Tuesday 21 August 2012

MY NAME IS MODESTY


மாடஸ்டி ப்ளைஸியை நம் அனைவருக்கும் தெரியும். பீட்டர் ஓ டோனல் மற்றும் ஜிம் ஹோல்டவே என்ற இருவரும் இணைந்து 1963-ம் வருடம் உருவாக்கிய காமிக்ஸ் கேரக்டரே மாடஸ்டி ப்ளைஸி. மாடஸ்டி ப்ளைஸி கதைகளை உருவாக்கியவர் பீட்டர் ஓ டோனல், அந்த கேரக்டருக்கு ஓவியங்களின் வாயிலாக உயிர் கொடுத்தவர் ஜிம் ஹோல்டவே. மாடஸ்டி ப்ளைஸி காமிக்ஸ் டெய்லி ஸ்ட்ரிப்பாக தினசரி பேப்பர்களில் வந்தது.


மாடஸ்டி ப்ளைஸி, ஒரு முன்னாள் குற்றவாளி. நிழல் உலக பெண் தாதாவாக இருந்து பிறகு மனம் திருந்தி ஒரு பெண் உளவாளியாக உருமாறுகிறார். அதாவது ஆரம்பத்தில் ANTI HEROINE, ANTI HERO கேரக்டர்கள், பின்னாளில் HEROINE & HERO.  காமிக்ஸ் உலகில் மாடஸ்டி ப்ளைஸி காமிக்ஸ் கதைகள் 1963-ல் இருந்து 2002-வரை 40 வருடங்களாக வெளிவந்தது. காமிக்ஸ் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் பிரபலமான பல காமிக்ஸ் பைனரி நட்சத்திரங்களின் நடுவே மாடஸ்டி ப்ளைஸியும், வில்லி கார்வினும் பளிச்சென மின்னுகின்ற ஒரு *பைனரி ஸ்டார் ஸிஸ்டம். மாடஸ்டி ப்ளைஸிக்கு ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்கா இடம் உண்டு.

 

மாடஸ்டி ப்ளைஸி ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர். அவருக்கு பல காதலர்கள் என்று இருந்தாலும்  நிரந்தரமான காதலர் கிடையாது, ஆனால் நண்பர் உண்டு. மாடஸ்டியின் இதயத்தில் வேறு எந்தக் காதலருக்கும் கிடைக்காத உண்ணதமான நெருங்கிய இடம் வில்லி கார்வினுக்கு உண்டு. மாடஸ்டி ப்ளைஸிக்கும் வில்லி கார்வினுக்கும் இடையே நிலவும் நட்பானது அலாதியானது. மாடஸ்டி ப்ளைஸியுடன் வில்லி கார்வின் நெருக்கமாக இருப்பது, வில்லி கார்வினின் பெண் தோழிகளுக்கு பொறாமையை ஏற்படுத்தும் அதே சமயம் மாடஸ்டியின் ஆண் நண்பர்களுக்கும் கார்வினின் மேல் பொறாமை ஏற்படும். மாடஸ்டிக்கு கார்வின் ரைட் ஹேண்ட், கார்வினுக்கு மாடஸ்டி ரைட் ஹேண்ட். வழக்கமாக எல்லா கதைகளிலும், சினிமாக்களிலும் அது கோலிவுட் படமானாலும் சரி அல்லது ஹாலிவுட் படமானாலும் சரி, ஆண்களையே ஹீரோவாக சித்தரித்து எடுக்கப்படும் படங்களே அதிகம். ஒரு சில படங்களில் மட்டுமே பெண்ணுக்கு ஹிரோயினாக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. பெண்ணை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட கதையில் முதன்மையான கதை மாடஸ்டி ப்ளைஸியின் கதை. 

இதுவரை மாடஸ்டி ப்ளைஸியின் கதைகள் இருமுறை படமாக்கப் பட்டிருக்கிறது. முதல் முறை 1966-ம் வருடம் “மாடஸ்டி ப்ளைஸி” என்ற பெயரிலும், இரண்டாம் முறை 2004-ம் வருடம் பிரபல தயாரிப்பாளர் அண்ட் டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவின் தயாரிப்பில் “மை நேம் இஸ் மாடஸ்டி: எ மாடஸ்டி ப்ளைஸி அட்வெஞ்சர்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 2004-ம் வருடம் வெளிவந்த க்வேண்டின் டாரண்டினோவின் மாடஸ்டி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி மை நேம் இஸ் மாடஸ்டி படத்தைப் பற்றி கூறுகிறேன்.



தென்கிழக்கு ஐரோப்பா ”பால்கன்” (BALKAN) என்று அழைக்கப்படுகிறது. இந்த பால்கன் பிரதேசம் பல கிழக்கு ஐரோபிய நாடுகளை உள்ளடக்கியது. கதை ஆரம்பிப்பது இந்த பால்கன் பிரதேசத்தின், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு இடத்தில். நான்கு போர் வீரர்கள் ரோந்து செல்லும் போது, வழியில் இருக்கும் போரினால் சிதிலமடைந்த பிரம்மாண்டமான கிரேக்க அரண்மனை போன்றிருக்கும் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவே அமர்ந்து உணவருந்துகின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவே ஒரு 10 வயது சிறுமி நிற்பதை பார்க்கின்றார்கள். கந்தலான உடையும், அழுக்கு நிறைந்த உருவமுமாக, பசியோடிருக்கும் சிறுமியை பார்த்து இரக்கமடைந்த ஒரு போர் வீரர், தன்னிடம் இருக்கும் சீலிடப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு டப்பாவை கொடுக்கிறார். அதை வாங்கிய சிறுமி, அந்த டப்பாவை அவளிடம் இருக்கும் கட்டையால் அடித்து திறக்க முயற்சி செய்கிறாள். இதைக் கண்டு போர் வீரர் அவரிடம் இருக்கும் டின் ஒப்பனரை சிறுமியிடம் கொடுக்கிறார். சிறுமி அதை வாங்கி, அந்த டின் ஓப்பனரை கொண்டு டின்னை அடித்து திறக்க முயற்சி செய்கிறார், பின் போர் வீரரே அந்த டின்னை ஓபன் செய்து தந்து விட்டு, தன் நண்பர்களை பார்க்க ஒரு நொடி திரும்புகிறார், அடுத்த கணம் அந்த சிறுமி காணாமல் போய்விடுகிறாள். அந்த இடிபாடுகளுக்கு நடுவே முழுக்க தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுவே மை நேம் இஸ்  மாடஸ்டி படத்தின் துவக்க காட்சி.
 
