Wednesday, 20 June 2012


லயன் கம் பேக் ஸ்பெஷல் ஒரு இனிய அனுபவம் கடைசியாக எப்போது காமிக்ஸ் புத்தகம் வாங்கினேன் என்று தெரியவில்லை. பல வருடங்கள் ஆகிவிட்டிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பேப்பர் கடைக்கு செல்லும் போதும் காமிக்ஸ் புத்தகம் இருக்கின்றதா என்று விசாரிக்கும் போதும், இல்லை என்ற சொல்லே பதிலாக வந்தபோதும் விசாரணையை மட்டும் என்றும் நிறுத்தியது இல்லை.

சென்னையில் இருந்தாலும், என் ஆர்வத்திற்கு ஏற்றபடி நான் வாங்கும் புத்தகங்கள் எப்போதுமே எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கடைகளில்  கிடைக்காது. இப்போதும் 1 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கடைக்குச் சென்றுதான் புத்தகங்களை வாங்கி வருகின்றேன். டிஸ்கவரி புக் பேலஸ் செல்ல வேண்டும் என்றால் போக வர 32 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். திரு. கிங் விஸ்வாவின் http://tamilcomicsulagam.blogspot.in/ வலைதளத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றிய தகவலை படித்து, உடனே அங்கு போய் கிடைத்த  6 காமிக்ஸையும் அள்ளி வந்துவிட்டேன். அந்த லக்கி ட்ரிப் பற்றிய விவரங்களை இந்த தளத்திலேயே என்னுடைய முதல் வலைப்பதிவை படிக்கலாம்.

இந்த பதிவில் இடம் பெறும் படங்கள் அனைத்தும், நமது லயன் காமிக்ஸூக்கும் நோட்டுப் புத்தக அட்டைகளும் தரத்தில் எப்படி ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்ற என்பதற்காக இடம் பெறுகின்றன.  இப்போழுதெல்லாம் பள்ளிக்கூட நோட்டு புத்தகங்கள் ஆப்செட் பிரிண்டிங்கில் வண்ண மயமான அட்டைப் படங்களுடன் வருகின்றது. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தக அட்டையைப் பார்த்ததும் இது பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தைப் போல இருக்கின்றதே என்று மனதில் தோன்றியது. பில்லிங் கவுண்டர் டேபிள் மேலே ஒரு வண்ண பள்ளி நேட்டு சாம்பிளைப் பார்த்து அது வேறு ஏதே காமிக்ஸ் புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தகத்தை பார்த்த பிறகு இப்போது கலர்புல் அட்டை கொண்ட எந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தாலும் காமிக்ஸ் புத்தகத்தை பார்க்கும் உணர்வு தோன்றுகிறது. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தக அட்டைப் பட டிசைன் அந்த அளவுக்கு நேர்த்தியாக உருவாக்கப்பட்டு கலர் மேட்சிங் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முன்னெப்போதும் இருந்ததை விட அதிகமாகவே எடிட்டர் சிரத்தை எடுத்திருக்கின்றார்.


இப்போது கதைகளுக்கு வருவோம்.

லக்கி லூக்கின் ஒற்றர்கள் ஒராயிரம் கதை தரமான ஆர்ட் பேப்பரில், அருமையான வண்ண ஓவியங்கள். சிறந்த மொழிபெயர்ப்பு. ரசிக்கும் படியான கதை. இந்த கதையில் எனக்கு பிடித்த ஒரு ”கட்டத்தை” இங்கு அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன். பல இடங்கள் ரசிக்கும் படியான விதத்தில் இருந்தாலும் இந்த ஒரு கட்டத்தை  மிகவும் ரசித்தேன்.


கேப்டன் பிரின்ஸ் & கோவின் – கானகத்தில் களேபரம்.

