VIJAYA VIKRAMADITYA
COMEBACK SPECIAL. FIRST THINGS FIRST.
பல சிரமங்களை கடந்து, பல கஷ்ட நஷ்டங்களை சந்தித்தும்
சற்றும் மனம் தளராத நவீன விஜய விக்ரமாதித்தன் லயன் முத்து எடிட்டர் திரு விஜயன்
மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் காமிக்ஸ் வேதாளத்தை பிடித்து
தன் தோளின் மீது போட்டுக் கொண்டு தன் காமிக்ஸ் ரசிகர்களை நோக்கி தனது 40வது வருட
பயணத்தை COMEBACK SPECIAL-ல் வெளியீட்டின் மூலம் தொடர்கிறார். அவர் தோளில் தொங்கும் வேதாளம் எள்ளி நகைத்து
பின் வரும் கேள்வியை அவரிடம் கேட்டது “முயற்சியில் தளராத விஜய விக்ரமாதித்தனே
இந்தியாவில் வெளிவந்து கொண்டிருந்த காமிக்ஸ்கள் எல்லாம் ஏன் திடீரென்று நின்றுவிடுகின்றன
– இந்த கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ மவுனமாக இருந்து விட்டால் நான் மீண்டும்
உன்னுடன் வராமல் மீண்டும் தனி மரத்திற்கே சென்றுவிடுவேன்” என்று கூறியது. நமது
எடிட்டர் விஜய விக்ரமாதித்தர் என்ன பதில் கூறியிருப்பார் என்று அவரவர் கற்பனைக்கே
விட்டு விடுகிறேன்.
அவர் முயற்சியில் அவருக்கு
வெற்றி கிடைக்க அவரை வாழ்த்துகிறேன். எந்தவித தடையும், தடங்கலும் இன்றி, நம்
எல்லோருக்கும் அவரின் சற்றும் மனம் தளராத
முயற்சியால் வாரா வாரத்திற்கு காமிக்ஸ்
கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று சுயநலத்தோடு
பொதுநலமும் கலந்து பிரார்த்திக்கின்றேன். மாதத்திற்கு ஒழுங்கா ஒரு காமிக்ஸ்
கிடைத்தாலே பெரிய விஷயம் இதிலே வாரா வாரத்திற்கு காமிக்ஸா என பல வாசகர்கள் என்னை
திட்டுவது ஒரு பக்கம் கேட்கிறது, மற்றொரு பக்கம் மாதத்திற்கு ஒரு காமிக்ஸ்க்கே
முழி பிதுங்குது, இதிலே இவன் வாரத்திற்கு ஒன்று என்று சதிப் பிரார்த்தனை செய்து என்னை வம்பிலே மாட்டி விடுறதற்கு இவன்
என்னமா சதி பன்றான் என்று எடிட்டர் பல்லை நற நறப்பதும் மனக் கண்ணில் தெரிகிறது.
ம்ம்… நம்பிக்கை தான் வாழ்க்கை. என் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். அதற்கு
பொறுமையும் நம்பிக்கையும் கொடு இறைவா என்று மற்றோரு பிரார்த்தனையையும் செய்து
கொள்கிறேன்.
ஒரே
மாதிரியான வேலையை பல பேர்கள் தனித் தனியாக போட்டியுடன் செய்து கொண்டிருக்கும்
போது, அதில் யாராவது ஒருவர் மட்டும், அனைவரும் பாராட்டும் விதமாக செயல்
பட்டிருந்தால் அவரை ஆங்கிலத்தில் விளிக்கும் ஒரு சிறப்பு சொற்றொடர் உண்டு அது “HE
IS ALONE IN THE CROWD” என்று சொல்வார்கள். ஆனால் எடிட்டரை பொறுத்தவரை, காமிக்ஸ்
வெளியீட்டாளர்களில் அவர் ஒருவரே இருக்கின்றார். தமிழ் காமிக்ஸ் என்றில்லை, ஆங்கில
காமிக்ஸிலும் இந்தியாவில் வேறு யாரும் இல்லை. அமர் சித்திர கதாவை விட்டு விடுங்கள்,
அந்த காமிக்ஸின் தன்மைக் களமே வேறு. அப்படியே ஏதேனும் காமிக்ஸ் வெளியீட்டாளர்கள் இருந்தாலும்
அவைகள் இங்கு (இந்த விலையிலும், தமிழிலும்) கிடைப்பதும் இல்லை.
