Thursday 19 July 2012


தடையற தமிழில் போட்டுத் தாக்க!








நண்பர்களுக்கு வணக்கம்,


இந்த வலைப்பதிவு, ப்ளாக் வலைப் பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும், இன்ன பிற விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் எப்படி சுலபமாக தமிழில் டைப்பிங் செய்வது என்பதைப் பற்றியது.



இந்த பதிவுக்குக் காரணம், திரு கிங் விஸ்வாவின் வலைத்தளத்தின் மூலமாக லயன் காமிக்ஸுக்கு என்று ஒரு ப்ளாக் இருக்கின்றது என்பது தெரிந்ததிலிருந்து, எடிட்டரின் வலைப்பக்கத்திற்க்குச் சென்று மேய்வது ஒரு தினப்படி விஷயமாக ஆகிவிட்டது.


ஒரு வலைப்பதிவில், எடிட்டர் என்ன கூறியிருந்தார் என்றால், கூகுள் டிராஸ்லேஷனில் ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து பின் பதிவிடுவது சிரமமாக இருக்கின்றது என்று எழுதியிருந்தார்.

நிறைய தமிழ் பதிவர்களின் வலைப் பக்கங்களிலும், அதைத் தொடர்ந்த பின்னூட்டாங்களிலும் இருக்கும் தமிழ் சொற்கள் பிழைகளோடு இருப்பதையும் பார்த்தேன். இப்படிக் கூறுவதால் என் வலைப் பக்கம் பிழைகளில்லாமலிருக்கிறது என்று நான் கூறுவதாக நண்பர்கள் நினைத்துவிடக் கூடாது. என் வலைப்பக்கங்களும் சொல் தவறுகள் நிறைந்துதான் இருக்கிறது. இந்த தவறுகள் ஏன் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்தே இருக்கின்றேன். ஆங்கிலத்தில் டைப் செய்து அது தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது ஏற்படும் வெளியே சொல்ல முடியாத அவஸ்தை அது. அவஸ்தை என்பதை விட சங்க்க்க்கடம் என்பதே சரி.

முரசு அஞ்சல் வலைப்பக்கம்.




எனக்கும் தமிழ் டைப்பிங்கிற்கும் 2000 மாவது வருடத்திலிருந்தே அல்லது அதற்கு சில வருடத்திற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது தமிழில் டைப் செய்ய “முரசு அஞ்சல்” என்னும் மென்பொருளைப் பயண்படுத்தி வந்தேன். மலேஷிய தழிழர்களின் ஆர்வத்தினால் உருவாக்கப்பட்ட மென்பொருள் முரசு அஞ்சல் ப்ரோக்ராம். இதுவும் ஒரு ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழ் எழுத்து உருவாகும். உதாரணத்திற்கு ammaa = அம்மா டைப் செய்ய வேண்டும் என்றால் a+m+maa. இந்த டைப்பிங் முறையை நீங்கள் எல்லோரும் அறிந்திருந்தாலும், எனக்குத் தெரிந்தவரை கம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் செய்வதற்கு, ஆங்கிலத்தில் போனடிக் கீ போர்டு வழிமுறையில் சிறப்பாக வேலை செய்த மென்பொருள் முரசு அஞ்சல். இன்று என்னுடைய பதிவுகளும் அதனைத் தொடரும் பின்னூட்டங்களிலும் நீண்ட அதுவும் நண்பர்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு நீண்ண்ண்ண்ட டைப்பிங்கிற்கு காரணம் 12, 13 வருடங்களுக்கு முன்னேயே கம்ப்யூட்டரில் ஆயிரக் கணக்கான தமிழ் பக்கங்களை அடித்துப் பழக்கமானதினாலேயே. (என்னுடைய டைப்பிங் சார்ந்த ஒரு சுவாரசியமான செய்தியை, விரும்புபவர்க்கு இந்த பதிவின் முடிவில் சொல்கிறேன்.)

என்னுடைய கம்யூட்டர்கள் மாறினாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறினாலும் தொடர்ந்து முரசு அஞ்சல் மென்பொருளை பயண்படுத்தி வந்தேன். முரசு மென்பொருளில் ஒரு சிக்கல் என்னவென்றால், அது ஒரு ஷேர்வேர். யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து நிறுவி இயக்கிக் கொள்ளலாம். ஒரு சில கூடுதல் செயல்பாடுகளும், அனைத்து வகையான எழுத்துருக்கள் (FONT) வேண்டும் என்றால் பணம் செலுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நீங்கள் ஒரு பக்கத்தை முரசு கொண்டு தமிழில் உருவாக்கி இருந்தீர்கள் என்றால் அந்த பக்கத்தை படிக்க வேண்டும் என்றாலும் முரசு டாஸ்க் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