இதற்கடுத்து நாம் பார்ப்பது இளம் பெண்ணாக வளந்துவிட்ட மாடஸ்டி, ஒரு சூதாட்ட க்ளப்பில்  ரௌலட் சக்கரத்தின் முன் நிற்கிறார். ஒரு ரௌலட் ஆடும் நபர் அதிக அளவில் பணம் ஜெயித்தபடி இருக்கிறான், அந்த சமயத்தில் சூதாட்ட விடுதி நடத்துபவர், மாடஸ்டியை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்து, லேசாக தலையை அசைக்கிறார். உடனே மாடஸ்டி, ரௌலட் விளையாட்டை நடத்தத் துவங்குகிறார். மாடஸ்டி நடத்தத் துவங்கியதும், மாடஸ்டியின் சாதூர்யத்தினால் ரௌலட் ஆடும் நபர் அத்தனை பணத்தையும் கிளப்பிடம் தோற்றுப் போகிறான். கிளப் ஓனர், மேல் மாடியில் இருந்து மாடஸ்டியை பாராட்டும் விதமாக பார்க்கிறார்.
விடுதி மூடும் நேரம் வருகிறது.


கிளப் ஓனர், கிளப்பை விட்டு காரில் கிளம்புகிறார். வழியில் கிளப் ஓனரின் காரை சில கார்கள் வழிமறிக்கின்றன. கிளப் ஓனரின் டிரைவரே அவரைக் கொல்ல முயற்சிக்கின்றான். வழிமறித்த கார்களில் வந்த நபர்களினால் கிளப் ஓனர் கொல்லப்படுகிறார். கிளப் ஓனர் கொல்லப்படுவது மைக்லாஸ் என்ற தீவிரவாதியினால். மைக்லாஸுக்கும், நெட்வொர்க் தலைவனான க்ளப் ஓனருக்கும் இருக்கும் பழைய பகையே, க்ளப் ஓனர் கொல்லப்பட காரணம்.

க்ளப்பில் இருக்கும் மாடஸ்டியும் மற்ற ஊழியர்களும், கிளப்பை மூடும் வேலையில் மும்முரமாக இருக்கும் போது, க்ளப் ஓனரை கொலை செய்த மைக்லாஸ் கும்பல், கிளப்புக்குள் இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்து க்ளப்பை தங்கள் வசமாக்கிக் கொள்கின்றனர். கும்பலின் தலைவன், அங்கிருக்கும் ஊழியர் ஒருவரை பிடித்து கிளப்பின் இரும்புப் பெட்டியை எப்படி திறப்பது என்று கேட்டு, துன்புறுத்தி, அந்த ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துகிறான். நெட்வொர்க் குருப்பின் ஒரு பெரும் போதை மருந்து கடத்தலின் விளைவாக பெரும் பணம் க்ளப்பின் பெட்டகத்தில் இருக்கிறது. அதை கொள்ளை அடிப்பதே மைக்லாஸின் திட்டம்.

 
ஊழியரை காப்பாற்ற மாடஸ்டி தைரியமாக முன்னால் வந்து கும்பலின் தலைவனோடு பேசுகிறாள். கொள்ளை கும்பலின் தலைவனோ பணப் பெட்டகத்தை திறப்பதிலேயே மும்முரமாக பேசுகிறான். இரும்புப் பெட்டகத்தை திறக்கும் வழிமுறை இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும் என்றும், ஒருவர் க்ளப்பின் ஓனர், மற்றொருவர் க்ளப் ஓனரின் நம்பிக்கைக்கு பாத்திரமான, க்ளப்பின் முதன்மை ஊழியர் என்றும் கூறுகிறாள். ஓனர் கொல்லப்பட்டு விட்டதால், இப்போது அந்த முதன்மை ஊழியரால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும் என்றும், அந்த முதன்மை ஊழியரும் வெகுநேரம் முன்பே வீட்டுக்குச் சென்று விட்டார் என்றும், பாதுகாப்பு நடவடிக்கையாக, சூதாட்ட விடுதி முழுக்க சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைவாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் பெட்டகப் பூட்டின் அமைப்போடு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும், யாராவது பெட்டகத்தை உடைக்க முயற்சித்தாலோ அல்லது கம்ப்யூட்டரில் சரியான பாஸ்வேர்ட் கொடுக்காவிட்டாலோ, வெடிகுண்டுகள் வெடித்து, க்ளப் அமைந்திருக்கும் கட்டிடம் முழுக்க இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதறிவிடும் என்றும் கூறுகிறாள்.  கும்பலின் தலைவன் அனுமதித்தால், பூட்டை திறக்கும் ஊழியரை போன் மூலம் தொடர்பு கொண்டு க்ளப்புக்கு வரவைப்பதாகவும், க்ளப்பில் இருக்கும் ஊழியர்களை இதற்கு மேலும் துன்புறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறாள். கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும் இதற்கு சம்மதிக்கிறான்.

இப்போழுது, கொள்ளைக்கூட்ட தலைவன், மாடஸ்டியின் மேல் ஆர்வம் காட்டுகிறான். பெட்டகத்தை திறக்க வரும் ஊழியர் தொலைதூரத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகும் என்பதால், அதுவரை மைக்லாஸை தன்னுடன் ரௌலட் ஆட மாடஸ்டி சம்மதிக்க வைக்கிறாள். அதுவரை மாடஸ்டியின் கடந்த காலம் பற்றி யாருக்குமே தெரியாத நிலை இருப்பதால், அவளுடைய பூர்வீக கதையை மைக்லாஸ் கேட்கிறான். இதை தனக்கு சாதகமாக பயண்படுத்த மாடஸ்டி நினைக்கிறாள். இதன் விளைவாக மாடஸ்டிக்கும், கொள்ளைக் கூட்ட தலைவனுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்படுகிறது. அது கொள்ளைக் கூட்ட தலைவனும், மாடஸ்டியும் ரௌலட் கேம் ஆடவேண்டும். கொள்ளையர் தலைவன் ஜெயித்தால் மாடஸ்டி தன் பிறப்பின் ரகசியங்களை ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். அதே போல் மாடஸ்டி இரு முறை ஜெயித்தால், பிணைக் கைதியாக இருக்கும் க்ளப் ஊழியர்களில் ஒருவர் விடுவிக்கப் படவேண்டும். இதன்படி இருவருக்கும் இடையே ரௌலட் ஆட்டம் துவங்குகிறது.