அருமையான ஆர்ட் பேப்பரில், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணப் படங்கள். விறு விறுப்பான மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை. மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் வரைகலை. ஆங்கில ஆக்‌ஷன் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் உள்ள சித்திரங்கள் எல்லாம் பேசும்படங்கள். பிரின்ஸைக் குறிவைக்கும் துப்பாக்கியின் தோட்டா மரத்தூணை சிதரடிப்பதும், ஒடும் ஜின்னைக் குறிவைத்து வரும் தோட்டா, மரக்கிளையில் இடித்துக் கொள்ளாமல் ஜின் தலையை குனியும் போது அந்த மரக்கிளையை சிதரடிப்பதும் சிறந்த உதாரணங்கள். அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல், கொட்டும் மழையில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சி நெஞ்சைவிட்டு நீங்காதவை. இந்த கேப்டன் பிரின்ஸின் கானகத்தில் களேபரம் படக்கதை, என்றென்றும் என் பசுமையான நினைவுகளில் இடம் பெறும் ஒன்று.

இந்த சாகச கதையில், கேப்டன் பிரின்ஸின் கதையை முடிக்கத் துடிக்கும் வில்லன் கர்ட் ப்ரான்ஜன், ஏன் பிரின்ஸின் எதிரியானான், கேப்டன் பிரின்ஸுக்கும் வில்லன் கர்ட் ப்ரான்ஜனுக்கும் இடையே விரோதம் ஏற்பட காரணம் என்ன என்பதை 94வது பக்கத்தில் கடைசி படத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் போது, ஒரு நாலு அங்குல சதுரத்தில் எழுத்துக்களாகவே விவரித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், கதையை படித்து முடித்த பின் மனதில் தோன்றும் ஒரு சிறிய குறையும் இல்லாது போயிருக்கும். ஒருவேளை எனக்குதான் புரியவில்லையோ? பிரின்ஸும், கர்ட் ப்ரான்ஜனும் ஏற்கெனவே வெளிவந்த ஒரு முந்தைய வெளியீட்டில் மோதிக்கொண்டனரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஏனெனில் 2012க்கு முன் காமிக்ஸ் வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.  

இரும்புக்கை மாயாவியின் கதைகள் 2.
1. இரும்புக்கை மாயாவி vs Dr. Magno
2. கண்ணாமூச்சி ரே ரே
இந்த இரண்டு கதைகளும் சாதா பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை கதைகள். இந்த இரண்டு கதைகளும் சேர்த்து 77 பக்கங்களில் அச்சாகி இருக்கின்றது. இதில் 37 பக்கங்களின் மேலே இரும்புக்கை மாயாவி, இரும்புக்கை மாயாவி என்று அச்சாகி இருக்கும் தலைப்புகளை எடிட் செய்திருந்தால் மிச்சமாகும் இடத்தில் இன்னொரு கதையை வெளியிட்டிருக்கலாம்.
பிலிப் காரிகனின் சிறையில் ஒரு சீமாட்டி.
இட நெருக்கடி காரணமாக இந்த கதையின் தலைப்பை மார்ஜின் ஸ்பேஸ் இடத்தில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நினைகின்றேன். இட நெருக்கடியை சமாளிக்கத்தான் மார்ஜின் ஸ்பேசில் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கிறது என்றால் அது பாராட்டத் தகுந்த விஷயம். அதே சமயம் இந்த கதையின் முடிவில் இருக்கும் வெற்று இடத்தை அட்ஜஸ்ட் செய்து முன்னே கொண்டுவந்து இருந்தால் கதையின் தலைப்பை சிறப்பாக அச்சிட இடம் தாராளமாக இருந்திருக்கும்.

இந்த கதை டெய்லி வகையை சேர்ந்தது என்று எடிட்டர் அவர் ப்ளாக்கில் ஏற்கெனவே சொல்லி இருக்கின்றார். பத்திரிகையில் இந்த கதை தினத்தந்தி சிந்துபாத் கதை போல வந்த கதை. பேஜ் லே அவுட்டில் இடம் பெறும் ஒவ்வொரு வரிசை கட்டங்களும் ஒவ்வொரு நாள் வந்த கதையாக இருக்க வேண்டும்.