நான் சொல்லும் நடைமுறை அந்த நாளில். இப்போது எப்படியோ தெரியவில்லை. இதனால் நான் எங்கெல்லாம் தமிழ் உபயோகப் படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் முரசுவை எடுத்துச் செல்லும் நிலையில் இருந்தேன். என்னிடமே பிரிண்டர் இருந்ததால், பேப்பரில் பிரிண்ட் செய்ய ஏதும் சிரமமில்லாமல் இருந்தது. ஆனால் சில பக்கங்களை கடையிலோ அல்லது வேறேங்காவதோ பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்க ஒரு வழி கண்டுபிடித்தேன். அது முரசு மூலம் ஏற்படுத்த தமிழ் பக்கத்தை, அப்படியே PDF பைலாக மாற்றி சேமித்து விட்டால், பின் அந்த பைலை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பிரிண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் பிடிஎஃப் பைலில் ஏதும் கரக்‌ஷன் செய்ய முடியாது. அப்படி கரெக்‌ஷன் செய்ய வேண்டும் என்றால் அது சிறிது தலையை சுற்றி மூக்கைத் தொடும் விஷயம்.


சமீபத்தில் தமிழ் டைப்பிங் சம்பந்தமாக எந்த வேலையும் இல்லை. எனது முரசு உபயோகமும் வழக்கொழிந்து போனது. அதனால் சமீபத்தில் ஹார்ட் டிஸ்க்கை பார்மாட் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மறு நிறுவுதல் செய்த பிறகு ஒரு சிறிய 10 வரி தமிழ் டைப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது வலையில் தேடியபோது கிடைத்ததுதான் NHM WRITER. இதற்கான ஒரு லிங்க் நமது கருந்தேளார் முகப்புப் பக்கத்தில் இருக்கின்றது. இது சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிக வலிமையாக இருக்கின்றது. இந்த மென்பொருள் தமிழ் டைப்பிங்கை முரசு அஞ்சலைவிட சிறப்பாக செய்கின்றது. நண்பர்களே என்.ஹெச்.எம். என்றால் என்ன தெரியுமா? நியூ ஹாரிசான் மீடியா. ஆம், நமது கிழக்கு பதிப்பகமேதான். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை சுட்டவும்.



NHM WRITER - தமிழில் தடையின்றி டைப் செய்ய.

இது ஒரு முற்றிலும் இலவச மென்பொருள். இதன் மூலம் டைப் செய்தால் தவறே ஏற்படாது என்று நான் சொல்லவில்லை, அப்படி ஏற்படும் தவறுகளை அப்போதைக்கப்போதோ அல்லது முதலில் இருந்து சரிபார்க்கும் போதோ திருத்திவிடலாம்.. ஆனால் இதைப் பயண்படுத்தும் போது, இதற்கும் கூகுள் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது உங்களுக்கே தெரிய வரும்.

பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்கள் இந்த மென்பொருளைத்தான் பயண்படுத்துகின்றனர் என்று நினைகின்றேன். இது இல்லாமல் இன்னும் பல தமிழ் மென்பொருட்கள் இருக்கலாம். முன்பு தமிழக அரசு, C-DAC உடன் சேர்ந்து ஒரு தமிழ் மென் பொருள் சீடி வெளியிட்டது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கலாம்.

சுருங்கக் கூறின் இந்த மென்பொருள், சிறியது, ஆனால் உபயோகிக்க எளிமையானது. இந்த மென்பொருளை நிறுவி, கூகுள் மற்றும் இன்ன பிற அது போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் கருவிகளின் சிக்கல்களிலிருந்து விடுதலை பெற்று, தமிழ் டைப்பிங்கை சரளமாக கையாண்டு, சிறப்பான பல பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படைக்க எனது வாழ்த்துக்கள்.

இந்த மென்பொருள் விஷயத்தை உங்களிடம் பேசும்போதோ அல்லது பின்னூட்டமிடும் போதோ நான் சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மென்பொருள், விரல் விட்டு எண்ணக் கூடிய சில பேர்களுக்கு மட்டுமே தெரிய வந்திருக்கும். இதை ஒரு பதிவாக செய்தால், அது எப்போதும் அனைவரும் பார்க்கும் படி இருக்கும். மேலும் இந்த பதிவை முந்தய பதிவுகளுக்கு நடுவில் நுழைத்திருந்தால் அது நான் சப்ஜக்ட் மாறி மென்பொருள் பற்றிய பதிவில் இறங்கி விட்டது போல தெரியும். அதனாலேயே இதை கடைசியாக வைத்துக் கொண்டேன்.


நண்பர்களே, இதுவரை இந்த மென்பொருள் பற்றி தெரியாதிருந்தால் இப்போது உபயோகப் படுத்துங்கள். ஏற்கெனவே தெரிந்திருந்தால் உங்கள் ஏனைய நண்பர்களுக்கு இந்த தகவலை பரிமாற்றம் செய்யுங்கள்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

என் இனிய தமிழ் மக்களே, சாரி நண்பர்களே, இயக்குனர் இங்கே உள்ளே நுழைந்து விட்டாரோ என்று பயந்துவிடாதீர்கள்.நான் உங்களை பயமுறுத்திட நினைக்கவில்லை.

