் உருவம் கருப்பாகத்தான் சித்தரிக்கப்படும். ஏதோ ஒரு கதையில், ஒரு சீக்கியரைக் கூட டர்பன் கட்டிய கருப்பான நபராகத்தான் வரையப்பட்டிந்தது.

ஃபேண்டம் காமிக்ஸ் கதைகள் உருவான போது பென்கல்லா என்னும் அடர்ந்த கானகத்திலிருக்கும் ஊரை, இந்தியாவில் இருக்கும் பெங்கால் பிரதேசத்தை மனதில் வைத்து உருவாக்கம் செய்ததாக எப்போதோ படித்த ஞாபகம். பின் அது அடர்ந்த ஆப்ரிக்க கானகமாக காட்டப்பட்டது. ஃபேண்டம் இந்தியாவில் இருந்தால் கடற்கொள்ளையனாக ஒரு சிங் காட்டப்படுவது பொருத்தமானதே. இந்த படத்தில் வில்லன் ரதிப் சிங்காக, காஸ் அன்வர் என்ற கனடா நடிகர் நடித்திருக்கிறார். அப்புறம், இந்த பதிவிற்கு, ஃபேண்டம் தலையில் கை வைத்திருப்பது போன்ற படத்தை போட்டதற்கு காரணம், அவர் இந்த படத்தினைப் பார்த்தால், நம் கதையை இப்படி பண்ணிப்புட்டானுங்களே இந்த SyFy சேனல்காரனுங்க, என்று எண்ணி இப்படித்தான் உட்கார்ந்திருப்பார். இவனுங்க அத்தனை பேர் முகத்திலும், மண்டையோட்டு முத்திரையை போடாவிட்டால் என் பெயர் ஃபேண்டம் இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்பார்.அவ்வளவுதான் நண்பர்களே, இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட்டுகளாக இடுங்கள். கட்டாயம் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தயாரிப்பாளர்களை மட்டும் திட்டும் உங்கள் கமெண்ட்டுகளையும் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.


அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

Tuesday, 21 August 2012

MY NAME IS MODESTY


மாடஸ்டி ப்ளைஸியை நம் அனைவருக்கும் தெரியும். பீட்டர் ஓ டோனல் மற்றும் ஜிம் ஹோல்டவே என்ற இருவரும் இணைந்து 1963-ம் வருடம் உருவாக்கிய காமிக்ஸ் கேரக்டரே மாடஸ்டி ப்ளைஸி. மாடஸ்டி ப்ளைஸி கதைகளை உருவாக்கியவர் பீட்டர் ஓ டோனல், அந்த கேரக்டருக்கு ஓவியங்களின் வாயிலாக உயிர் கொடுத்தவர் ஜிம் ஹோல்டவே. மாடஸ்டி ப்ளைஸி காமிக்ஸ் டெய்லி ஸ்ட்ரிப்பாக தினசரி பேப்பர்களில் வந்தது.


மாடஸ்டி ப்ளைஸி, ஒரு முன்னாள் குற்றவாளி. நிழல் உலக பெண் தாதாவாக இருந்து பிறகு மனம் திருந்தி ஒரு பெண் உளவாளியாக உருமாறுகிறார். அதாவது ஆரம்பத்தில் ANTI HEROINE, ANTI HERO கேரக்டர்கள், பின்னாளில் HEROINE & HERO.  காமிக்ஸ் உலகில் மாடஸ்டி ப்ளைஸி காமிக்ஸ் கதைகள் 1963-ல் இருந்து 2002-வரை 40 வருடங்களாக வெளிவந்தது. காமிக்ஸ் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் பிரபலமான பல காமிக்ஸ் பைனரி நட்சத்திரங்களின் நடுவே மாடஸ்டி ப்ளைஸியும், வில்லி கார்வினும் பளிச்சென மின்னுகின்ற ஒரு *பைனரி ஸ்டார் ஸிஸ்டம். மாடஸ்டி ப்ளைஸிக்கு ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்கா இடம் உண்டு.

 

மாடஸ்டி ப்ளைஸி ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர். அவருக்கு பல காதலர்கள் என்று இருந்தாலும்  நிரந்தரமான காதலர் கிடையாது, ஆனால் நண்பர் உண்டு. மாடஸ்டியின் இதயத்தில் வேறு எந்தக் காதலருக்கும் கிடைக்காத உண்ணதமான நெருங்கிய இடம் வில்லி கார்வினுக்கு உண்டு. மாடஸ்டி ப்ளைஸிக்கும் வில்லி கார்வினுக்கும் இடையே நிலவும் நட்பானது அலாதியானது. மாடஸ்டி ப்ளைஸியுடன் வில்லி கார்வின் நெருக்கமாக இருப்பது, வில்லி கார்வினின் பெண் தோழிகளுக்கு பொறாமையை ஏற்படுத்தும் அதே சமயம் மாடஸ்டியின் ஆண் நண்பர்களுக்கும் கார்வினின் மேல் பொறாமை ஏற்படும். மாடஸ்டிக்கு கார்வின் ரைட் ஹேண்ட், கார்வினுக்கு மாடஸ்டி ரைட் ஹேண்ட். வழக்கமாக எல்லா கதைகளிலும், சினிமாக்களிலும் அது கோலிவுட் படமானாலும் சரி அல்லது ஹாலிவுட் படமானாலும் சரி, ஆண்களையே ஹீரோவாக சித்தரித்து எடுக்கப்படும் படங்களே அதிகம். ஒரு சில படங்களில் மட்டுமே பெண்ணுக்கு ஹிரோயினாக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. பெண்ணை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட கதையில் முதன்மையான கதை மாடஸ்டி ப்ளைஸியின் கதை. 