இந்த கதையின் படங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் சித்திரங்களின் துல்லியமும், நேர்த்தியும் மனதை ஈர்க்கிறது. சில இடங்களில் மட்டும் கருப்பு மையின் அளவை மட்டுப்படுத்தியிருந்தால் அந்த சித்திரங்களும் இன்னும் தெளிவாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு சில இடங்களில் மர்க்ளேவை ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்பத்தை உண்டு பண்ணுகின்றது. மர்க்ளே கதாபாத்திரம் ஒரு முதிர்கன்னி என்பதால் படத்தைப் பார்த்தால் ஒரு ஆணின் தேற்றமே தெரிகின்றது (எடிட்டர் என்ன செய்வார், அந்த கதாபாத்திரத்திற்கு அனைத்து தமிழர்களையும் மச்சான் ஆக்கிய நடிகையின் (சித்திரத்தை)போட முடிந்திருந்தால் போட்டிருக்க மாட்டாரா என்ன! அப்போதும் இது மாதிரி குழப்பம் வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் அதற்கெல்லாம் வெளிநாட்டு காமிக்ஸ் உரிமையாளர்களை மச்சான்களாக்காததால் சம்மதிக்க மாட்டர்கள்). 154வது பக்கத்தில் வில்லன்கள் பேசிக் கொள்ளும் போது மிஸஸ் மர்க்ளேவை, அவன் என்றே குறிப்பிடுகிறார்கள். இப்படியெல்லம் வாசர்களுக்கு குழப்பம் வரும் என்று தெரிந்த்துதான் கதையின் தலைப்பையே சிறையில் ஒரு சீமாட்டி என்று வைத்திருக்கின்றதே அப்புறம் ஏன்யா உனக்கு குழப்பம் என்கிறீர்களா. சரி, சரி, என் குழப்பத்தை நானே தெளிவித்துக் கொள்கிறேன்.

ஏஜெண்ட் பிலிப் காரிகன் கதைகளைப் பொறுத்தவரை, அவருடைய சாகச கதைகள் வேறு வேறாக இருந்தாலும், தனித்தனி புத்தகமாக இருந்தாலும் எப்போதும் ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் ஒரு லிங்க் இருந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு டாக்டர் செவன், டாக்டர் கர்லா கோபக் போன்ற கதாபாத்திரங்கள். இந்த கதையின் வில்லி மிஸஸ் மர்க்ளேயும் அப்படி ஒரு கேரக்டர் போலிருக்கிறது. மிஸஸ் மர்க்ளேயும், காரிகனுடன் மோதிக்கொண்டு சிறைச்சாலைக்கு போன கதையையும் ஒரு நாலுவரி வார்த்தையில் விளக்கி இருக்கலாம். ஒருவேளை அந்த கதையும் ஏற்கெனவே லயனில் வந்து நான் தான் வாங்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இந்த கதை ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படத்திற்கு, படம் தொடங்கிவிட்ட பிறகு, ஒரு மணி நேரம் கழித்து போய் முக்கியமான காட்சிகளை பார்க்காமல் தவற விட்ட  உணர்வே மிஞ்சுகின்றது.

எப்போதும் எடிட்டர் திரு. விஜயன் அவர்களைப் பற்றிய என்னுடைய கருத்து எப்படிப்பட்டதென்றால், திரு. விஜயன் காமிக்ஸ் வெளியிடுவதை பணம் சம்பாதிக்கும் பிசினஸ்ஸாக செய்யவில்லை, அவருக்கு காமிக்ஸ் புத்தகங்கள் மேல் உள்ள தீராத காதலால் தான் இந்த துறையில் இருக்கின்றார். ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனுக்குள்ளும் காமிக்ஸை அச்சிட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கும். அதை நடைமுறைப்படுத்த வசதியும் வாய்ப்பும் தைரியமும் எடிட்டர் திரு. விஜயனுக்கே இருக்கின்றது. லயன் கம் பேக் ஸ்பெஷல் வெளியிட்டதன் மூலம், திரு. விஜயன் தான் ஒரு சிறந்த காமிக்ஸ் ரசிகன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். 

மொத்தத்தில் லயன் கம் பேக் ஸ்பெஷல் ஒரு அதிரடியான மறுவரவு. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தகத்திற்கு என்றும் என் மனதில் ஒரு நிரந்தர இடம் உண்டு.

ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் அவசியம் வாங்க வேண்டிய ஒரு புத்தகம், லயன் கம் பேக் ஸ்பெஷல். ரசிகரல்லாதோரும் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்தால் அவர்களும் நம்ம காமிக்ஸ் ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்கள்.
நண்பர்களே உங்களது கமெண்ட்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். (மச்சான் நடிகை பற்றிய கமெண்ட்களைத் தவிர்த்து :P இல்லையென்றாலும் பரவாயில்லை பின் எப்படித்தான் பொழுது போவதாம்:))


அன்புடன்,
பாலாஜி சுந்தர்.