தமிழுக்காக ஒரு காரியத்தை செய்ய துணிந்துவிட்டேன். எடிட்டர் விஜயன் சாரைப் போல என் எல்லைகளை மீறிட துணிந்துவிட்டேன். ஏற்கெனவே பப்ளிஷ் செய்யப்பட்ட பதிவை, மீண்டும் எடிட் செய்து, அந்த பதிவில் மேலும் சில வரிகளை தமிழுக்காக சேர்த்துள்ளேன்.  எடிட்டர் எல்லைகளை மீறினால் அது காமிக்ஸ் காதலர்களுக்கு நல்லது. நான் எல்லை மீறுவது நண்பர்களின் தமிழ் டைப்பிங்கிற்கு நல்லது என்பதால் மீறுவதற்கு உரிமை எடுத்துக் கொள்கிறேன்.

கீழே இருக்கும் முதல் பின்னூட்டதில் நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் ஒரு தமிழ் அழகியைப் பற்றி கூறி, லிங்கும் கொடுத்திருக்கிறார். நண்பர் ஸ்டாலினின் வலைப் பக்கங்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது வலைப் பக்கங்களை அழகியைக் கொண்டுதான் அடித்திருக்கிறார், அழகாகவே இருக்கிறது பக்கங்கள். எனது நோக்கம் தமிழ் டைப்பிங்கிற்கு சிரமப்படும் அனைவருக்கும்  இந்த செய்திகள் சென்று சேர்ந்த்து, அனைவரும் அழகாக தமிழ் டைப்ப வேணும் என்ற அவாவே.அதனால் அவரின் பின்னூட்டதில் இருக்கும் லிங்க் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அழகியை கீழே இருந்து மேலே கொண்டு வந்து விட்டேன். இன்னோரு விஷயமும் சொல்லிவிடுகின்றேன், அழகியை இப்போது நான் உபயோகப் படுத்தவில்லை. முன்பு அழகியை பயண்படுத்திய போது அவள் நல்ல அனுபத்தையே தந்தாள் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. அழகியுடனான அனுபவம் கசப்பாக இருந்திருந்தல் அது கட்டாயமாக நினைவில் இருந்திருக்கும். இங்கே கொடுத்துள்ள மென்பொருட்களை உபயோகப்படுத்திப் பார்த்து, எந்த மென்பொருள் உங்களுக்கு பிடிக்கிறதோ அதை உபயோகப்படுத்துங்கள்.

யாமறிந்த வலைப்பதிவர்களிலே அழகிய உதவியாளரை கொண்டு தமிழ் அடித்த பதிவர் ஸ்டாலினைத் தவிர வேறெங்கும் காணோம் (என் கண்ணுக்கு) என்று நான் கவிதையே எழுதிவிட்டேன். தமிழின் நன்மை கருதி இரண்டு வரியோடு நிறுத்திக் கொள்கிறேன்.இல்லையென்றால் நண்பர்கள் கோபப்பட்டு, படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில் என்பது போல இவன் தமிழின் நன்மை என்று முதல் பத்தியில் எழுதிவிட்டு, அதற்கு அடுத்த பாராவில் கவிதை எழுதி தமிழை கொலை செய்கிறான், இதை சகிக்க முடியாது  என்று துப்பாக்கி தூக்கிவிடப் போகிறார்கள்.

அழகியுடன், தமிழ் பேச நினைப்பவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டவும்.


நண்பர்களே, அழகியைக் காட்டியதற்கு நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் அவர்களுக்கு, அவருடைய பக்கத்தில் ஒரு தேக்ங்ஸ் கமெண்ட் இட்டு, ஒரு ”ஓ” போட்டு வாருங்கள். நண்பர் ஸ்டாலினுக்கு, என் நன்றியை நான் இங்கும், அங்கும் தெரிவிக்கின்றேன். அனைவருக்கும் மற்றுமொரு வேண்டுகோள், உங்கள் வீட்டுக்கார அம்மா இந்த அழகி சமாசாரத்தைப் பார்த்து, வேறேதோ சந்தேகமான சமாச்சாரம் என்று நினைத்து பூரிக்கட்டை எடுத்து வந்தாலும் அதையும் ஈரோடுகாரருக்கே கொரியர் செய்துவிடவும்.

ஒரே பதிவில் ரெண்டாம் தடவையாக, 

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.