கொள்ளைக் கூட்ட தலைவன் ஜெயிக்க, மாடஸ்டி தன் கதையை விவரிக்கின்றார். அந்த கதை, ஒரு அனாதை சிறுமி இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், மத்திய கிழக்குப் பகுதியில் பல நாடுகளில் சுற்றித்திரிகிறாள். இப்படி அலைந்திடும் சூழ்நிலையினால் அவளுக்கு எப்படிப்பட்ட கடினமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளிலும் உயிர் தப்பி வாழ்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்கிறாள். மாடஸ்டி ப்ளைஸியின் வாழ்கையின் துவக்க காலம் மிகவும் துன்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

அடுத்து நாம் சிறுமியை பார்ப்பது ஒரு அகதி முகாமில். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு முகாமில் இருந்து மாடஸ்டி ப்ளைஸியின் வாழ்க்கை துவங்குகிறது. அவளுக்கு, சமீபத்திய நினைவுகளைத்தவிர வேறு எந்த வாழ்க்கை சம்பவங்களும் நினைவில் இல்லை. சமயம் பார்த்து முகாமில் காவலுக்கு இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவை திருடி உண்பதில் திறமைசாலியாக இருக்கிறாள். அதுபோல் ஒரு நாள் ராணுவ வீரர்களின் உணவை திருடி வந்து ஒரு ஓரமாக அமர்ந்து நிதானமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, முகாமிலிருக்கும் சில வளர்ந்த சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு வயதான மனிதரை தாக்கி அவரது கைப்பையை அபகரிக்கப் பார்க்கின்றனர். அதைப் பார்க்கும் மாடஸ்டி, அந்த வயதானவரை, சிறுவர்களுடன் போரிட்டு காப்பாற்றுகிறாள். இந்த கைகலப்பில் ஒருவன் கத்தியால் மாடஸ்டியைக் கொல்ல முயற்சிக்கையில், மாடஸ்டி விலக அவர்களுள் ஒருவனே கத்தியால் குத்துப்பட்டு இறக்கின்றான். காவலுக்கு இருக்கும் ராணுவ வீரர்கள் மாடஸ்டியையும், வயதானவரையும் பிடிக்க துரத்துகின்றனர். இருவரும் தப்பி ஓடுகின்றனர். மாடஸ்டி பெரியவரை தப்பிக்க வைத்து ஒரு மறைவான புதருக்குள் இருவரும் ஒளிந்து கொள்கின்றனர். ராணுவ ஜீப்பில் இவர்களை தேடி வரும் வீரர்கள், வாகனத்தை விட்டு இறங்கி சிறுமியையும், பெரியவரையும் தேடுவதற்காக ஜீப்பை விட்டு சற்று தள்ளி செல்லும் போது, சிறுமியும், அந்த பெரியவரும் ஜீப்பில் ஏறி தப்பித்து செல்கிறார்கள். அகதி முகாமை விட்டு வெகுதூரம் சென்ற பிறகு, ஜீப்பை ரோட்டிலேயே விட்டு விட்டு தங்களது பயணத்தை தொடர்கின்றனர். பின்னர் இரவானதும் இருவரும், போரினால் பாதிக்கப்பட்ட, ஆளரவமற்ற மறைவான இடத்தில் இரவைக் கழிக்கின்றனர்.

அந்த வயதானவர் ஒரு யூதர். அவர் பெயர் லோப். லோப் ஒரு பேராசிரியர் மற்றும் நிறைய படித்த அறிஞர். அரசாங்கத்துக்கு எதிரான சில உண்மைகளை மக்களிடம் வெளிப்படுத்திய காரணத்தால், சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின் சிறைக் காவலாளிகள் இருவரை கொன்றுவிட்டு தான் சிறையில் இருந்து தப்பி வந்ததாகவும் சொல்கிறார். சிறுமி அவரிடம் ”அந்த சிறுவர்கள் உங்கள் கைப்பையை ஏன் பறித்தனர், அப்படி என்ன அதில் மதிப்பு மிக்க பொருட்கள் இருக்கிறது” என்று கேட்கிறார். அதற்கு லோப், அந்த சிறுவர்கள் தனது பையில் ஏதேனும் பணம் இருக்கும் என்று நினைத்து அதை பறிக்க முயற்சித்தனர் என்று கூறுகிறார். உங்கள் பையில் பணம் இருக்கின்றதா என்று சிறுமி கேட்ட கேள்விக்கு பதிலாக, லோப் தனது பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுக்கிறார். அந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ் மிக்க மன்னர் ஆர்தரைப் பற்றியது என்றும் கூறுகிறார். சிறுமி மாடஸ்டிக்கு அந்த புத்தகத்தில் எந்த ஆர்வமும் எற்படவில்லை. அந்த புத்தகத்தில் இருப்பது ஒரு அருமையான உண்மைக் கதை என்று சிறுமி மாடஸ்டியின் ஆர்வத்தை தூண்டும் விதமாக சொல்லிவிட்டு லோப் தூங்கிவிடுகிறார். லோப் தூங்கிய பிறகு சிறுமி மாடஸ்டி அந்த புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்க்கிறாள். இதை தூங்குவது போல் இருக்கும் பெரியவர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

பிறகு லோப், மாடஸ்டிக்கு அனைத்து தற்காப்புக் கலைகளையும், வேட்டையாடவும், ரௌலட் போன்ற சூதாட்ட விளையாட்டுக்களையும், பல மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுத்தருகிறார். இருவரும் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.


ஒரு நாள், லோப், மாடஸ்டியிடம் சொல்கிறார், ”நாம் ஊர் ஊராக செல்வதற்கு பதில் அடுத்து ஏதேனும் ஒரு ஊரில் நிரந்தரமாக தங்கிவிடலாம், ஆனால் அதற்கு நமக்கு பாஸ்போர்ட் வேண்டும். அப்படி பாஸ்போர்ட் வேண்டும் என்றால் உனக்கு ஒரு பெயர் வேண்டு. அதற்கு என்ன செய்ய போகிறாய், என்று கேட்க ஏற்கெனவே என் பெயர் மாடஸ்டி என்று கூறுகிறாள். அப்படியென்றால் விண்ணப்ப படிவத்தில் உள்ள செகண்ட் நேம் என்ற இடத்தில் நிரப்ப, உனக்கு செகண்ட் நேம் வேண்டும், அதற்கு என்ன செய்ய போகிறாய் என்று லோப் கேட்கிறார். உடனே மாடஸ்டி, லோப் தன்னை தன் மகள் போல பார்த்துக் கொண்டதால் அவருடைய செகண்ட் நேமையே தன்னுடைய செகண்ட் நேமாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறும் போது, செகண்ட் நேம் என்பது உன்னைப்பற்றி நீ சொல்லும் விதத்தில் நீயே தேர்ந்தெடுக்க வேண்டும், சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை நன்கு ஆலோசித்து தேர்ந்தெடு என்று சொல்கிறார். சற்று நேரம் யோசித்த பின் என் செகண்ட் நேம் ப்ளைஸி என்று  மாடஸ்டி சொல்கிறாள். ப்ளைசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தாய் என லோப் வினவ, கிங் ஆர்தரின் கதை புத்தகத்தில் இருந்து அந்த பெயரை எடுத்ததாகவும், அந்த கதையில் வரும் மந்திரவாதி மெர்லினினுக்கு மந்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்த குருவின் பெயர் ப்ளைசி, எனவே அந்த பெயரையே தன்னுடைய செகண்ட் நேம் ஆக வைத்துக் கொண்டதாகவும் சொல்கிறாள். இதற்கடுத்து இவர்களின் பயணத்தில், இரண்டு படைப் பிரிவினரின் இடையே நடக்கும் கடும் சண்டையின் நடுவே இருவரும் மாட்டிக் கொள்ள, அங்கு ஏற்படும் குண்டு வெடிப்பில் லோப் இறக்கிறார்.