10 comments:

 1. நல்ல பதிவு நண்பரே.
  நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள்.
  உங்கள் பெரும்பாலான கருத்துக்களை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
  ஆனால் பிரின்ஸ் கதை மட்டும் சற்று விறுவிறுப்பு குறைந்ததாகவே தோன்றுகிறது.
  ஆனால் சித்திரங்கள் பற்றிய கருத்தை நான் 100 சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. டியர் இரவுக்கழுகு,
   உங்களது அதிவிரைவான எக்ஸ்பிரஸ் பின்னூட்டத்திற்கு நன்றி.
   இந்த கதையில் விறுவிறுப்பு குறைவு என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அது ஏனெனில் வழக்கமாக கேப்டன் பிரின்ஸ் சாகசங்களில் ஒரு புதிரோ அல்லது அட்வெஞ்சரோ அதை நோக்கிய பயணமே இருக்கும். அந்த பயணத்தை மேற்கொள்வது, அவர் விரும்பியோ அல்லது சூழ்நிலை கட்டாயத்தின் காரணமாகவோ இருக்கும். இந்த கதையில் கடைசீ வரை கர்ட் ப்ரான்ஜன்தான் காயை நகர்த்துகின்றான். கேப்டன் பிரின்ஸும் சூழ்நிலைக் கைதியாக அலைபடுகிறார். கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் கதையோடு ஒன்றாதது போல அமைந்துவிட்டது. இந்த கருத்தையே நான் மேலேயுள்ள எனது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். உதாரணத்திற்கு செகுவராவை நினைவுபடுத்தும் எல் லோபோ கேரக்டரும் எந்த அறிமுகமும் இல்லாமல் திடீரென்று நுழைகிறது, அது போலவே கர்ட் ப்ரான்ஜனுக்கும் அவனுடைய பெண்ணுக்கும் உள்ள டைமண்ட் ஒப்பந்தம். படகை கடத்துவது கர்ட் ப்ரான்ஜனின் பெண்தான் என்பதை கதைக்கு தேவையான் ட்விஸ்ட்டாகவே வைத்துக் கொள்வேம். அதே போல் கேப்டன் பிரின்ஸின் இதற்கு முந்தைய எல் லோபோவினுடனான கதையையும் மற்றும் கர்ட் ப்ரான்ஜனுடனான சாகசத்தையும் போட்ட பிறகுதான் இந்த கதையை போட்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, அது நடைமுறை சாத்தியமும் இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கின்றேன்.

   இங்கு நான் முன்வைக்கும் எளிமையான நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கை என்னவென்றால், ஒரு சிறிய செவ்வகத்தில் முன் கதைக் குறிப்பு. அது போதும்.

   உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மூன்று காமிக்ஸ் கதாநாயகர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 1. பேண்டம் என்ற முகமூடி, 2. மந்திரவாதி மண்ட்ரேக் மற்றும் 3. ப்ளாஷ் கார்டன்.
   இந்த மூவரின் கதைகளிலும் அவ்வப்போது பழைய கேரக்டர்கள் தலைகாட்டும். முகமூடி கதைகளில் வரும் வனக் காவல் படைத் தலைவர் கர்னல் ஒரபு, மண்ட்ரேக் கதைகளில் அவ்வப்போது வரும் வேற்றுலக மன்னர் மக்னான், பயங்கரவாத கும்பல் எட்டு, மண்ட்ரேக்கின் திசைமாறி போன சகோதரன் லூசிபர் மற்றும் எப்போதும் மண்ட்ரேக்கிற்கு பெரும் சவாலாக விளங்கும் களிமண் ஒட்டகம் என்ற கேரக்டர் அதேபோல் ப்ளாஷ் கார்டன் கதையில் வரும் மிங் தி மெர்ஸிலெஸ் (இவருடைய இன்ஸ்பிரேஷன் பயங்கரவாதி டாக்டர் செவன் ஆக இருக்கலாம் அல்லது வைசி வெர்சா!), மாங்கோ கிரகம், அர்போரியா நாட்டின் அரசர் பாரின் மற்றும் திரிலோக சஞ்சாரி என்றழைக்கப்படும் ”வில்லி” என்ற என்றும் பதினாறு கேரக்டர் (இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் சஞ்சீவி மலையை தூக்கிய சிரஞ்சீவி ஹனுமான்). இந்த கேரக்டர்கள் சார்ந்த கதைகள் வரும்போதெல்லாம், ஒரு சிறிய இண்ட்ரொடெக்‌ஷன் நாலைந்து கட்டத்திற்கு மேற்படாமல் அல்லது அரை பக்கத்திலோ இருக்கும். இதற்கு முன் அந்த கேரக்டரின் கதையை தெரியாதவர்கள் கூட சுலபமாக கதையோட்டத்துடன் ஒன்றிவிட முடியும்.
   லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தகத்தை வாங்கிய போது தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தாற் போலவும், ஒரு பழைய நண்பனை வெகு நாள் கழித்து மீண்டும் சந்தித்தது போலவும் உணர்ந்தேன். அதனால்தான் இந்த புத்தகம் பற்றி எடிட்டர் வலைப்பூவில் ஏதும் பின்னுட்டம் செய்யவில்லை.

