Monday, 4 August 2014

The லயன் MAGNUM ஸ்பெஷல்

30வது வருட ஸ்பெஷல், 700+ பக்கங்கள், ஹார்ட் பவுண்ட் அட்டை. இந்த பரிணாமத்தில் ஒரு காமிக்ஸ், முதல் முறையாக, என் 40 வருட காமிக்ஸ் படிக்கும்பழக்கத்தில் இப் புத்தகம் நிறைவை தருகிறது. இந்த காமிக்ஸ் புத்தத்தைப் போன்ற ஒன்றை தமிழில் இதுவரை நான் வாங்கியதில்லை. தமிழ் காமிக்ஸ் உலகில் உண்மையிலேயே இந்த புத்தகம் ஒரு மைல் கல். எடிட்டர் அவரது எல்லைகளை விரிவுபடுத்தி, அவரது எட்டும் உயரத்தினை, மீண்டும் ஒரு முறை பெரிதாக்கி இருக்கிறார். அவரது தொப்பியில் இன்னுமொரு இறகு அதிகமாக சொருகப்பட்டிருக்கிறது. எனது இந்த கருத்து, கதைகளை தவிர்த்து, புத்தக அளவு, மற்றும் தரத்தை பற்றிய அளவீடுகளை மட்டுமே ஆதாரமாக கொண்டது.

இந்த புத்தகத்தில் குறை என்று ஏதும் சொல்வதற்கு மனம் வரவில்லை. குறை சொல்லாததின் காரணம், கண்மூடித்தனமான ஜால்ரா அல்ல, கண் முன்னே கைகளில் கம்பீரமாக தவழும்  லயன் மேக்னம் ஸ்பெஷல் புத்தகத்தின் தரம். ஸ்பாட் ஹைலைட்டிங் முறையில் லேமினேட் செய்யப்பட்டிருக்கும் ஹார்ட் பவுண்ட் அட்டை. "மேக்னம்" என்ற எழுத்துக்களின் கடைசீ எழுத்துக்கு மேல் சிறகை விரித்து மேலெழும்பும் கிருஷ்ண பருந்து... MAGNUM என்ற எழுத்துக்களில் ஜொலிக்கும் தங்கம், சில்லவுட்டில் காட்சி தரும் மேகங்கள், மேகத்தினூடே பாயும் சூரிய கதிர்கள், கண் சிமிட்டிடும் நட்சத்திரங்கள், கேக்குடன் இருக்கும் சிங்கம்... ரூபாய் 400 விலையில்... உண்மையிலேயே சிறப்பு அதிரடிதான்.

 


இந்த ஒரு மெகா புது முயற்சியுடன், கூடவே வழக்கமான சைஸில் ஸ்பெஷல் புக் No : 2 அந்த அளவிற்கு எடுப்பாக தெரியா விட்டாலும், அதன் அட்டை அட்டகாசம். உள்ளிருக்கும் பேசும் ஓவியங்கள் நெஞ்சை அள்ளுகிறது. புக் நெம்பர் இரண்டின் அட்டையை பார்க்கும் போது, ஒரு அரிய வாய்ப்பு நம் கையை விட்டு நழுவிப் போனது நன்றாக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதற்கான விளக்கம் கீழுள்ள படத்தினை பார்த்தால் புரியும்.

இரண்டு அட்டை படங்களிலும் உள்ள அம்புக் குறிகளுக்குள் இருக்கும் ”MAGNUM ஸ்பெஷல் புக் நெ.1, புக் நெ. 2 இரண்டு என்று பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும் அளவை கவனியுங்கள். இரண்டு புத்தகங்களும் தனித்தனியாக, ஒரே அளவுள்ள பக்கங்களுடன் தயாரித்து வெளியிடப்பட திட்டமிடப்பட்டு இருக்க வேண்டும். பின்னாளில் சில, பல காரணங்களாலும், தயாரிப்பு செலவு கை மீறிவிடும் நிலையை தடுக்க, புக் நெ. 2 உருமாற்றம் பெற்று, வழக்கமான அளவில் குறைவான பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.

     இந்த ஹார்ட் பவுண்ட் மேக்னம் புத்தகத்தில் ஏதேனும் குறை சொல்லியே தீரவேண்டும் என்று சொல்வதானால், நெவர் பிபோர் ஸ்பெஷல் புத்தகத்திற்கு கொடுத்தது போல, டஸ்ட் கவர் இல்லாதது மற்றும் நெ. 1 புத்தகத்தில் பல கதைகள் இடம் பெற்றிருப்பதால், இண்டெக்ஸ் இல்லாததும், முன் அட்டையின் பின் இருக்கும் உள் பக்கமும், அதற்கடுத்த பக்கமும், அதே போல் பின் அட்டையின் உட்புறமும், அதற்கு முன்பிருக்கும் பக்கமும், தெளிவற்ற கலரில், மங்கலாக பிரிண்ட் ஆகி இருப்பது.

எடிட்டர் இந்த புத்தகத்தின் தரத்தின் மூலமாக ஒரு உறுதியான பதிலை அளித்திருக்கின்றார், அது அவரது “டெடிகேஷன்”. 30வது வருட ஸ்பெஷல் புத்தகங்கள் ஒரு நல்ல புதிய துவக்கமாக, மற்றுமொரு புதிய திசை நோக்கிய பயணமாக இருக்கும் என்றும், இனி வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களும் இதே டெடிகேஷனுடனும், தரத்துடனும் இருக்கும் என்று நம்புகிறேன், அதையே இறைவனிடமும் பிரார்த்திக்கின்றேன்.

கடைசியாக, எடிட்டரின் சமீபத்திய வலை பதிவில் இந்த படத்தையும் போட்டிருக்கிறார். டைலன் டாக்கின் படத்தை இந்த படத்தில் இருந்து எடுத்து பிரிண்ட் செய்ததற்காக இந்த படத்தை போட்டிருந்தாலும், வரும் காலத்தில், பேட்மேன், சூப்பர்மேன், சில்வர் சர்ஃபர், ஆஸ்ட்ட்ரோ பாய் போன்ற இன்னும் சில கூடுதலான காமிக்ஸ் ஹீரோக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று கோடி காட்டுகிறாறோ என்று தோன்றுகிறது. ஆனால் மக்கள் இரும்புக்கை மாயாவியும், சட்டித் தலையனும் வேண்டும் என்று சுனாமி அலை அடிப்பதை பார்த்தால்... ம்ம்ம்.. சிரமம் தான்...  

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.