பாலைவனத்தின் வழியே பயணம் செய்யும் மாடஸ்டி அடுத்து போகும் ஊரில் பசி கொடுமை தாளாமல், மார்கெட்டில் பழத்தை திருட முயற்சித்து தோல்வி அடைகிறார். ஆனால் பிக்பாக்கெட் அடிப்பதன் மூலம் ஒரு மணிபர்ஸ் கிடைக்கிறது. இதனை அங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதர் பார்த்து, திருடுவது தவறு, என்று அறிவுரை கூறி சாப்பிட உணவு வாங்கித் தருகிறார். உழைத்து சம்பாதிக்கும் மனதிருந்தால் மாடஸ்டிக்கு தன் க்ளப்பிலேயே வேலை தருவதாக கூறுகிறார். இதற்கு பிறகு அந்த நபரின் சூதாட்ட விடுதியில் மாடஸ்டிக்கு வேலை கிடைக்கிறது. சூதாட்ட க்ளப்பின் தலைவர் தான் நெட்வொர்க் குருப்பிற்கும் தலைவர்.

சூதாட்ட க்ளப் ஓனர் ஏன் கொல்லப் படுகிறார் ?
கொள்ளைக் கூட்ட தலைவனுக்கும் க்ளப் ஓனருக்கும் விரோதம் ஏற்பட்டதன் காரணம் என்ன?
பெட்டகத்தை திறப்பதற்காக வரும் க்ளப்பின் முதன்மை ஊழியர் வந்தாரா?
கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து மாடஸ்டியும் மற்ற க்ளப் ஊழியர்களும் எப்படி தப்பிக்கின்றனர்?
படத்தின் முடிவில்,கொள்ளைக் கூட்டத் தலைவனிடம் மாடஸ்டி ஏன் நன்றி சொல்கிறார்?

இந்த கேள்விகளுக்கு விடை காண நீங்களும் இந்த படத்தை பாருங்கள். ஏற்கெனவே பார்த்திருந்தால், இந்த பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களை கமெண்ட்டுகளாக இடுங்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் இன்னும் சில விஷயங்கள் நான் சொல்ல வேண்டியது இருக்கிறது.

இந்த படத்தின் அட்டையில் க்வேண்டின் டாரண்டினோவின் “மை நேம் இஸ் மாடஸ்டி ப்ளைஸி என்று போட்டிருந்தாலும், க்வேண்டின் டாரண்டினோவிற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு, படச்சுருள் பெட்டியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.


டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு மாடஸ்டி ப்ளைசி காமிக்ஸ் கதைகளின் அதிதீவிர ரசிகர். மாடஸ்டி கேரக்டர் மீது அவருக்கு எப்போதும் அதீதமான பிரியம். நெடுநாட்களாக, அவர் மாடஸ்டி கதையை படமாக தயாரிப்பதற்கு திட்டம் வைத்திருந்தார். அதற்காக மாடஸ்டி காமிக்ஸ் மற்றும் நாவல் புத்தக கேரக்டர்களின் திரை உரிமைகளை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அவரால் படமாக்க முடியவில்லை. அதனால் இந்த படம் தயாரிக்க உரிமைகளை கொடுத்தார். அதனால் மட்டுமே அவரது பெயர் படத்துடன் சேர்த்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. நேரடியாக டிவிடி படமாகவே வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்தது.

இங்கு என்னுடைய இரண்டு ஊகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

ஊகம் ஒன்று: டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு மாடஸ்டி கதைகளின் மேல் தீவிர ஆர்வம் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால் அவரின் அந்த கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அவரது டைரக்‌ஷனில் வெளிவந்த கில் பில் படத்தை பார்க்கும் வாய்ப்பு உங்களில் பல பேருக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மாடஸ்டியின் கதைகளே அவருக்கு கில் பில் கதையை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கில் பில் படத்தில் ஹீரோவே கிடையாது. ஹீரோயின் மட்டும் தான்.


நடிகை உமா துர்மன் தான் கில் பில் படத்தின் முதன்மை கேரக்டர். மாடஸ்டி ப்ளைசி கேரக்டருக்கு உமா துர்மன் சிறந்த தேர்வாக இருப்பார் என்றே நினைக்கின்றேன். கில் பில் படத்தில் உமா துர்மேன் கேரக்டர், படம் முழுக்க உபயோகிக்கும் ஆயுதம் ஒரு சாமுராய் வாள். மாடஸ்டியும் பெரும்பாலும் துப்பாக்கி தவிர்த்த மற்ற ஆயுதங்களையே பெரும்பாலும் உபயோகிப்பார்.

  
கில் பில் படத்தில் இரண்டாம் பாக முடிவில் ”பில்” கேரக்டர் பேசும் வசனத்தில் காமிக்ஸ் கேரக்டர்களை உமா துர்மன் கேரக்டரோடு ஒப்பிட்டு ஒரு நீண்ட ஒரு விளக்கம் அளிப்பார். அந்த வசனத்தை கவனித்தாலே டாரண்டினோவிற்கு காமிக்ஸ் மேல் உள்ள காதல் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். நண்பர்கள் யாரேனும் அந்த வசனத்தை கவனித்திருந்தால், உங்கள் அனைவரிடமிருந்தும் அதைப் பற்றிய கமெண்டுகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஊகம் இரண்டு: டைரக்டர் க்வேண்டின் டாரண்டினோவிற்கு கில் பில் படத்தை எடுக்க இன்ஸ்பிரேஷனாக மாடஸ்டி இருந்திருக்க வாய்ப்பு இருப்பதை பார்த்தோம். இப்போது பீட்டர் ஓ டொனல் மாடஸ்டி ப்ளைஸி கேரக்டரை உருவாக்குவதற்கு எது இன்ஸ்பிரேஷனாக இருந்து இருக்கும்?

இது பற்றிய எனது கருத்துக்களை ஊகம் என்று சொல்லாமல் ஆனித்தரமாக இதுதான் என்று தைரியமாக சொல்லப் போகிறேன். ஏனெனில் அதற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவதாலேயே இந்த தைரியமான டயலாக்!.


கிங் ஆர்தரின் கதையே பீட்டர் ஓ டோனலுக்கு மாடஸ்டி கேரக்டரை உருவாக்க இன்ஸ்பிரேஷன். இப்போது கிங் ஆர்தரின் கதையை உங்களுக்காக சுருக்கமாக சொல்வதற்கு முயற்சி செய்கிறேன்.