இதுவரை மாடஸ்டி ப்ளைஸியின் கதைகள் இருமுறை படமாக்கப் பட்டிருக்கிறது. முதல் முறை 1966-ம் வருடம் “மாடஸ்டி ப்ளைஸி” என்ற பெயரிலும், இரண்டாம் முறை 2004-ம் வருடம் பிரபல தயாரிப்பாளர் அண்ட் டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவின் தயாரிப்பில் “மை நேம் இஸ் மாடஸ்டி: எ மாடஸ்டி ப்ளைஸி அட்வெஞ்சர்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 2004-ம் வருடம் வெளிவந்த க்வேண்டின் டாரண்டினோவின் மாடஸ்டி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி மை நேம் இஸ் மாடஸ்டி படத்தைப் பற்றி கூறுகிறேன்.தென்கிழக்கு ஐரோப்பா ”பால்கன்” (BALKAN) என்று அழைக்கப்படுகிறது. இந்த பால்கன் பிரதேசம் பல கிழக்கு ஐரோபிய நாடுகளை உள்ளடக்கியது. கதை ஆரம்பிப்பது இந்த பால்கன் பிரதேசத்தின், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு இடத்தில். நான்கு போர் வீரர்கள் ரோந்து செல்லும் போது, வழியில் இருக்கும் போரினால் சிதிலமடைந்த பிரம்மாண்டமான கிரேக்க அரண்மனை போன்றிருக்கும் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவே அமர்ந்து உணவருந்துகின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவே ஒரு 10 வயது சிறுமி நிற்பதை பார்க்கின்றார்கள். கந்தலான உடையும், அழுக்கு நிறைந்த உருவமுமாக, பசியோடிருக்கும் சிறுமியை பார்த்து இரக்கமடைந்த ஒரு போர் வீரர், தன்னிடம் இருக்கும் சீலிடப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு டப்பாவை கொடுக்கிறார். அதை வாங்கிய சிறுமி, அந்த டப்பாவை அவளிடம் இருக்கும் கட்டையால் அடித்து திறக்க முயற்சி செய்கிறாள். இதைக் கண்டு போர் வீரர் அவரிடம் இருக்கும் டின் ஒப்பனரை சிறுமியிடம் கொடுக்கிறார். சிறுமி அதை வாங்கி, அந்த டின் ஓப்பனரை கொண்டு டின்னை அடித்து திறக்க முயற்சி செய்கிறார், பின் போர் வீரரே அந்த டின்னை ஓபன் செய்து தந்து விட்டு, தன் நண்பர்களை பார்க்க ஒரு நொடி திரும்புகிறார், அடுத்த கணம் அந்த சிறுமி காணாமல் போய்விடுகிறாள். அந்த இடிபாடுகளுக்கு நடுவே முழுக்க தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுவே மை நேம் இஸ்  மாடஸ்டி படத்தின் துவக்க காட்சி.
 
இதற்கடுத்து நாம் பார்ப்பது இளம் பெண்ணாக வளந்துவிட்ட மாடஸ்டி, ஒரு சூதாட்ட க்ளப்பில்  ரௌலட் சக்கரத்தின் முன் நிற்கிறார். ஒரு ரௌலட் ஆடும் நபர் அதிக அளவில் பணம் ஜெயித்தபடி இருக்கிறான், அந்த சமயத்தில் சூதாட்ட விடுதி நடத்துபவர், மாடஸ்டியை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்து, லேசாக தலையை அசைக்கிறார். உடனே மாடஸ்டி, ரௌலட் விளையாட்டை நடத்தத் துவங்குகிறார். மாடஸ்டி நடத்தத் துவங்கியதும், மாடஸ்டியின் சாதூர்யத்தினால் ரௌலட் ஆடும் நபர் அத்தனை பணத்தையும் கிளப்பிடம் தோற்றுப் போகிறான். கிளப் ஓனர், மேல் மாடியில் இருந்து மாடஸ்டியை பாராட்டும் விதமாக பார்க்கிறார்.
விடுதி மூடும் நேரம் வருகிறது.


கிளப் ஓனர், கிளப்பை விட்டு காரில் கிளம்புகிறார். வழியில் கிளப் ஓனரின் காரை சில கார்கள் வழிமறிக்கின்றன. கிளப் ஓனரின் டிரைவரே அவரைக் கொல்ல முயற்சிக்கின்றான். வழிமறித்த கார்களில் வந்த நபர்களினால் கிளப் ஓனர் கொல்லப்படுகிறார். கிளப் ஓனர் கொல்லப்படுவது மைக்லாஸ் என்ற தீவிரவாதியினால். மைக்லாஸுக்கும், நெட்வொர்க் தலைவனான க்ளப் ஓனருக்கும் இருக்கும் பழைய பகையே, க்ளப் ஓனர் கொல்லப்பட காரணம்.

க்ளப்பில் இருக்கும் மாடஸ்டியும் மற்ற ஊழியர்களும், கிளப்பை மூடும் வேலையில் மும்முரமாக இருக்கும் போது, க்ளப் ஓனரை கொலை செய்த மைக்லாஸ் கும்பல், கிளப்புக்குள் இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்து க்ளப்பை தங்கள் வசமாக்கிக் கொள்கின்றனர். கும்பலின் தலைவன், அங்கிருக்கும் ஊழியர் ஒருவரை பிடித்து கிளப்பின் இரும்புப் பெட்டியை எப்படி திறப்பது என்று கேட்டு, துன்புறுத்தி, அந்த ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துகிறான். நெட்வொர்க் குருப்பின் ஒரு பெரும் போதை மருந்து கடத்தலின் விளைவாக பெரும் பணம் க்ளப்பின் பெட்டகத்தில் இருக்கிறது. அதை கொள்ளை அடிப்பதே மைக்லாஸின் திட்டம்.