Tuesday 17 July 2012

DARK KNIGHT - A BEGINNING




DEAR FRIENDS,

அனைவருக்கும் வணக்கம்,

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்து விட்டு, என்னடா இது, கிரிஸ்டோபர் நோலனுடைய டார்க் க்னைட் சீரிஸின் கடைசி தவணை படமான தி டார்க் க்னைட் ரைசஸ் இந்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது, இந்த நேரத்தில் எ பிகினிங் என்று ஒரு பதிவா என்று நண்பர்கள் நினைப்பது தெரிகின்றது. சற்று பொறுங்கள், விஷயத்திற்கு வருகின்றேன்.

சின் சிட்டி பற்றிய பதிவில் ஓவியர் ப்ராங்க் மில்லரை பற்றியும் கூறியிருந்தேன். அந்த பதிவிற்கான பின்னூட்டத்தில் நண்பர் இரவுக்கழுகு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அந்த பின்னூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்து ”சின் சிட்டி காமிக்ஸோடு, சினிமாவை ஒப்பீடு செய்தது சிறப்பாக இருந்தது என்றும் ஆனால் அவருக்கு சின் சிட்டி காமிக்ஸும் சினிமாவும் பிடிக்கவில்லை” என்று கூறினார். இதற்கு நான் பதிலளிக்கும் போது, சின் சிட்டி பற்றிய கருவை பதிவிட எடுத்துக் கொண்டதற்கு மற்றுமொரு காரணம் இருக்கின்றது என்று மட்டும் கூறினேன், ஆனால் அப்போது காரணத்தை கூறவில்லை. 

அந்த காரணத்தை இப்போது கூறுகின்றேன். இந்த டார்க் க்னைட் பதிவை வந்தடைய துவக்கப் பட்ட பயணம்தான் சின் சிட்டி பற்றிய பதிவு.

மீண்டும் ப்ராங் மில்லரைப் பற்றிய புராணம்தான். ஆனால் அவரைப் பற்றி மீண்டும் எழுத வலுவான காரணங்கள் இருக்கின்றது. அதாவது அவரும் நம்மைப் போலத்தான். அதை அவர் விவரிக்கும்படி சொல்வதென்றால் கீழே சில வார்தைகள்.

டார்க் க்னைட் டேஸ்-பை ப்ராங் மில்லர், தேதி:16.09.1996.
1963 (அல்லது அது 64? சரியான வருடம் எது என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் அந்த சம்பவம் என்னுள்ளே பசுமை மாறா உணர்வுடன், வண்ணங்கள் மங்கிப் போகாமல் என்றும் உயிருடன் உலவுகின்றது.)

வெர்மாண்ட் என்ற ஊரில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் 80 பக்கங்கள் கொண்ட ஜயண்ட் பேட்மேன் காமிக்ஸ் புத்தகத்தை கண்டேன். அதை திறந்தேன், புரட்டிப் பார்த்தேன், அதனுள்ளே விழுந்து விட்டேன், அன்றிலிருந்து இன்றுவரை பேட்மேனை விட்டு வெளியே வரவில்லை.

நான் சிறு வயதில் டைரி எழுதும் பழக்கத்தை கடைப்பிடிக்காததை நினைத்து இன்று வருந்துகின்றேன். ஏனெனில் யாருக்குத்தான் தெரியும், யாருக்குமே தெரியாது பின் வரும் நாட்களில் என் ஆதர்ச ஹீரோ பேட்மேனை நானே வரைய நேரிடும் என்று.

நண்பர்களே, இதற்கு மேல் அவருடைய எழுத்தை அப்படியே ஆங்கிலத்தில் கீழே கொடுத்திருக்கின்றேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையில் ப்ராங் மில்லர் அவரது வயதைப் பற்றி சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதாவது 1964ல் அவருக்கு வயது 6 அல்லது 7 என்கிறார் ஆனால் 1985ல் அவருக்கு 13 வயது என்கிறார். அவருடைய முந்தய கணக்குப்படி எடுத்தால் அவர் பிறந்த வருடம் 1957 அல்லது 58, அப்படி பார்த்தால் அவருக்கு 1985ல் 28 வயது இருக்க வேண்டும். மேலும் அந்த வருடமே விமானபயணத்தில்  வெள்ளை ஒயினை சுவைப்பதாக சொல்கிறார். இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முடிவை அவரவரிடமே விட்டுவிடுகின்றேன்.




50 வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த பேட்மேன் காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை மெல்ல மெல்ல சரிந்து 1985 வாக்கில் விற்பனையில் ஒரு தேக்க நிலை நிரந்தரமானது (பேட்மேன் மட்டுமல்ல, சூப்பர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் காமிக்ஸுக்கும் விற்பனை குறைந்ததால்,  சூப்பர்மேன் மற்றும் ஸ்பைடர் மேன் காமிக்ஸ் வெளியீட்டாளர்களே அந்த ஹீரோக்களை  சாகடிப்பதும் நடந்தது.) டிசி காமிக்ஸின் எடிட்டர் டிக் ஜியோர்டனோ உடனான மில்லரின் சந்திப்பின் போது, எடிட்டர் ஒரு கருத்தை மில்லரிடம் தெரிவிக்கின்றார். அதாவது பேட்மேன் காமிக்ஸ் விற்பனை தேக்கமடைந்தாலும், மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்ததில் வந்த புள்ளிவிவர முடிவு தெரிவித்தது என்னவென்றால், அது பெரும்பாலான மக்களின் ஆதர்ச ஹீரோவாக பேட்மேனே இருக்கின்றார்.