கிங் ஆர்தரின் கதை
இங்கிலாந்தின் வரலாற்றில் மூன்று விஷயங்களுக்கு என்றுமே நிரந்தர இடம் உண்டு. ஒன்று, எக்ஸ்கேலிபர் என்றழைக்கப்படும் மந்திர சக்தி வாய்ந்த வலிமையான நீண்ட வாள்.


இரண்டு, மந்திரவாதி மெர்லின்,


மூன்று, கிங் ஆர்தர்.


இப்போது கதைக்கு செல்வோம்.

இங்கிலாந்தை ஆண்ட ஒரு மன்னனுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாமல் போகிறது. அந்த மன்னன் இறக்கும் தருவாயில், அடுத்த வாரிசை கண்டுபிடிப்பதற்காக ஒரு ஏற்பாட்டினை செய்கிறான். அது, கொல்லன் பட்டறையில் இரும்பு அடிக்கும் ஒரு பெரிய மேஜையின் நடுவே ஒரு பெரிய நீண்ட வாள், அதன் பாதி மட்டுமே வெளியில் தெரியும் அளவிற்கு சொருகப்பட்டு இருக்கிறது. வாளுடன் உள்ள அந்த இரும்பு அடிக்கும் மேஜையை நகரின் நடுவே ஒரு மேடையை கட்டி அதன் மேல் வைத்துவிடுகிறான். அந்த வாளை, இரும்பு மேஜையில் இருந்து யார் உருவி எடுக்கின்றாரோ அவரே இங்கிலாந்து தேசத்தின் அடுத்த மன்னர் என்று ஊர் முழுதும் தெரிவிக்கப்படுகிறது. வாரிசு இல்லாத போது, மக்களிடையே இருந்து அரசாள்வதற்கு இது போன்ற முறை நமது நாட்டிலும் உண்டு. அது பட்டத்து யானையிடம் ஒரு மாலை கொடுத்து, யானை யார் கழுத்தில் மாலையை போடுகிறதோ, அந்த நபரே மன்னராக தேர்வு செய்யப்படுவார். சரஸ்வதி சபதம் என்ற தமிழ் திரைப்படத்தில் இந்த காட்சியும், ”யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி” என்ற பாடலும் உண்டு. சென்ற வருடம் வெளிவந்த THOR ஆங்கில படத்தை பார்த்தீர்களா, அதில் தார் சுத்தியல் ஒரு பள்ளத்தின் நடுவே இருக்கும், அதை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று முயற்சி செய்வார்களே, அதுபோல மன்னராகும் ஆசையில், இங்கிலாந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த மேஜையில் இருக்கும் கத்தியை எடுக்க முயற்சி செய்கிறார்கள். கத்தி துளியும் அசையவில்லை. பல மாத முயற்சியில் யாராலும் கத்தியை எடுக்க முடியாததால், அந்த இரும்பு மேஜையும், கத்தியும் தனித்தனி அல்ல, இரண்டுமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவை, அந்த மேஜையில் இருந்து கத்தியை எந்த நாளிலும் எடுக்க முடியாது என்று விட்டு விடுகிறார்கள்.

மந்திரவாதி மெர்லின், தனது ஒரு பயணத்தின் போது, அனாதை சிறுவனான ஆர்தரை சந்திக்கிறார். மெர்லினின் சக்தியால் அந்த சிறுவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. ஆர்தரை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆர்தரும், மெர்லினை தன் குருவாக ஏற்கிறார்.


பின் ஆர்தரை, கத்தி சொருகியுள்ள இரும்பு மேஜை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, மேஜையில் உள்ள கத்தியை எடுக்க சொல்கிறார், அதற்கு ஆர்தர், அது சாத்தியம் இல்லை என்றும், இதுவரை பெரிய பராக்கிரமசாலிகளாலும் அந்த கத்தியை எடுக்க முடியவில்லை என்றும், தன்னாலும் அந்த கத்தியை எடுக்க முடியாது என்று கூறுகிறான். யாருக்கு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடும் பாக்கியம் இருக்கிறதோ அந்த ஒருவனாலேயே இந்த வாளை, மேஜையில் இருந்து உருவி எடுக்க முடியும். இதுவரை அந்த கத்தியை எடுக்க முயற்சி செய்த அனைவருக்கும் மன்னராகும் வாய்ப்பு இல்லாததால், கத்தி அசைந்து கொடுக்கவில்லை. கத்தியும் மேஜையும் தனித்தனி என்று எண்ணியவாறு கத்தியை எடுத்தால் வரும், நம்பிக்கைதான் முக்கியம் என்று சொல்கிறார். ஆர்தரும் அவ்வாறே முயற்சி செய்ய, இரும்பு மேஜையில் இருக்கும் கத்தி, வெண்ணையில் சொருகப்பட்ட கத்தி போல வெளிவருகிறது. அனாதை ஆர்தர், அரசன் ஆர்தர் ஆகிறான்.


மெர்லின், ஆர்தருக்கு அனைத்து திறன்களையும் கற்றுத்தந்து, இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய தண்ணீர் ஏரியின் உள்ளே இருக்கும் ஒரு தேவதையிடம் (LADY OF THE LAKE) இருக்கும் எக்ஸ்கேலிபர் வாளை ஆர்தர் பெற வைத்தார்.


ஹோலி க்ரெய்ல் என்ற ஒரு கிண்ணத்தைப் பற்றி பல கதைகள் நிலவுகிறது. இறைதூதர் இயேசு கிறிஸ்து, லாஸ்ட் சப்பர் என்னும் அவருடைய கடைசியான விருந்தில், இந்த ஹோலி க்ரேய்லில் தான் ஒயின் அருந்தினார் என்றும், இயெசு சிலுவையில் அறையப்பட்ட போது இந்த கிண்ணத்தில் அவருடைய ரத்தம் சேகரிக்கப்பட்டது என்றும், பல கதைகள் உலகில் உலாவுகிறது. அந்த ஹோலி க்ரேய்லின் பாதுகாவலராக கிங் ஆர்தரே சித்தரிக்கப்படுகிறார். மெர்லினின் துணையோடு, கிங் ஆர்தர் பல நாடுகளை வென்று, துண்டு துண்டாக சிதறி இருந்த இங்கிலாந்தை யுனைடட் இங்கிலாந்தாக ஒன்றினைக்கிறார். இன்றளவும் இங்கிலாந்தின் பெயர் யுனைடட் கிங்டம், யு.கே.