 
ஊழியரை காப்பாற்ற மாடஸ்டி தைரியமாக முன்னால் வந்து கும்பலின் தலைவனோடு பேசுகிறாள். கொள்ளை கும்பலின் தலைவனோ பணப் பெட்டகத்தை திறப்பதிலேயே மும்முரமாக பேசுகிறான். இரும்புப் பெட்டகத்தை திறக்கும் வழிமுறை இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும் என்றும், ஒருவர் க்ளப்பின் ஓனர், மற்றொருவர் க்ளப் ஓனரின் நம்பிக்கைக்கு பாத்திரமான, க்ளப்பின் முதன்மை ஊழியர் என்றும் கூறுகிறாள். ஓனர் கொல்லப்பட்டு விட்டதால், இப்போது அந்த முதன்மை ஊழியரால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும் என்றும், அந்த முதன்மை ஊழியரும் வெகுநேரம் முன்பே வீட்டுக்குச் சென்று விட்டார் என்றும், பாதுகாப்பு நடவடிக்கையாக, சூதாட்ட விடுதி முழுக்க சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைவாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் பெட்டகப் பூட்டின் அமைப்போடு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும், யாராவது பெட்டகத்தை உடைக்க முயற்சித்தாலோ அல்லது கம்ப்யூட்டரில் சரியான பாஸ்வேர்ட் கொடுக்காவிட்டாலோ, வெடிகுண்டுகள் வெடித்து, க்ளப் அமைந்திருக்கும் கட்டிடம் முழுக்க இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதறிவிடும் என்றும் கூறுகிறாள்.  கும்பலின் தலைவன் அனுமதித்தால், பூட்டை திறக்கும் ஊழியரை போன் மூலம் தொடர்பு கொண்டு க்ளப்புக்கு வரவைப்பதாகவும், க்ளப்பில் இருக்கும் ஊழியர்களை இதற்கு மேலும் துன்புறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறாள். கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும் இதற்கு சம்மதிக்கிறான்.

இப்போழுது, கொள்ளைக்கூட்ட தலைவன், மாடஸ்டியின் மேல் ஆர்வம் காட்டுகிறான். பெட்டகத்தை திறக்க வரும் ஊழியர் தொலைதூரத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகும் என்பதால், அதுவரை மைக்லாஸை தன்னுடன் ரௌலட் ஆட மாடஸ்டி சம்மதிக்க வைக்கிறாள். அதுவரை மாடஸ்டியின் கடந்த காலம் பற்றி யாருக்குமே தெரியாத நிலை இருப்பதால், அவளுடைய பூர்வீக கதையை மைக்லாஸ் கேட்கிறான். இதை தனக்கு சாதகமாக பயண்படுத்த மாடஸ்டி நினைக்கிறாள். இதன் விளைவாக மாடஸ்டிக்கும், கொள்ளைக் கூட்ட தலைவனுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்படுகிறது. அது கொள்ளைக் கூட்ட தலைவனும், மாடஸ்டியும் ரௌலட் கேம் ஆடவேண்டும். கொள்ளையர் தலைவன் ஜெயித்தால் மாடஸ்டி தன் பிறப்பின் ரகசியங்களை ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். அதே போல் மாடஸ்டி இரு முறை ஜெயித்தால், பிணைக் கைதியாக இருக்கும் க்ளப் ஊழியர்களில் ஒருவர் விடுவிக்கப் படவேண்டும். இதன்படி இருவருக்கும் இடையே ரௌலட் ஆட்டம் துவங்குகிறது.

கொள்ளைக் கூட்ட தலைவன் ஜெயிக்க, மாடஸ்டி தன் கதையை விவரிக்கின்றார். அந்த கதை, ஒரு அனாதை சிறுமி இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், மத்திய கிழக்குப் பகுதியில் பல நாடுகளில் சுற்றித்திரிகிறாள். இப்படி அலைந்திடும் சூழ்நிலையினால் அவளுக்கு எப்படிப்பட்ட கடினமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளிலும் உயிர் தப்பி வாழ்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்கிறாள். மாடஸ்டி ப்ளைஸியின் வாழ்கையின் துவக்க காலம் மிகவும் துன்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