   நண்பர்களே இந்த விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள். தவறான விவரம் எது என்று குறிப்பிட்டால் திருத்திக் கொள்கிறேன்.

   இரவுக்கழுகாருக்கு மீண்டும் ஒரு நன்றி.

   Delete
  2. நீங்கள் எந்த ஒரு கேள்விக்கும் ஒரு நீண்ட விளக்கம் அளிக்கிறீர்கள்.
   அதில் உங்களது காமிக்ஸ் பற்றும்,எங்களது பின்னுடதிற்கும் நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் தெரிகிறது.
   இது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

   நிச்சயமா உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
   ஒரு சிறு முன்னுரை அளித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

   Delete
  3. நண்பரே மற்றும் ஒரு விண்ணப்பம்.
   Word Verification நீக்கினால் நன்றாக இருக்கும்.

   Delete
  4. அன்பு நண்பரே வணக்கம்,

   பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கு முடிந்த வரையில் பதிலளிக்கலாம் என்று விருப்பம். இந்த ப்ளாக்கில் கவனம் செலுத்தும் வெகு சில நண்பர்களில் நீங்களும் ஒருவர். இங்கு கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது எனது கருத்துக்களும் மேம்படுகிறது. இது போன்ற காமிக்ஸ் உணர்வை பகிர்ந்துகொள்ள எனக்கும் வேறு யாரும் இல்லை. அப்படி இருந்தவர்கள் எல்லாம் என் காமிக்ஸையும் புத்தகங்களையும் சுட்டுக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்ததால் அவர்களைக் கண்டால் ஒரு பயமே வரும். :-)).

   //எந்த ஒரு கேள்விக்கும் ஒரு நீண்ட விளக்கம் அளிக்கிறீர்கள்//
   என் பதிவுகளும் பின்னூட்டங்களும் மிகவும் வள வள என்று இருக்கின்றது என்ற எண்ணம் எனக்கும் உள்ளது. இனி கொஞ்சம் குறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றேன்.

   //ஒரு சிறு முன்னுரை அளித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.//
   முன்னுரை பற்றி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஐடியா ஏதேனும் உள்ளதா, எப்படி என்று ஹிண்ட் கொடுத்தால் உபயோகப் படுத்திக் கொள்வேன்.

   Delete
  5. டியர் இரவுக்கழுகாருக்கு,

   Word Verification -னை நீக்கக் கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றீர்கள். இதே கோரிக்கையை நீங்கள் லயன் முத்து ப்ளாக்கிலும் தெரிவித்திருந்தீர்கள் என்று நினைக்கின்றேன். இதைப்பற்றி என் கருத்து என்னவென்றால், வெப் க்ராவ்லர், வெப் ரோபோட், வோர்ம், ட்ரோஜன் என்று இன்னும் பல தலைவலி பிடித்த ப்ரோகிராம் சமாசாரங்கள் இருக்கின்றது. இவைகள் வைரசிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மிகக் கொடிய குணம் கொண்ட அவதாரங்கள். இந்த புரோகிராம்கள் ஒரு மனிதன் எப்படி செயல்படுவானோ அது போல செயல்பட்டு பெரும் தலைவலியை நமக்கு உண்டுபண்ணும்.
   பிறகு நமது ப்ளாகில் எல்லாம் வெறும் வயகரா, பிரமோன், ட்ரக்ஸ், போர்னோகிராபி போன்ற சமாசாரங்களை நமது வலைப்பக்களில் கமெண்ட் என்ற வழியில் ஏற்றிவிடும். நச்சு நிரல்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் ஏமாந்தால் நமது வலைப்பக்கத்தையும், அதை சார்ந்த மெயிலையும் நாம் இழக்க நேரிடலாம். நமது பல மணிநேர உழைப்பு வீணாகும்.