இந்த கிங் ஆர்தர் ஒரு அனாதை. மாடஸ்டியும் ஒரு அனாதை. கிங் ஆர்தரின் கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றி, தற்போதய வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி கதைகளை உருவாக்கியிருக்கிறார் பீட்டர் ஓ’டோனல். மந்திரவாதி மெர்லினே புரெபஸர் லோப். மாடஸ்டியும் அனாதையாக இருந்து புரபஸர் லோப்பின் ட்ரெயினிங்கில் அனைத்து தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்கிறார். விதிவசத்தினால் நெட்வொர்க் குரூப்பிற்கு தலைவி ஆகிறார்.


மேலும் வில்லி மாடஸ்டியை அழைப்பது இளவரசி என்றுதான். அனாதை சிறுமி மாடஸ்டியின் கையில், புரபஸர் லோப் கொடுக்கும் புத்தகம் கிங் ஆர்தரைப் பற்றியது. மாடஸ்டி தன் செகண்ட் நேம் ஆக தேர்ந்தெடுக்கும் பெயர், மந்திரவாதி மெர்லினின் குருவின் பெயரான ப்ளைஸி என்பதையே. இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஏதோ ஒரு மாடஸ்டி காமிக்ஸில் கூட மந்திரவாதி மெர்லினின் சிலையை கண்டுபிடிக்கும் ஒரு கதை வந்ததாக ஞாபகம். அது மாடஸ்டி கதையா, அல்லது வேறு யாரோ ஒருவருடைய கதையா, முத்துவில் வந்ததா அல்லது ராணி காமிக்ஸில் வந்ததா என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. நண்பர்கள் யாருக்கேனும் நினைவிலிருந்தால் தெரிவியுங்களேன்.    

கில் பில் உமா துர்மேனின் கேரக்டரோடு மாடஸ்டியை ஒப்பிட்டதும், கிங் ஆர்தரோடு ஒப்பிட்டதும் முழுக்க முழுக்க என்னுடைய சொந்த எண்ணங்களே. இந்த எண்ணங்களை எந்த வலைத்தளத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை.

மை நேம் இஸ் மாடஸ்டி படம், மாடஸ்டியின் ஆரம்ப கால வாழ்கையும், மாடஸ்டி எப்படி நெட்வொர்க் குருப்பிற்கு தலைவியாக ஆனார் என்பதையுமே. அதனால் இந்த படத்தில் வில்லி கார்வின் கிடையாது. இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் டைப் படம்; அதனால் அதிக ஆக்‌ஷன் காட்சிகளை இந்தப் படத்தில் எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் கொஞ்சமேனும் மாடஸ்டி கதைகளை ரசித்திருந்தால், தவறாது இந்த படத்தை பார்த்துவிடுங்கள். இந்த திரைப்படம் மாடஸ்டி ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தி தரும்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

24 comments:

  1. இப்படி ஒரு திரைப்படம் வந்தது எனக்கு தெரியாது,
    தகவலுக்கு நன்றி.விரைவில் பார்கிறேன்.
    பதிவு நன்றாக இருந்தது.பதிவின் நீளதினால் திரைபடத்தின் கதையை சுருகிவிட்டீர்கள்.
    நிச்சயம் பார்த்துவிட்டு எனது கருத்தை கூறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் நன்றி கிருஷ்ணா. நீங்கள் சொல்வது மிகச் சரியே, பதிவு நீ...ண்டுவிட்டது. படம் பார்த்துவிட்டு, உங்கள் அனுபவம் எப்படி என்று கூறுங்கள்.

      Delete
  2. வாவ்... ஒரு பதிவிற்கு எவ்வளவு உழைக்கிறீர்கள்... சூப்பர் நண்பரே,
    நான்ஸ்டாப்பா படித்து முடித்தேன். நான் இதுவரை கேள்விபடாத விபரங்கள்.
    வித்தியாசமான பதிவு. அப்புறம் வழக்கம் போல் அழகான உங்கள் எழுத்துநடை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கார்த்தி. பல ஒரு மாத காலத்திற்கும் மேலாக ட்ராப்ட்டாக தயாரிப்பில் வைத்திருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. காலதாமதத்தினால் சிறுக சிறுக பல கருத்துக்கள் சேர்ந்து முழுமையானது. உண்மையில் சொல்வதானால், டார்க் க்னைட் பதிவுக்கு அடுத்து அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட பதிவு இது.

      Delete
  3. my name is modesty - torrent டவுன்லோட் போட்டாச்சு தல...

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
  4. //“மை நேம் இஸ் மாடஸ்டி: எ மாடஸ்டி ப்ளைஸி அட்வெஞ்சர்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.//
    கண்டிப்பாக பார்த்து விடுகிறேன் நண்பரே :))
    .

    //நண்பர்கள் யாரேனும் அந்த வசனத்தை கவனித்திருந்தால், உங்கள் அனைவரிடமிருந்தும் அதைப் பற்றிய கமெண்டுகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். //
    மன்னிக்கவும் நண்பரே தங்களலவுக்கு நாங்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை ;-)
    .

    மாடஸ்டியில் ஆரம்பித்து கிளபில் கில்ல்பில் தொட்டு எக்ஸ் கலிபர் வந்து

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் அப்பாட அப்பாடா முடியல :))
    .

    ReplyDelete
    Replies
    1. சிபி நண்பரே, எப்படி இருக்கின்றீர்கள். ஸ்டீல் க்ளாவுடனான அனுபவத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. ஈரோட்டாருக்கு நீங்கள் கொடுத்த போஸ்களை பார்த்தால், உங்களுக்கு நல்ல நடிப்புத் திறன் இருக்கிறது என்று தெரிகிறது. கரெண்ட்டு ஷாக்குக்கு அடுத்து என் பதிவை படித்தவுடன் தலை சுற்றிவிட்டதா?

      //மன்னிக்கவும் நண்பரே தங்களலவுக்கு நாங்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை ;-)//
      காமிக்ஸ் மோகத்தினால் அந்த டயலாக் என் மனதில் நன்கு பதிந்துவிட்டது நண்பரே.
      வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  5. // ஹோலி க்ரெய்ல் என்ற ஒரு கிண்ணத்தைப் பற்றி பல கதைகள் நிலவுகிறது. இறைதூதர் இயேசு கிறிஸ்து, லாஸ்ட் சப்பர் என்னும் அவருடைய கடைசியான விருந்தில், இந்த ஹோலி க்ரேய்லில் தான் ஒயின் அருந்தினார் //
    இந்த கருத்தை வைத்து ஒரு ஆங்கிலப்படம் வந்துள்ளது ஆனால் பெயர்தான் நினைவுக்கு வரவில்லை நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. கிங் ஆர்தரின் கதைகளை கருவாகக் கொண்டு, பழைய புதிய என்று கிட்டத்தட்ட (அது என்ன கிட்ட தட்ட என்று யாரும் கேட்டு விடாதீர்கள்) 60, 70 படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. சமீப காலத்தில் வந்த படங்களில் ஹோலி க்ரேய்ல் படங்கள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருஸேட் மற்றும் டான் ப்ரௌனின் தி டாவின்ஸி கோட்.