அடுத்து நாம் சிறுமியை பார்ப்பது ஒரு அகதி முகாமில். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு முகாமில் இருந்து மாடஸ்டி ப்ளைஸியின் வாழ்க்கை துவங்குகிறது. அவளுக்கு, சமீபத்திய நினைவுகளைத்தவிர வேறு எந்த வாழ்க்கை சம்பவங்களும் நினைவில் இல்லை. சமயம் பார்த்து முகாமில் காவலுக்கு இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவை திருடி உண்பதில் திறமைசாலியாக இருக்கிறாள். அதுபோல் ஒரு நாள் ராணுவ வீரர்களின் உணவை திருடி வந்து ஒரு ஓரமாக அமர்ந்து நிதானமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, முகாமிலிருக்கும் சில வளர்ந்த சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு வயதான மனிதரை தாக்கி அவரது கைப்பையை அபகரிக்கப் பார்க்கின்றனர். அதைப் பார்க்கும் மாடஸ்டி, அந்த வயதானவரை, சிறுவர்களுடன் போரிட்டு காப்பாற்றுகிறாள். இந்த கைகலப்பில் ஒருவன் கத்தியால் மாடஸ்டியைக் கொல்ல முயற்சிக்கையில், மாடஸ்டி விலக அவர்களுள் ஒருவனே கத்தியால் குத்துப்பட்டு இறக்கின்றான். காவலுக்கு இருக்கும் ராணுவ வீரர்கள் மாடஸ்டியையும், வயதானவரையும் பிடிக்க துரத்துகின்றனர். இருவரும் தப்பி ஓடுகின்றனர். மாடஸ்டி பெரியவரை தப்பிக்க வைத்து ஒரு மறைவான புதருக்குள் இருவரும் ஒளிந்து கொள்கின்றனர். ராணுவ ஜீப்பில் இவர்களை தேடி வரும் வீரர்கள், வாகனத்தை விட்டு இறங்கி சிறுமியையும், பெரியவரையும் தேடுவதற்காக ஜீப்பை விட்டு சற்று தள்ளி செல்லும் போது, சிறுமியும், அந்த பெரியவரும் ஜீப்பில் ஏறி தப்பித்து செல்கிறார்கள். அகதி முகாமை விட்டு வெகுதூரம் சென்ற பிறகு, ஜீப்பை ரோட்டிலேயே விட்டு விட்டு தங்களது பயணத்தை தொடர்கின்றனர். பின்னர் இரவானதும் இருவரும், போரினால் பாதிக்கப்பட்ட, ஆளரவமற்ற மறைவான இடத்தில் இரவைக் கழிக்கின்றனர்.

அந்த வயதானவர் ஒரு யூதர். அவர் பெயர் லோப். லோப் ஒரு பேராசிரியர் மற்றும் நிறைய படித்த அறிஞர். அரசாங்கத்துக்கு எதிரான சில உண்மைகளை மக்களிடம் வெளிப்படுத்திய காரணத்தால், சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின் சிறைக் காவலாளிகள் இருவரை கொன்றுவிட்டு தான் சிறையில் இருந்து தப்பி வந்ததாகவும் சொல்கிறார். சிறுமி அவரிடம் ”அந்த சிறுவர்கள் உங்கள் கைப்பையை ஏன் பறித்தனர், அப்படி என்ன அதில் மதிப்பு மிக்க பொருட்கள் இருக்கிறது” என்று கேட்கிறார். அதற்கு லோப், அந்த சிறுவர்கள் தனது பையில் ஏதேனும் பணம் இருக்கும் என்று நினைத்து அதை பறிக்க முயற்சித்தனர் என்று கூறுகிறார். உங்கள் பையில் பணம் இருக்கின்றதா என்று சிறுமி கேட்ட கேள்விக்கு பதிலாக, லோப் தனது பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுக்கிறார். அந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ் மிக்க மன்னர் ஆர்தரைப் பற்றியது என்றும் கூறுகிறார். சிறுமி மாடஸ்டிக்கு அந்த புத்தகத்தில் எந்த ஆர்வமும் எற்படவில்லை. அந்த புத்தகத்தில் இருப்பது ஒரு அருமையான உண்மைக் கதை என்று சிறுமி மாடஸ்டியின் ஆர்வத்தை தூண்டும் விதமாக சொல்லிவிட்டு லோப் தூங்கிவிடுகிறார். லோப் தூங்கிய பிறகு சிறுமி மாடஸ்டி அந்த புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்க்கிறாள். இதை தூங்குவது போல் இருக்கும் பெரியவர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

பிறகு லோப், மாடஸ்டிக்கு அனைத்து தற்காப்புக் கலைகளையும், வேட்டையாடவும், ரௌலட் போன்ற சூதாட்ட விளையாட்டுக்களையும், பல மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுத்தருகிறார். இருவரும் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.


ஒரு நாள், லோப், மாடஸ்டியிடம் சொல்கிறார், ”நாம் ஊர் ஊராக செல்வதற்கு பதில் அடுத்து ஏதேனும் ஒரு ஊரில் நிரந்தரமாக தங்கிவிடலாம், ஆனால் அதற்கு நமக்கு பாஸ்போர்ட் வேண்டும். அப்படி பாஸ்போர்ட் வேண்டும் என்றால் உனக்கு ஒரு பெயர் வேண்டு. அதற்கு என்ன செய்ய போகிறாய், என்று கேட்க ஏற்கெனவே என் பெயர் மாடஸ்டி என்று கூறுகிறாள். அப்படியென்றால் விண்ணப்ப படிவத்தில் உள்ள செகண்ட் நேம் என்ற இடத்தில் நிரப்ப, உனக்கு செகண்ட் நேம் வேண்டும், அதற்கு என்ன செய்ய போகிறாய் என்று லோப் கேட்கிறார். உடனே மாடஸ்டி, லோப் தன்னை தன் மகள் போல பார்த்துக் கொண்டதால் அவருடைய செகண்ட் நேமையே தன்னுடைய செகண்ட் நேமாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறும் போது, செகண்ட் நேம் என்பது உன்னைப்பற்றி நீ சொல்லும் விதத்தில் நீயே தேர்ந்தெடுக்க வேண்டும், சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை நன்கு ஆலோசித்து தேர்ந்தெடு என்று சொல்கிறார். சற்று நேரம் யோசித்த பின் என் செகண்ட் நேம் ப்ளைஸி என்று  மாடஸ்டி சொல்கிறாள். ப்ளைசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தாய் என லோப் வினவ, கிங் ஆர்தரின் கதை புத்தகத்தில் இருந்து அந்த பெயரை எடுத்ததாகவும், அந்த கதையில் வரும் மந்திரவாதி மெர்லினினுக்கு மந்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்த குருவின் பெயர் ப்ளைசி, எனவே அந்த பெயரையே தன்னுடைய செகண்ட் நேம் ஆக வைத்துக் கொண்டதாகவும் சொல்கிறாள். இதற்கடுத்து இவர்களின் பயணத்தில், இரண்டு படைப் பிரிவினரின் இடையே நடக்கும் கடும் சண்டையின் நடுவே இருவரும் மாட்டிக் கொள்ள, அங்கு ஏற்படும் குண்டு வெடிப்பில் லோப் இறக்கிறார்.