   eBay, amason, gmail, hotmail போன்ற தளங்களில் எல்லாம் இந்த வொர்ட் வெரிபிகேஷனைப் பார்த்திருபீர்கள். ஏனெனில் இந்த தளங்கள் எல்லாம் சிக்கலில் மாட்டி பின் தான் இந்த வேர்ட் வெரிபிகேஷன் முறையை செயல் படுத்தினார்கள்.

   கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு தானியங்கி ப்ரோகிராம் 24x7 ஜிமெயிலையோ அல்லது வேறு மெயில் தளத்திலோ புதிய மெயில் அக்கவுண்ட்களை முடிவில்லாது துவக்கிக் கொண்டிருந்தால் அந்த மெயில் தளத்தை எளிதில் செயலிழக்க வைத்துவிடலாம். DOS ATTACK. டினையல் ஆப் சர்வீஸ் என்று
   பெயர் அதற்கு.

   அதே போல் தானியங்கி ப்ரோகிராம்கள் 24x7 ஒரு ப்ளாக்கில் கமெண்ட்கள் இட்டுகொண்டே இருந்தால் அந்த ப்ளாக்கை நம்மாலும் அனுக முடியாது மேலும் அந்த ப்ளாகை வெப் ஹோஸ்டர் தடை செய்ய ஏதுவாகும். இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியில், இது போன்ற நச்சு ப்ரோகிராம்களால் வொர்ட் வெரிபிகேஷனில் pdf படமாக உள்ள எழுத்துக்களை படித்து புரிந்து, அதை பக்கத்தில் உள்ள கட்டத்தில் எழுத முடியாது. அதையும் வருங்காலத்தில் செய்யும் நச்சு ப்ரோகிராம்கள் வந்து விடும். That is technology. நீங்கள் வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிட்டீர்களா? அப்படியென்றால் அதை நீங்கள் எனேபிள் செய்ய வேண்டும் என்பது தான் எனது அன்பான பரிந்துரை.
   நீங்கள் டெக்னாலஜி துறையில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு தெரிந்த விஷயத்தையே நான் இங்கு சொல்லியிருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இந்த விஷயம் சம்பந்தமாக நாம் இன்னும் விவாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். சாரி இந்த பதிலும் மிகவும் நீண்டுவிட்டது. தொட்டில் பழக்கம். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

   Delete
 2. //(மச்சான் நடிகை பற்றிய கமெண்ட்களைத் தவிர்த்து :P இல்லையென்றாலும் பரவாயில்லை பின் எப்படித்தான் பொழுது போவதாம்:))//

  நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு பின்னர் ஒரு காமிக்ஸ் விமர்சனப் பதிவில் நமிதாவை இடம் பெறச் செய்த பெருமை உங்களுக்கே.

  ஜோக்ஸ் அபார்ட், பதிவு மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. டியர் கிங்,
   உங்களது பின்னூட்டத்தை காணவில்லையே என்று காத்திருந்தேன். நீங்கள் டூர் முடித்து திரும்பும் வரை உங்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என்றுதான் இதுவரை உங்களுக்கு மெயில் அனுப்பாமல் இருந்தேன்.

   உங்கள் பாராட்டுக்களை பணிவுடன் ஏற்றுக் கொண்டு அதை அப்படியே உங்களுக்கே அர்ப்பணிக்கின்றென். ஏனெனில், (காமிக்ஸ்) ரசிகர் ஒருவர் ஹன்சிகா இட்லி சாப்பிட்டதைப் போட்டோவாக நீங்கள் அனுப்பியதைப் பார்த்துதான் நமீதா ஐடியா வந்தது.