      டாவின்ஸி கோட் படத்தில் இந்த ஹோலி க்ரேய்லை சேலிஸ் என்று சொல்லி அந்த சேலிஸ் என்பது கிண்ணம் அல்ல அது மேரி மெக்டலீனாவைக் குறிக்கின்றது என்றும் மேரி மெக்டலீனின் சமாதி ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர ம்யூசியத்தின் கண்ணாடி பிரமீட்டின் அடியில் மறைவாக இருக்கிறது என்றும் சொல்லியிருப்பார்கள்.
      கமெண்ட்டுகளுக்கு நன்றி நண்பரே.

      Delete
    2. // ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருஸேட //

      வாவ் சூப்பர் மிகச் சரி நண்பரே :))
      .

      Delete
    3. Indiana jones and the last crusade is the film on holy grail.

      Delete
  6. // கில் பில் உமா துர்மேனின் கேரக்டரோடு மாடஸ்டியை ஒப்பிட்டதும், கிங் ஆர்தரோடு ஒப்பிட்டதும் முழுக்க முழுக்க என்னுடைய சொந்த எண்ணங்களே. இந்த எண்ணங்களை எந்த வலைத்தளத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை. //

    இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் சொந்த கற்பனையே யாரையும் குறிப்பிடவில்லை
    இப்படித்தான் எல்லா படமும் போடும்பொழுது போடுறாங்க ஹ்ம்மம்ம்ம்ம் யாருக்கு தெரியும்
    இருந்தாலும் நாங்க நம்பிட்டோம் நண்பரே ;-)
    .

    .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நல்ல பாயிண்ட்டை பிடித்தீர்கள். ஹஹ்....ஹாஹ்ஹா....

      இங்கு ஒரு சிறிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நாம் நினைப்பது போல் எண்ணம் என்பது நமக்குள் மட்டும் உருவாகிற சங்கதி இல்லை. அப்படியென்றால் அது இன்னுமொரு மனிதருக்குள் வரக்கூடாது. நான் சொல்வது கூறிப்பிட்ட எந்த எண்ணத்தையும் அல்ல. எண்ணம் என்று பொதுவாகவே சொல்கிறேன். எண்ணம் தோன்றும் இடம் பிரபஞ்சம். அங்கிருந்தே நாம் அனைவரும் எண்ணங்களை பெறுகிறோம். இந்த கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எளிமையாக விளக்குவதென்றால், இன்றைக்கு இருக்கும் விஞ்ஞன வளர்ச்சியில் நூற்றுக் கணக்கான ரேடியோ மற்றும் டீவி அலைவரிசைகள் இருக்கின்றது.

      அனைத்திலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியின் ஒலி, ஒளிபரப்பு போய்க் கொண்டே இருக்கின்றது. நம்மிடம் அந்த ஒலி, ஒளிபரப்புக்களை கிரகிக்கும் எந்திரம் இல்லையென்றால் அந்த நிகழ்ச்சிகளை நம்மால் கேட்க, பார்க்க முடியாது. டிவி, ரேடியோ இரண்டும் நம்மிடம் இல்லையென்றாலும், நம்மைச் சுற்றி அந்த நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படாத வகையில் நம்மை சூழ்ந்தே இருக்கும், ஆனால் நமக்கு தெரியாது. இது மாதிரியே பிரபஞ்ச எண்ணமும்.

      நாம் அனைவரும் பிரபஞ்ச எண்ணத்தினால் சூழப்பட்டு இருக்கின்றொம். எதை நாம் கிரகிக்கின்றோமோ அதுவே நமது எண்ணம். பிரம்மன் எழுதிய தலை எழுத்து என்பது, நம்முடைய முளையில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும் ரிஸீவிங் சர்க்யூட். அந்த ரிஸீவிங் சர்க்யூட் பிரிண்ட் எதை கிரகிக்குமோ அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை. SO, நம் எல்லொருடைய தலையிலும் உள்ள பல ஸர்க்யூட்டில் ஒரு ஸர்க்யூடில் நிச்சயம் காமிக்ஸ் ஸர்க்யூட் பிரிண்டாகி இருக்கிறது. அதுவே நாம் அனைவரும் காமிக்ஸ் விஷயத்தில் ஒன்று படுகிறோம்.

      MIND IS THE GATHERER OF MATTERS என்று சொல்வதைவிட MIND IS THE RECEIVER OF MATTERS என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த கோணத்தில் யோசித்தால் GATHERER என்ற வார்த்தையும் RECEIVER என்ற வார்த்தையும் தரும் அர்த்தங்கள் ஒன்றுதான்.

      ஏற்கெனவே இரவுக்கழுகார் மாடஸ்டி பற்றி பதிவிடப் போவதாக சொல்லும் போதே இந்த பதிவை தயார் செய்து வைத்திருந்தேன். அவரின் பதிவோடு இந்த பதிவு CLASH ஆகிவிடக் கூடாது என்று இதை தாமதித்தேன். இரவுக்கழுகாரின் மாடஸ்டி பற்றிய பதிவில்
      //உங்களால் தான் என் பதிவு தாமதமாகிக் கொண்டே வந்தது. காரணம் ஏன் என்று பிறகு சொல்கிறேன்.// என்று ஒரு பின்னூட்டமும் போட்டேன். (பார்க்க: இரவுக்கழுகாரின் காமிக்ஸ் புதையல் XI - Modesty Blaise Collections பதிவில் இருக்கும் என்னுடைய பின்னூட்டத்தினை பார்க்கவும்)

      இந்த பதிவில் நான் ஒப்பீடு செய்தது போல வேறு யாரேனும் எனக்கு முன்பே ஒப்பீடு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்து, நண்பர்கள் யாராவது தெரியப்படுத்தினால், உடனே அவருக்கு நன்றி தெரிவித்து, பதிவை திருத்தி விடுகிறேன்.

      வித்தியாசமான உங்களது கமெண்ட்டை நான் மிகவும் பாராட்டுகிறேன். நன்றி

      Delete
    2. // அந்த ரிஸீவிங் சர்க்யூட் பிரிண்ட் எதை கிரகிக்குமோ அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை. SO, நம் எல்லொருடைய தலையிலும் உள்ள பல ஸர்க்யூட்டில் ஒரு ஸர்க்யூடில் நிச்சயம் காமிக்ஸ் ஸர்க்யூட் பிரிண்டாகி இருக்கிறது. அதுவே நாம் அனைவரும் காமிக்ஸ் விஷயத்தில் ஒன்று படுகிறோம். //

      அதே அதே அதே தான் நண்பரே :))
      .