பாலைவனத்தின் வழியே பயணம் செய்யும் மாடஸ்டி அடுத்து போகும் ஊரில் பசி கொடுமை தாளாமல், மார்கெட்டில் பழத்தை திருட முயற்சித்து தோல்வி அடைகிறார். ஆனால் பிக்பாக்கெட் அடிப்பதன் மூலம் ஒரு மணிபர்ஸ் கிடைக்கிறது. இதனை அங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதர் பார்த்து, திருடுவது தவறு, என்று அறிவுரை கூறி சாப்பிட உணவு வாங்கித் தருகிறார். உழைத்து சம்பாதிக்கும் மனதிருந்தால் மாடஸ்டிக்கு தன் க்ளப்பிலேயே வேலை தருவதாக கூறுகிறார். இதற்கு பிறகு அந்த நபரின் சூதாட்ட விடுதியில் மாடஸ்டிக்கு வேலை கிடைக்கிறது. சூதாட்ட க்ளப்பின் தலைவர் தான் நெட்வொர்க் குருப்பிற்கும் தலைவர்.

சூதாட்ட க்ளப் ஓனர் ஏன் கொல்லப் படுகிறார் ?
கொள்ளைக் கூட்ட தலைவனுக்கும் க்ளப் ஓனருக்கும் விரோதம் ஏற்பட்டதன் காரணம் என்ன?
பெட்டகத்தை திறப்பதற்காக வரும் க்ளப்பின் முதன்மை ஊழியர் வந்தாரா?
கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து மாடஸ்டியும் மற்ற க்ளப் ஊழியர்களும் எப்படி தப்பிக்கின்றனர்?
படத்தின் முடிவில்,கொள்ளைக் கூட்டத் தலைவனிடம் மாடஸ்டி ஏன் நன்றி சொல்கிறார்?

இந்த கேள்விகளுக்கு விடை காண நீங்களும் இந்த படத்தை பாருங்கள். ஏற்கெனவே பார்த்திருந்தால், இந்த பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களை கமெண்ட்டுகளாக இடுங்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் இன்னும் சில விஷயங்கள் நான் சொல்ல வேண்டியது இருக்கிறது.

இந்த படத்தின் அட்டையில் க்வேண்டின் டாரண்டினோவின் “மை நேம் இஸ் மாடஸ்டி ப்ளைஸி என்று போட்டிருந்தாலும், க்வேண்டின் டாரண்டினோவிற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு, படச்சுருள் பெட்டியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.


டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு மாடஸ்டி ப்ளைசி காமிக்ஸ் கதைகளின் அதிதீவிர ரசிகர். மாடஸ்டி கேரக்டர் மீது அவருக்கு எப்போதும் அதீதமான பிரியம். நெடுநாட்களாக, அவர் மாடஸ்டி கதையை படமாக தயாரிப்பதற்கு திட்டம் வைத்திருந்தார். அதற்காக மாடஸ்டி காமிக்ஸ் மற்றும் நாவல் புத்தக கேரக்டர்களின் திரை உரிமைகளை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அவரால் படமாக்க முடியவில்லை. அதனால் இந்த படம் தயாரிக்க உரிமைகளை கொடுத்தார். அதனால் மட்டுமே அவரது பெயர் படத்துடன் சேர்த்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. நேரடியாக டிவிடி படமாகவே வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இங்கு என்னுடைய இரண்டு ஊகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

ஊகம் ஒன்று: டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு மாடஸ்டி கதைகளின் மேல் தீவிர ஆர்வம் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால் அவரின் அந்த கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அவரது டைரக்‌ஷனில் வெளிவந்த கில் பில் படத்தை பார்க்கும் வாய்ப்பு உங்களில் பல பேருக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மாடஸ்டியின் கதைகளே அவருக்கு கில் பில் கதையை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கில் பில் படத்தில் ஹீரோவே கிடையாது. ஹீரோயின் மட்டும் தான்.


நடிகை உமா துர்மன் தான் கில் பில் படத்தின் முதன்மை கேரக்டர். மாடஸ்டி ப்ளைசி கேரக்டருக்கு உமா துர்மன் சிறந்த தேர்வாக இருப்பார் என்றே நினைக்கின்றேன். கில் பில் படத்தில் உமா துர்மேன் கேரக்டர், படம் முழுக்க உபயோகிக்கும் ஆயுதம் ஒரு சாமுராய் வாள். மாடஸ்டியும் பெரும்பாலும் துப்பாக்கி தவிர்த்த மற்ற ஆயுதங்களையே பெரும்பாலும் உபயோகிப்பார்.