   ஒலக காமிக்ஸ் ரசிகர் ப்ளாக்குக்கு ஒரு முறை அவசியம் போய் மேய்ந்து வரவேண்டும். ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகர்களின் வலைப்பூவை மேயும் போதும் ஒரு புதிய காமிக்ஸ் படிக்கும் உணர்வும் உற்சாகமும் ஏற்படுகிறது.

   உங்களின் கனிவான பாராட்டுதலுக்கு மிண்டும் ஒருமுறை நன்றி.
   எந்தன் ஒவ்வொரு பதிவையும் பார்த்து பின்னூட்டம் இடவேண்டும்.

   Delete
 3. //இதில் 37 பக்கங்களின் மேலே இரும்புக்கை மாயாவி, இரும்புக்கை மாயாவி என்று அச்சாகி இருக்கும் தலைப்புகளை எடிட் செய்திருந்தால் மிச்சமாகும் இடத்தில் இன்னொரு கதையை வெளியிட்டிருக்கலாம்.//

  நண்பரே, ஒரிஜினலில் எப்படி வந்ததோ அப்படியே இந்த முறை கொண்டு வர எடிட்டர் செய்த முயற்சியே இது. இரும்புக் கை மாயாவி கதை வாரா வாரம் தொடராக வந்த போது எப்படி வந்ததோ அதே மாதிரி இந்த முறை பப்ளிஷ் செயது இருக்கிறார்.

  காரிகனும் அப்படியே. டெய்லி ஸ்ட்ரிப் ஃபார்மட்டில் படிப்பது ஒரு சுகானுபவம். ஆகையால் இந்த மாதிரி அச்சிட்டார்.

  ReplyDelete
 4. டியர் கிங்,
  விவரமான பின்னூட்டத்திற்கும் தகவலுக்கும் நன்றி. டெய்லி ஸ்ட்ரிப் பார்மெட் என்று உணர்ந்துதான் இந்த பதிவை மேற்கொண்டேன். அந்த 37பக்க இரும்புக் கை மாயாவி கருத்தை வெளியிட்டதற்கு காரணம், காரிகன் கதை எடிட் செய்யப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். அப்படி எடிட் செய்யப்பட்டதா இல்லை நான் தான் தவறாக அனுமானித்துக் கொண்டேனா தெரியவில்லை. அப்படி எடிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு காரணம் இடப்பற்றாக்குறையாக இருக்கலாம் என்று நினைத்து சொல்லியதே அந்த கருத்து. மேலும் காரிகனின் கதையிலும் ஒவ்வொரு 3 மூன்று கட்டத்திற்கும் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட் காரிகன் என்று இருதிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்திருந்தால் அது எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே இதுவும் எடிட் செய்திருக்க்லாம் என்ற எண்ணத்திலே வெளிப்பட்டதுதான் இந்த கருத்து. மேலும் காரிகன் கதையை பிரிண்ட் செய்து, பிறகு வெட்டி ஒட்டி ஸ்கேன் செய்திருக்கலாம் என்றும் தோன்றியது. அதன் வெளிப்பாடே இந்த கருத்து. என் ஊகம் தவறாகவும் இருக்கலாம். தவறாக இருந்தால் பொறுத்தருள்க. டெய்லி ஸ்டிரிப்களின் மேல் எனக்கு எப்போதுமே தீராத காதல் உண்டு. ஏனென்றால் டெய்லி ஸ்டிரிப்கள் எப்போதும் புத்தக வடிவில் கிடைக்காது.
  அந்த வகையில் எடிட்டரின் முயற்சியை நான் மிக மிக பாராட்டுகின்றேன். இன்றைக்கு இருக்கும் காமிக் கதை வறட்சியை, டெய்லி ஸ்டிரிப்கள் வெளியிடுவதன் மூலம் தீர்க்கலாம். டெய்லி ஸ்டிரிப்களை புத்தகமாக வெளியிட்டால் பல வருடங்கள் ஓட்டலாம். அவ்வளவு கதைகள் இருக்கின்றது.
  டெய்லி ஸ்ட்ரிப் காமிக்ஸ் (DSC) என்ற பிரண்ட் பெயரில் தனியே ஒரு காமிக்ஸ் வெளியீடே எடிட்டர் துவங்கலாம்.

  ReplyDelete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.