      Delete
  7. டாப் .......டக்கர்....பதிவு...
    மாடஸ்டி&கார்வின் நட்பை சிலர் காதலர்களாக நினைத்துக்கொண்டுள்ளனர்.... அது அவர்கள் தவறில்லை ராணி காமிக்ஸ் செய்த கூத்து....

    ReplyDelete
  8. வாருங்கள் நண்பரே,

    பதிவிடாத போது கேட்டவர், பதிவிட்டு இரண்டு நாளாகியும் வரவில்லையே, புத்தக திருவிழாவும் முடிந்துவிட்டதே, இன்னும் காணமே, என்று நினைத்திருந்தேன்.

    வெட்டி வேலை பாக்குது என்று வீட்டிலுளோர் மனதில் திட்டினாலும், இரவுகளில் கொசு கடியில் பிரேக் டான்ஸ் ஆடியபடியும், பதிவுகளை உருவாக்கிய பின் மனம் சோர்வுறும் போதெல்லாம், நண்பர்களது பின்னூட்டங்களையும் பாராட்டுக்களையும் காணும்போது அந்த வலியும், சோர்வும் பறந்தோடி விடுகின்றது.

    உங்களுடைய, மற்ற நண்பர்களுடைய வாழ்த்துகளும், பாராட்டுக்களும் சோர்வுகளை விரட்டி அடுத்த பதிவிடலுக்கு உற்சாகத்தை தந்துவிடுகிறது.

    நானும் முதலில் மாடஸ்டி & கார்வின் நட்பை தவறாகத்தான் நினைத்திருந்தேன். அதற்கு காரணம், இருவரும் அரைகுறை உடைகளில் ஒன்றாக இருக்கும் காட்சிகளினால்தான். அதற்கு ராணி காமிக்ஸ்தான் காரணமா? இது எனக்கு தெரியாத தகவல் நண்பரே. தகவலுக்கு நன்றி.
    வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி ஈரோட்ட்டாரே.

    ReplyDelete
    Replies
    1. //அதற்கு ராணி காமிக்ஸ்தான் காரணமா?//
      "கடத்தல் இளவரசி" என்ற ராணிக்காமிக்ஸின் கதையை படித்து யாருக்காவது கதை புரிந்ததா என்று மட்டும் கேட்டுப்பாருங்கள்........இப்படியெல்லாம் காமிக்ஸ் வந்ததா என நொந்து பொவது நிச்சயம்

      Delete
    2. ராணி காமிக்ஸும் என் சேமிப்பில் இருக்கின்றது. வீடு மாறும் சமயம், காமிக்ஸ்களையும் தேவை தேவையற்றது என்று கழிக்க வேண்டிய கட்டாய நிலை உருவானது. அப்போது, ராணி காமிக்ஸில் இருந்த நிறைய காமிக்ஸ்களை எடைக்கு போட்டுவிட்டேன். இன்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. கடத்தல் இளவரசி இருந்தாலும் இருக்கலாம். ராணி காமிக்ஸில் வந்த சில கதைகள் அதற்கு முன்பாக இந்திரஜாலிலும், முத்துவிலும் வந்த கதைகளே. சில ராணி காமிக்ஸ்களை படித்து மனம் நொந்த சமயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றது. மேலும் ராணி காமிக்ஸ், கவர்ச்சியான கதைகள்தான் விற்பனையாகும் என்று நினைத்தோ என்னவோ பின் நாளில், முழுக்க ஜேம்ஸ் பாண்ட் கதைகளையே பிரதானமாக வெளியிட்டது என்று நினைக்கிறேன். இது போன்ற முடிவே ராணி காமிக்ஸுக்கு முடிவுகட்டியது என்று நினைக்கின்றேன்.

      Delete
  9. நண்பர் பாலாஜி சுந்தருக்கு நன்றாகக் கதை சொல்ல வருகிறது!
    மாடஸ்டி பற்றியும், திரைப்படத்தின் பின்னணி பற்றி நீங்கள் சேகரித்திருக்கும் தகவல்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
    வாழ்த்துக்களும், நன்றிகளும்!

    பி.கு: உங்கள் உழைப்பிற்கு நிஜமாகவே ஒரு 100 ரூபாய் நோட்டை உங்களின் பாக்கெட்டில் திணிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.


    ReplyDelete
  10. டியர் விஜய், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி. உங்களைப் போன்ற நண்பர்களின் பாராட்டுக்களை சம்பாதிக்கும் திருப்தி வேறெதிலும் கிட்டாது.
    //பி.கு: உங்கள் உழைப்பிற்கு நிஜமாகவே ஒரு 100 ரூபாய் நோட்டை உங்களின் பாக்கெட்டில் திணிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.//

    உங்களின் இந்த வாசகம் என் சிறுவயது ஞாபகத்தை கிளறி விட்டுவிட்டது. எனது தாய் வழி மாமா ஒருவர், எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும், கிளம்பும் முன் என் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாயை திணித்துவிட்டு செல்வார். இந்த வாசகத்தை படித்ததும் அவர்தான் நினைவுக்கு வந்தார்.

    அப்படியும் நீங்கள் அந்த 100 ரூபாயை கொடுத்தே தீருவேன் என்று உறுதியோடிருந்தால், அடுத்த நம் சந்திப்பின்போது நிச்சயம் பாக்கெட் இருக்கும் படியான உடைகளை அணிந்து வருகிறேன்.

    அவ்வப்போது நீர் இந்த 100 ரூபாயை காட்டும் போதெல்லாம், பேசாமல் ப்ளாகின் ஒரு ஓரத்தில் டொனேஷன் கேட்டு ஒரு விட்கெட் போட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. அப்படி போட்டு விட்டால் இருக்கும் நாலைந்து பின்னூட்டமிடுபவர்களும் தெரித்து ஓடிவிடுவார்கள்.

    வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும்,100 ரூபாய்க்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  11. எனக்கு தெரிந்த கதாபாத்திரங்கள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் மற்றும் சில மட்டுமே. இது புதிது... விரைவில் பார்த்துவிட்டு கூறுகிறேன் நண்பரே..

    ReplyDelete
  12. நண்பரே, வருகைக்கு நன்றி,

    கீழே இருக்கும் எனது வார்னிங்கை பார்த்துவிட்டீர்கள் அல்லவா? நீங்களும் அடிக்‌ஷன் ஆனவர்கள் லிஸ்டில் சேர வாழ்த்துக்கள்.

    வெல்கம் டூ அவர் காமிக்ஸ் சங்கம், சங்கமம்.

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிட்டுள்ள கதை மர்மப் பெட்டி நண்பரே! அதில்தான் மெர்லினின் சவப் பெட்டி என்ற கருத்து கையாளப்பட்டுள்ளது! ஹீ ஹீ ஹீ இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன்! சூப்பர்!!

    ReplyDelete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.