  
கில் பில் படத்தில் இரண்டாம் பாக முடிவில் ”பில்” கேரக்டர் பேசும் வசனத்தில் காமிக்ஸ் கேரக்டர்களை உமா துர்மன் கேரக்டரோடு ஒப்பிட்டு ஒரு நீண்ட ஒரு விளக்கம் அளிப்பார். அந்த வசனத்தை கவனித்தாலே டாரண்டினோவிற்கு காமிக்ஸ் மேல் உள்ள காதல் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். நண்பர்கள் யாரேனும் அந்த வசனத்தை கவனித்திருந்தால், உங்கள் அனைவரிடமிருந்தும் அதைப் பற்றிய கமெண்டுகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஊகம் இரண்டு: டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு கில் பில் படத்தை எடுக்க இன்ஸ்பிரேஷனாக மாடஸ்டி இருந்திருக்க வாய்ப்பு இருப்பதை பார்த்தோம். இப்போது பீட்டர் ஓ டொனல் மாடஸ்டி ப்ளைஸி கேரக்டரை உருவாக்குவதற்கு எது இன்ஸ்பிரேஷனாக இருந்து இருக்கும்?

இது பற்றிய எனது கருத்துக்களை ஊகம் என்று சொல்லாமல் ஆனித்தரமாக இதுதான் என்று தைரியமாக சொல்லப் போகிறேன். ஏனெனில் அதற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவதாலேயே இந்த தைரியமான டயலாக்!.


கிங் ஆர்தரின் கதையே பீட்டர் ஓ டோனலுக்கு மாடஸ்டி கேரக்டரை உருவாக்க இன்ஸ்பிரேஷன். இப்போது கிங் ஆர்தரின் கதையை உங்களுக்காக சுருக்கமாக சொல்வதற்கு முயற்சி செய்கிறேன்.

கிங் ஆர்தரின் கதை
இங்கிலாந்தின் வரலாற்றில் மூன்று விஷயங்களுக்கு என்றுமே நிரந்தர இடம் உண்டு. ஒன்று, எக்ஸ்கேலிபர் என்றழைக்கப்படும் மந்திர சக்தி வாய்ந்த வலிமையான நீண்ட வாள்.


இரண்டு, மந்திரவாதி மெர்லின்,


மூன்று, கிங் ஆர்தர்.


இப்போது கதைக்கு செல்வோம்.

இங்கிலாந்தை ஆண்ட ஒரு மன்னனுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாமல் போகிறது. அந்த மன்னன் இறக்கும் தருவாயில், அடுத்த வாரிசை கண்டுபிடிப்பதற்காக ஒரு ஏற்பாட்டினை செய்கிறான். அது, கொல்லன் பட்டறையில் இரும்பு அடிக்கும் ஒரு பெரிய மேஜையின் நடுவே ஒரு பெரிய நீண்ட வாள், அதன் பாதி மட்டுமே வெளியில் தெரியும் அளவிற்கு சொருகப்பட்டு இருக்கிறது. வாளுடன் உள்ள அந்த இரும்பு அடிக்கும் மேஜையை நகரின் நடுவே ஒரு மேடையை கட்டி அதன் மேல் வைத்துவிடுகிறான். அந்த வாளை, இரும்பு மேஜையில் இருந்து யார் உருவி எடுக்கின்றாரோ அவரே இங்கிலாந்து தேசத்தின் அடுத்த மன்னர் என்று ஊர் முழுதும் தெரிவிக்கப்படுகிறது. வாரிசு இல்லாத போது, மக்களிடையே இருந்து அரசாள்வதற்கு இது போன்ற முறை நமது நாட்டிலும் உண்டு. அது பட்டத்து யானையிடம் ஒரு மாலை கொடுத்து, யானை யார் கழுத்தில் மாலையை போடுகிறதோ, அந்த நபரே மன்னராக தேர்வு செய்யப்படுவார். சரஸ்வதி சபதம் என்ற தமிழ் திரைப்படத்தில் இந்த காட்சியும், ”யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி” என்ற பாடலும் உண்டு. சென்ற வருடம் வெளிவந்த THOR ஆங்கில படத்தை பார்த்தீர்களா, அதில் தார் சுத்தியல் ஒரு பள்ளத்தின் நடுவே இருக்கும், அதை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று முயற்சி செய்வார்களே, அதுபோல மன்னராகும் ஆசையில், இங்கிலாந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த மேஜையில் இருக்கும் கத்தியை எடுக்க முயற்சி செய்கிறார்கள். கத்தி துளியும் அசையவில்லை. பல மாத முயற்சியில் யாராலும் கத்தியை எடுக்க முடியாததால், அந்த இரும்பு மேஜையும், கத்தியும் தனித்தனி அல்ல, இரண்டுமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவை, அந்த மேஜையில் இருந்து கத்தியை எந்த நாளிலும் எடுக்க முடியாது என்று விட்டு விடுகிறார்கள்.

மந்திரவாதி மெர்லின், தனது ஒரு பயணத்தின் போது, அனாதை சிறுவனான ஆர்தரை சந்திக்கிறார். மெர்லினின் சக்தியால் அந்த சிறுவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. ஆர்தரை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆர்தரும், மெர்லினை தன் குருவாக ஏற்கிறார்.


பின் ஆர்தரை, கத்தி சொருகியுள்ள இரும்பு மேஜை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, மேஜையில் உள்ள கத்தியை எடுக்க சொல்கிறார், அதற்கு ஆர்தர், அது சாத்தியம் இல்லை என்றும், இதுவரை பெரிய பராக்கிரமசாலிகளாலும் அந்த கத்தியை எடுக்க முடியவில்லை என்றும், தன்னாலும் அந்த கத்தியை எடுக்க முடியாது என்று கூறுகிறான். யாருக்கு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடும் பாக்கியம் இருக்கிறதோ அந்த ஒருவனாலேயே இந்த வாளை, மேஜையில் இருந்து உருவி எடுக்க முடியும். இதுவரை அந்த கத்தியை எடுக்க முயற்சி செய்த அனைவருக்கும் மன்னராகும் வாய்ப்பு இல்லாததால், கத்தி அசைந்து கொடுக்கவில்லை. கத்தியும் மேஜையும் தனித்தனி என்று எண்ணியவாறு கத்தியை எடுத்தால் வரும், நம்பிக்கைதான் முக்கியம் என்று சொல்கிறார். ஆர்தரும் அவ்வாறே முயற்சி செய்ய, இரும்பு மேஜையில் இருக்கும் கத்தி, வெண்ணையில் சொருகப்பட்ட கத்தி போல வெளிவருகிறது. அனாதை ஆர்தர், அரசன் ஆர்தர் ஆகிறான்.