இந்த புள்ளி விவரம் தந்த உற்சாகத்தில் டிசி காமிக்ஸ் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறது. அது பேட்மேன் காமிக்ஸை ஆரம்ப நிலையிலிருந்து மறு சீரமைப்பு செய்து, மீண்டும் மறுவிற்பனையை மாபெரும் அளவில் ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. 

அதன்படி உருவானதுதான் டார்க் மேன் சீரிஸ். இந்த கதைகளே இப்போது கிரிஸ்டோபர் நோலனுடைய இயக்கத்தில் வெளியிடப்பட்ட பேட்மேன் படங்கள். திரைக்கதையை உருவாக்கியவர் கிரிஸ்டோபர் நோலனுடைய சகோதரர்.



ஒரு பேட்டியில் டைரக்டர் கிரிஸ்டோபர் நோலனிடம், டார்க் க்னைட் பட திரைக்கதைக்கு எது அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், சார்லஸ் டிக்கன்ஸின் எ டேல் ஆஃப் டூ சிட்டிஸ் கதையே இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருக்கிறார்.


நம் எல்லோருக்கும் பேட்மேனின் மூலக் கதை தெரிந்திருக்கும். அதையே சிறிது மாற்றி, ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பழிதீர்க்க அலையும் கதாபாத்திரமாக ப்ரூஸ் வெய்ன் வருகிறார். ப்ரூஸ் வெய்னின் பயமே அவரின் பெற்றோர்கள் மரணமடையும் சம்பவத்திற்கு காரணாமாகி விடுகின்றது.


இதன் காரணமாக ஏற்படும் குற்ற உணர்ச்சியில், அவருக்கு அவர் மீதே வெறுப்பு ஏற்படுகின்றது.  பின்னாளில் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களினால், சிறிது சிறிதாக பண்பட்டு, தீமையை எதிர்க்கும் ஒரு வீரனாக உருமாறுகின்றார். அவர் ஏன் பேட்மேன் உடையில் மறைந்திருக்கின்றார் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.


அதாவது, ப்ரூஸ் வெயினாக போராடினால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு நேரிடும் ஆபத்தை தடுக்க முடியாது, ஒரு கிரிமினலை ப்ரூஸ் வெய்னாக சந்திக்கும் போது வெய்ன் தாக்கப்படுவதுமில்லாமல், கிரிமினல் அவரை எப்படி மிரட்டுகிறான் என்றால் “வெய்ன் உனக்கு என்று யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா, உன் எண்ணத்தை மாற்றிக் கொள், இல்லையென்றால் உனது வயதான பட்லரையும், உனது பால்ய காலத்து சினேகிதி ரேச்சலையும் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டுகிறான். அதனால் ஒரு முகமூடிக்குள் மறைந்து பேட்மேனாக எதிரிகளை தாக்கினால் அவர்களுக்கு பேட்மேன் யார், அவருக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் யார் என்று தெரியாது. வவ்வாலின் உருவத்தை தேர்ந்தெடுத்தற்கு காரணம், ப்ரூஸ் வெய்ன், சிறுவனாக இருக்கும் போது, ரேச்சலுடன் விளையாடும் ஒரு சமயத்தில், ரேச்சல் துரத்த வெய்ன் தப்பித்து தோட்டத்தில் ஓடுகிறார். பயண்பாட்டில் இல்லாத பல காலம் முன் பலகைகளினால் மூடப்பட்ட பழைய கிணற்றின் மீது ஓடும் போது, பலவீனமாக இருக்கும் மரப்பலகை உடைந்து பாழடைந்த கிணற்றினுள் சிறுவன் வெய்ன் விழுந்து விடுகிறார். இதில் வெய்னின் காலில் முறிவு ஏற்படுகிறது, அதே சமயத்தில் கிணற்றின் உள்ளே இருக்கும் குகையில் வசிக்கும் பெரிய பெரிய வவ்வால்கள் சிறுவன் வெய்னின் மேல் வந்து மோதி அவனை திகில் கொள்ளச் செய்கின்றது. இந்த சம்பவத்திற்குப் பின் ப்ரூஸ் வெய்னுக்கு வவ்வால்கள் என்றால் வளர்ந்த பின்பும் பயம் ஏற்படுகிறது. TO CONQUER FEAR, YOU MUST BECOME FEAR, என்ற வாசகம் பின் நாளின் பயிற்சியின் போது போதிக்கப்படுகிறது. அதாவது நீ உன் எதிரிகளை வெல்ல வேண்டும் என்றால், முதலில் நீ உன் பயத்தை வெல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் எதிரி அவனது பயமே. அவன் அதை வெல்லாமல், மற்ற  எதிரிகளை வெல்ல முடியாது.இதுவே ப்ரூஸ் வெய்னுக்கு செய்யப்படும் முதல் போதனை. அதனால் வெய்ன் தன்னுடைய பயத்தையே தன்னுடைய பலமாக மாற்றி, பேட்மேனாக அவதாரம் எடுக்கிறார்.