மெர்லின், ஆர்தருக்கு அனைத்து திறன்களையும் கற்றுத்தந்து, இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய தண்ணீர் ஏரியின் உள்ளே இருக்கும் ஒரு தேவதையிடம் (LADY OF THE LAKE) இருக்கும் எக்ஸ்கேலிபர் வாளை ஆர்தர் பெற வைத்தார்.


ஹோலி க்ரெய்ல் என்ற ஒரு கிண்ணத்தைப் பற்றி பல கதைகள் நிலவுகிறது. இறைதூதர் இயேசு கிறிஸ்து, லாஸ்ட் சப்பர் என்னும் அவருடைய கடைசியான விருந்தில், இந்த ஹோலி க்ரேய்லில் தான் ஒயின் அருந்தினார் என்றும், இயெசு சிலுவையில் அறையப்பட்ட போது இந்த கிண்ணத்தில் அவருடைய ரத்தம் சேகரிக்கப்பட்டது என்றும், பல கதைகள் உலகில் உலாவுகிறது. அந்த ஹோலி க்ரேய்லின் பாதுகாவலராக கிங் ஆர்தரே சித்தரிக்கப்படுகிறார். மெர்லினின் துணையோடு, கிங் ஆர்தர் பல நாடுகளை வென்று, துண்டு துண்டாக சிதறி இருந்த இங்கிலாந்தை யுனைடட் இங்கிலாந்தாக ஒன்றினைக்கிறார். இன்றளவும் இங்கிலாந்தின் பெயர் யுனைடட் கிங்டம், யு.கே.


இந்த கிங் ஆர்தர் ஒரு அனாதை. மாடஸ்டியும் ஒரு அனாதை. கிங் ஆர்தரின் கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றி, தற்போதய வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி கதைகளை உருவாக்கியிருக்கிறார் பீட்டர் ஓ’டோனல். மந்திரவாதி மெர்லினே புரெபஸர் லோப். மாடஸ்டியும் அனாதையாக இருந்து புரபஸர் லோப்பின் ட்ரெயினிங்கில் அனைத்து தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்கிறார். விதிவசத்தினால் நெட்வொர்க் குரூப்பிற்கு தலைவி ஆகிறார்.


மேலும் வில்லி மாடஸ்டியை அழைப்பது இளவரசி என்றுதான். அனாதை சிறுமி மாடஸ்டியின் கையில், புரபஸர் லோப் கொடுக்கும் புத்தகம் கிங் ஆர்தரைப் பற்றியது. மாடஸ்டி தன் செகண்ட் நேம் ஆக தேர்ந்தெடுக்கும் பெயர், மந்திரவாதி மெர்லினின் குருவின் பெயரான ப்ளைஸி என்பதையே. இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஏதோ ஒரு மாடஸ்டி காமிக்ஸில் கூட மந்திரவாதி மெர்லினின் சிலையை கண்டுபிடிக்கும் ஒரு கதை வந்ததாக ஞாபகம். அது மாடஸ்டி கதையா, அல்லது வேறு யாரோ ஒருவருடைய கதையா, முத்துவில் வந்ததா அல்லது ராணி காமிக்ஸில் வந்ததா என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. நண்பர்கள் யாருக்கேனும் நினைவிலிருந்தால் தெரிவியுங்களேன்.    

கில் பில் உமா துர்மேனின் கேரக்டரோடு மாடஸ்டியை ஒப்பிட்டதும், கிங் ஆர்தரோடு ஒப்பிட்டதும் முழுக்க முழுக்க என்னுடைய சொந்த எண்ணங்களே. இந்த எண்ணங்களை எந்த வலைத்தளத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை.

மை நேம் இஸ் மாடஸ்டி படம், மாடஸ்டியின் ஆரம்ப கால வாழ்கையும், மாடஸ்டி எப்படி நெட்வொர்க் குருப்பிற்கு தலைவியாக ஆனார் என்பதையுமே. அதனால் இந்த படத்தில் வில்லி கார்வின் கிடையாது. இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் டைப் படம்; அதனால் அதிக ஆக்‌ஷன் காட்சிகளை இந்தப் படத்தில் எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் கொஞ்சமேனும் மாடஸ்டி கதைகளை ரசித்திருந்தால், தவறாது இந்த படத்தை பார்த்துவிடுங்கள். இந்த திரைப்படம் மாடஸ்டி ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தி தரும்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

Sunday, 5 August 2012

கற்றோருக்கு “செல்”லும் இடமெல்லாம் 

சிறப்பு


நண்பர்களே வணக்கம், 

சென்ற பதிவிற்கும், இந்த பதிவிற்கும் 20 நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது. 

இன்று காலையில் எழுந்த உடன் நண்பர் திரு ஈரோடு ஸ்டாலின் அவர்களின் பின்னூட்டத்தினை பார்த்தேன். 
“என்ன பல நாட்களாக பதிவுகளை காணவில்லை?” என்று கேட்டிருந்தார். அதனால் உடனே உட்கார்ந்து இந்த பதிவை உருவாக்கினேன். இந்த பதிவிற்கு ஈரோட்டாரின் பின்னூட்டமே தூண்டுதலாக இருந்தது.

அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நேரில் வந்து நட்பு பட்டையை கட்டியவர்களுக்கும், கொரியரில் அனுப்பியவர்களுக்கும், குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும், நட்பை இன்று மட்டும் நினைவில் வைத்தும், நட்பை நினைவுச் சின்னமாக ஆக்கியவர்களுக்கும் எனது இதய பூர்வமான நட்போடு நன்றி சொல்கிறேன். இந்த பதிவின் கருத்துக்கு செல்வதற்கு முன், நட்பைப் பற்றி சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

நட்பு என்பது இருவழி தொடர்பு. இந்த இருவழியில் ஒருவருக்கு வழி மறந்தாலும் நட்பு நிலைக்காது. நட்பை நினைக்காமல், நண்பனுக்காக தினமுமோ அல்லது வாரத்திலோ ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்யாமல், வருடத்திற்கு ஒரு நாள் நட்புக்காக நண்பர் தினம் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

உண்மையான நட்பென்பது, உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு என்ற வள்ளுவர் வாக்கின் படி இருக்கின்ற நட்பே சிறந்த உண்மையான நட்பு.

சில சமயங்களில் பதிவுகளும் பதிவிடும் தினங்களுக்கும் பொருத்தம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது. இந்த பதிவிற்கும், நண்பர்கள் தினத்திற்கும் உள்ள பொருத்தம் செல்போன் கருவியே.

செல்போன் வந்த பின்பு, நண்பர்களுக்கு இடையே இருந்த இடைவெளி நீங்கி விட்டது. முன்பெல்லாம் பால்ய காலத்து நண்பர்களை பார்க்க வேண்டும் என்றால், சைக்கிளை சேரன் போல மிதித்து ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்று பாடிக் கொண்டே செல்ல வேண்டும். 

இன்று பள்ளியில் படிக்கும்போதே குழந்தைகள் கையில் செல்போன் கிடைத்து விடுகிறது. அதனால் பள்ளியில் படிக்கும்போது இருக்கும் நண்பர்களின் தொடர்பை விட்டுப் போகாமல் காக்க செல்போன் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்து விட்டது.

நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல நல்ல நட்பு என்றும்  கெட்ட நட்பு என்றும் இருக்கிறது. கூடா நட்பினால் பல குழந்தை, இளைஞர், இளைஞிகளின் வாழ்க்கையே திசை மாறி விடுகிறது. பல குடும்பங்கள் சிதைகிறது. எனவே அனைவரும் இந்த செல்போனை மிகுந்த கவனத்துடன் கையாள்வது நல்லது. வேண்டாத ஒரு நபரை நாம் நம் வீட்டு வாசலிலேயே தடுத்து துரத்தி விடலாம். ஆனால் செல்போனின் மூலமாக வரும் ஒரு வேண்டாத நட்பு, நமக்குத் தெரியாமல் குழந்தைகளின் வாழ்கையை பாழ் படுத்திவிடும்.

சரி இனி விஷயத்திற்கு வருகிறேன்.

வலைப் பூக்களின் அறிமுகம் ஏற்பட்ட பிறகு, அந்த வலை பூக்களில் பின்னூட்ட்ம் இடவேண்டும் என்றால் ஒரு தமிழ் மென்பொருள் கருவி வேண்டும். அதே பின்னூட்டத்தை செல் போனின் மூலமாக அடிக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் தான் அடிக்க வேண்டும். நிறைய பேர்கள் வலை பூக்களில் தங்கிலீஷில் பின்னூட்டம் இட்டிருப்பதை கண்டிருக்கிறேன், நானும் இதற்கு விதி விலக்கல்ல. 

எனது செல் போனுக்கு ஒரு நல்ல தமிழ் மென்பொருளை நீண்ட நாட்களாக தேடிவந்தேன். பல தமிழ் கருவிகள் கிடைத்தாலும், எதுவுமே சிக்கல் இல்லாமல் இல்லை. என் தேடலில் கிடைத்த ஒரு மென் பொருள் “செல்லினம்”. என்னுடைய சென்ற பதிவில் முரசுவைப் பற்றி எழுதி இருந்தாலும், அப்போது இந்த மென்பொருளை நான் அறியவில்லை.

முரசு அஞ்சல் குழுவின் செல்போனுக்கான தமிழ் தட்டச்சு மென்பொருள் செல்லினம். இந்த மென்பொருள், ஆப்பிள் ஐபோனுக்கும், HTC கம்பெனியின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் இயங்கும் போன்களுக்குமான அப்ளிகேஷன். இது ஒரு இலவச மென்பொருள்.

செல்லினத்தின் வெப்சைட்டிற்கு செல்ல
இங்கே கிளிக்கவும்

இந்த மென்பொருளை உங்கள் செல்போனின் மூலமாகத்தான் நிறுவ முடியும். வெப்சைட்டின் லிங்க் கொடுத்திருப்பது மேலும் விவரங்களை அறிந்து கொள்ள மட்டுமே.

இந்த அப்ளிகேஷன் மூலமாக ஐபோனிலும் எச்டிசி-யின் ஆண்ட்ராய்ட் போனிலும் அனுப்பும்  குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் மற்றும் சமூக வலைதளமான பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் தமிழிலேயே எழுதலாம். உதாரணத்திற்கு கீழே சில படங்கள்.  
அன்புடன்,

பாலாஜி சுந்தர்.