அதனால் ப்ரூஸ் வெய்ன்,பேட்மேன் உடையில் தன் போராட்டத்தை நடத்துகின்றார். அதே போல் டார்க் க்னைட் என்று அழைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் கூறுகின்றார். இந்த உலகில், அதாவது கோதம் சிட்டியில் இருக்கும் அத்தனை கிரிமினல்களும் வாழ்வது எப்படி என்றால், ஒவ்வொரு சாதாரண மனிதனின் பயத்திலும் வாழுகின்றார்கள். அப்படியென்றால் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கிரிமினல்கள் எப்படி ஒவ்வொரு மனிதர்களையும் பயப்படுத்தி வைத்திருக்கின்றார்களோ அந்த பயத்தையே ஆயுதமாக பயன்படுத்தி இந்த கிரிமினல்களை அழிக்கின்றேன் என்று முடிவெடுக்கிறார். 


பழைய பேட்மேன் கதைகளில் இருந்து டார்க் க்னைட் சிறிது மாறுபடுகின்றது என்றால், அது பேட்மேன் சில கட்டங்களில் மன சஞ்சலம் அடைந்து தனது முகமூடியை தூக்கி எறிந்துவிடுகிறார். பல சமயங்களில் நடக்கும் குற்றங்களை கண்டு இயலாமை அவரை பாதிப்பது போல சில காட்சிகளும் இருக்கின்றது. பேட்மேன் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனிதன்தான் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த சீரிஸின் வெற்றி.


பேட்மேனின் டார்க் க்னைட் ஸீரிஸ் வெளிவந்த 10வது வருட நிறைவுக்காக டிசி காமிக்ஸ், 200 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை 1996ம் வருடம் வெளியிட்டிருக்கின்றது. இதில் படங்களை வரைந்தவர் ப்ராங் மில்லர். ஓவியங்களும், கதையின் தெளிவும் சுமார்தான். ஆனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஒரு முறையேனும் படிக்கவும். இதை படிக்கும் போது இந்த புத்தகம் முதலில் வெளிவந்தது 1985 என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலே கொடுத்துள்ள மில்லரின் 3 பக்க கட்டுரை இந்த புத்தகத்தில் தான் இடம் பெற்றுள்ளது.

பேட்மேன் இயர்-ஒன்.



டார்க் க்னைட் ரிட்டர்ன்ஸ் கதையின் ஆரம்ப கட்டத்தை சிறிது விரிவாக சொல்வதற்கு, மில்லரும், டேவிட் என்பவரும் இணைந்து பேட்மேன் இயர் ஒன் என்னும் ஒரு தொடரை உருவாக்கினார்கள். இந்த தொடரும் பழைய பேட்மேன் கதையின் தழுவலே. இந்த புத்தகங்கள் நான்குதான் வந்தது அதாவது ஆரம்ப கதை. இந்த நான்கு புத்தகங்களில் சாதாரண ப்ரூஸ் வெய்ன் எப்படி பேட்மேன் ஆகிறார் என்றும், ஒரு சாதாரண போலீஸ் ஆபிஸரான கார்டன் அதிகாரி ஆகி, எப்படி குற்றத்திற்கு எதிரன போராட்டத்தில் பேட்மேனுடன் இணைகின்றார் என்றும் விவரிக்கின்றது. இந்த கதைகளும், இன்னும் சில கதைகளையும் சேர்த்து திரைக்கதைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்திய பின் உருவானதுதான் கிரிஸ்டோபர் நோலனின் முதல் பேட்மேன் படம் ”பேட்மேன் பிகின்ஸ்”.


TO CONQUER FEAR, YOU MUST BECOME FEAR....

இந்தப் படம் வெளிவந்த பின்பு அந்த படத்தின் திரைக்கதையை, அதே பெயரில், ஒரு காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டனர். அந்த புத்தகத்தின் முதல் பக்கம் இங்கே. இந்த புத்தகம் அட்டகாசமாக இருக்கின்றது. அப்படியே சினிமாவின் தழுவல். முதலில் காமிக்ஸை படமாக்குகின்றனர், பின் படத்தை மீண்டும் காமிக்ஸாக வெளியிடுகின்றனர். திரைப்படத்தை தழுவிய காமிக்ஸ் புத்தகத்தின் அட்டை.





பேட்மேன் பிகின்ஸுக்கு அடுத்து வந்த தி டார்க் க்னைட் படம் வசூலில் சாதனை ஏற்படுத்திய படம். 




இந்தப் படத்தில் பேட்மேனுடன் ஜோக்கர் மோதுகின்றார். ஜோக்கரின் பிரபலமான வாசகம், WHY SO SERIOUS!.  கோத்தம் சிட்டியின் டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி ஹார்வி டெண்ட், குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு ஒன்றினைந்த போரை துவக்குகிறார். ஜோக்கரின் தொடர்ந்த சூழ்ச்சி நிறைந்த தாக்குதல்களால் கோத்தம் சிட்டி நிலை குலைகிறது. இதனால் கோத்தம் சிட்டியின் அமைதி இழக்கப்படுகிறது. வண்டிச் சக்கரத்தின் அச்சானியை பிடுங்குவதுபோல ஜோக்கர் ஹார்வி டெண்டையும், அவரது உதவியாளரும், காதலியுமான ரேச்சலையும் தனித்தனி இடங்களில் அடைத்துவைத்து ஒரே நேரத்தில் வெடிக்கும்படி டைம் பாமும் வைத்துவிடுகின்றான். 


இதில் ரேச்சல் பேட்மேனின் பால்ய காலத்து மற்றும் நிகழ்காலத்து தோழி. ரேச்சல், ப்ரூஸ் வெய்ன் மற்றும் ஹார்வி டெண்ட் மூவருமே ஒரு முக்கோன காதலில் இருக்கின்றனர். இதற்கு மேல் இங்கு இந்த அருமையான படத்தின் கதையை நான் சொல்லப் போவது இல்லை. இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் இருந்தால் எனது பதிவு அவர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை சிதைத்துவிடும்.

டார்க் க்னைட் திரைப்படத்திற்கு ஏதும் காமிக்ஸ் வெளிவந்ததாக தெரியவில்லை. நண்பர்களுக்கு தெரிந்தால் மெயில் செய்யவும்.




மேலும் ஒரு குறுந் தகவல். டார்க் க்னைட் திரைப்படத்தில் ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜரின் நடிப்பு வெகு சிறப்பு. இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜொக்கராகவே வாழ்ந்திருப்பர்.  நடிப்பைப் பார்த்து நான் மிகவும் வியந்தேன். நடிப்பென்றால் அப்படி ஒரு அபாரமான நடிப்பு. இந்தப் படத்துக்காக மட்டும் இவர் 35 பல்வேறு அவார்டுகளை வென்றுள்ளார். இதில் ஒரு சோகமான விஷயம் ஹீத் லெட்ஜர் 28 வயதிலேயே 22.01.2008 அன்று இறந்துவிட்டார். தி டார்க் க்னைட் படம் வெளியான தேதி 18 ஜுலை 2008. ஆம், படம் வெளி வருவதற்கு முன்பே இவர் இறந்துவிட்டார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதற்கேற்ப இவரின் நடிப்பு, வேறெந்தப் படத்தை விடவும் இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தது. இவருடைய பல படங்களை நான் ஏற்கெனவே பார்த்திருந்தாலும், இந்த நடிகர் யார் என்று என்னை தேடிப் பார்க்க வைத்த நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தினார். ஆனால் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இவர் இறப்பதற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. என் மொபைல் ஸ்கிரீனிலும், கம்ப்யூட்டரின் ஸ்க்ரீனிலும் பேட்மேனை விட ஹீத் லெட்ஜர்  ஜோக்கர் வேடத்திலிருக்கும் படங்களே வால்பேப்பராக அதிக நாட்கள் இருந்திருக்கின்றது என்பதே உண்மை.





இப்போது இந்த டார்க் க்னைட் பற்றிய பதிவின் இறுதிக்கு வந்துவிட்டோம். கிறிஸ்டோபர் நோலன் டார்க் க்னைட்டை மூன்று பாகங்களாக எடுத்திருக்கின்றார். இந்த படத்தை பார்க்கும் போது பல உளவியல் தத்துவங்களை எடுத்து பல கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் டைரக்டர். அந்தந்த கேரக்டர்களைப் பார்த்தால் அவை கெட்ட கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டருக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷனை கொடுத்திருக்கின்றார் டைரக்டர்.

நானும் சின் சிட்டியில் ஆரம்பித்த இந்த பதிவுக்கான ஓட்டத்தை இங்கு நிறுத்திக் கொள்கிறேன். 20ம் தேதி ஜூலை மாதம் 2012ல் பேட்மேனின் மூன்றாவது தவனையான டார்க் க்னைட் ரைசஸ் படம் ரிலீஸ் ஆகின்றது. முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் இந்த மூன்றாவது படத்திற்கு மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ப்ராங் மில்லரைப் பற்றி, மூன்று பதிவுகளில் கொண்டு வந்ததற்கு காரணம், அவர் நம்மைப் போலேவே ஒரு சிறுவனாக இருக்கும் போது பேட்மேன் காமிக்ஸின் ரசிகனாக மாறி, பின்னாளில் அந்த பேட்மேனையே ஓவியமாக வரையும் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கின்றார். சிறு வயதில் அவர் படித்த பேட்மேன் காமிக்ஸில் எவையெல்லாம் சரியில்லை என்று நினைத்தாரோ, எவையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் பின்னாளில் கலந்து உருவாக்கியதுதான் டார்க் க்னைட். மில்லர், ஒரு வாசகனாக, ரசிகனாக பேட்மேன் காமிக்ஸில் செய்த கரெக்‌ஷன் இன்று டிசி காமிக்ஸுக்கு நல்ல கலெக்‌ஷன் பேட்மேன் டார்க் க்னைட்டின் வெற்றி, ஒரு காமிக்ஸ் ரசிகனின், வாசகனின் வெற்றி.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். இங்குள்ள தகவல்களில் ஏதேனும் குறையிருந்தால் தவறாமல் உங்கள் கமெண்டுகளில் குறிப்பிடுங்கள்.

Friends,
பாலாஜி சுந்தர்.


Sunday 15 July 2012


டியர் ப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். சென்ற பதிவில் ஓவியர் ப்ராங் மில்லரைப்பற்றி கூறியிருந்தேன். ஆனால் அவருடைய போட்டோவை பதிவில் போட மறந்துவிட்டேன். இந்த பதிவும் ஓவியர் ப்ராங் மில்லரைப் பற்றியதுதான். அவருடைய 300 காமிக்ஸும், 300 திரைப்படம் பற்றியும்தான். தமிழில் 300 பருத்தி வீரர்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. முதலில் இப்போது ஓவியர் ப்ராங் மில்லரின் ஓவியமும், அவரது போட்டோவும்.

 

300 திரைப்படத்தைப் பற்றி : இந்த கதை நடக்கும் வருடம் 480 B.C.. இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வை பின் புலமாக கொண்ட கதை. கிரேக்கத்தை சேர்ந்த 300 ஸ்பார்டன் வீரர்கள், 1,70,000 பெர்ஷியர்கள் ஸ்பார்டன் மீது படையெடுத்து வந்த போது, 300 வீரர்கள் மட்டுமே கொண்ட ஸ்பார்டன் படை பெர்ஷியன் படையோடு மோதி தடுத்து நிறுத்துகின்றது. கடைசியில் ஸ்பார்டன் ஊரை சேர்ந்த ஒரு தனி மனிதனின் துரேகத்தால் 300 பேர்களுமே பேரில் இறக்கின்றார்கள். இந்த 300 கதை முதலிலேயே ப்ராங் மில்லரால் காமிக்ஸாக வரையப்பட்டது. பிறகு படமாக்கப்பட்டது. மில்லரே இந்த கதையின் எழுத்தாளர், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இத் திரைப்படம் 09.03.2007 -ல் வெளியானது. இந்த வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வரும் நண்பர்கள், ப்திவை படிக்கும் முன் இதற்கு முந்தய பதிவைப் படித்த பின் இந்த பதிவை படிக்கவும். 

இனி 300 காமிக்ஸ் எப்படி திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கின்றது என்பதை பார்ப்போம். இந்தப் படமும் சின் சிட்டியைப் போல காமிக்ஸிலிருந்து திரைப்பட அவதாரம் எடுத்திருந்தாலும், 300 திரைப்படத்தில் காமிக்ஸ் புத்தக காட்சிகளின் சாயல் இருக்குமே தவிர, காமிக்ஸ் புத்தகத்தின்  சாயல் இருக்காது.

300 திரைப்படத்தை காமிக்ஸோடு ஒப்பிடும் சில காட்சிகள்.















  





நண்பர்களே, இப்போது இந்த பதிவின் இறுதி பாகத்தை நெருங்கி விட்டோம். சென்ற பதிவின் நீளம் காரணமாக அங்கு பதிவிடாத சில ப்ராங் மில்லரின் ஓவியங்களை போனசாக இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

அமேசிங் ஸ்பைடர் மேனும் டேர் டெவிலும்

அமேசிங் ஸ்பைடர் மேனும், டேர் டெவிலும்.




அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதற்கு முன், உங்கள் கமெண்டுகளை இடுங்கள். இந்த முறை யார் முதலில் வருகின்றார்கள் என்று பார்ப்போம். என் பெயர் லார்கோ பதிவில் கமெண்ட் ரேசில் முதலில் வந்த திரு P. கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய பரிசை அவரிடம் சேர்த்தாயிற்று.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.