பல
வருடங்களாக எடிட்டர், காமிக்ஸை சந்தைப் படுத்துவதில் அவர் சந்திக்கும்
சிரமங்களையும், விற்பனையில் ஏற்படும் நஷ்டங்களையும் அவர் ஹாட் லைனில் நம்முடன்
பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி, EDITOR VIJAYAN IS ALONE AND THERE
IS NO CROWD OF COMIC LOVERS IN TAMIL NADU. 40 வருடங்கள் இந்த துறையில் இருக்கும்
அவருக்கு எந்த வகையிலும் நான் புதிய விற்பனை மந்திரங்களையோ தந்திரங்களையோ
சொல்லிவிட முடியாது. ஆனால் எனக்குத்
தோன்றும் சில எண்ணங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன். எனக்கு காமிக்ஸ் மேலுள்ள
தீராத காதலே இந்த பதிவுகளுக்கு முழு முதல் காரணம். என் கருத்துக்களில் ஏதேனும்
தவறுகள் இருந்தால் எடிட்டரும், அனைத்து காமிக்ஸ் ரசிகர்களும் மன்னிக்குமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முத்து காமிக்ஸின் வெற்றி.
முத்து
காமிக்ஸ் முதன் முதலில் வெளிவந்த போது, ஒவ்வொரு தமிழக இல்லமும் இருந்த நிலை எப்படி
என்று சுருங்க சொல்ல வேண்டும் என்றால், அனைத்து வீடுகளிலும் ரேடியோ கூட இல்லாத
நிலை. தனி மனிதன் ரேடியோ வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் லைசன்ஸ்
வாங்க வேண்டும். அந்த லைசன்ஸை வருடா வருடம் பணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.
யாராவது லைசன்ஸ் இல்லாமல் ரேடியோ வைத்து இருந்தால் அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைக்கு ஏதாவது ஒரு
வீட்டில்தான் ட்யூப் லைட்டை பார்க்க முடியும். பொழுது போக்கு என்றால் சினிமா மட்டுமே.
வெகு சில தினசரி பேப்பரும், சில வார பத்திரிகையுமே வெளிவந்தது. இரண்டு சக்கர
வாகனம் என்றால் யெஸ்டி, ராஜ்தூத் மற்றும் புல்லட்டும், நான்கு சக்கர வாகனம்
என்றால் அம்பாசிடர், பியட் மற்றும் ஸ்டாண்டர்ட் கார்களே இருந்தது. 1969ல் தான்
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் பதித்தார். எனக்கு அப்போது அது ஒரு நம்ப முடியாத
ஆச்சர்யத்தை தரும் விஷயமாக இருந்தது. ஏனெனில், குழந்தைப் பருவத்தில் நீல
வானத்திற்கு அப்பால் ஏதும் இல்லை என்று முழுமையாக நம்பி இருந்தேன். நீல
வானத்திற்குள்தான் நிலா இருக்கின்றது என்று நினைத்திருந்தேன். ஆனால் நீலக்கலர்
வானத்தை தாண்டி பல கோள்களும் பல கேலக்ஸிக்களும் உள்ளது என்று ப்ளாஷ் கார்டன் கதைகளைப்படித்தும், மந்திரவாதி மாண்ட்ரெக் கதைகளைப்படித்தும் தெரிந்து கொண்டேன் (மந்திரவாதி மாண்ட்ரெக்கிற்கு ஒரு வேற்று கிரக மன்னன் மக்னான் நண்பர், அடிக்கடி சோப்பு பபுள் ஒன்றை அனுப்பி மாண்ரெக்கை அழைத்துக் கொள்வார்).
அந்த நாட்களில் முத்து
காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு திரில்லிங்கான 3D படம் பார்ப்பது போன்ற அனுபவம்.
இதுவே முத்து காமிக்ஸ் வெற்றியின் காரணம்.
சிறு
வயதில் முத்து காமிக்ஸுக்கு அடுத்து நான் படித்து ரசித்தது இந்திரஜால் காமிக்ஸ்களை.
இந்திரஜால் காமிக்ஸ்கள் மும்பையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த காமிக்ஸ்கள்
ஆங்கிலம், தமிழ் மற்றும் பல மாநில மொழிகளில் வெளியிடப் பட்டது.
இன்றய
நிலை அப்படி இல்லை. டிவி வீட்டிற்குள் வந்து ஹாலில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு
செய்யக்கூடாத அழிச்சாட்டியம் அத்தனையையும் செய்து கொண்டு இருக்கின்றது.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று நிருப்பதற்கு, கம்ப்யூட்டர் நமது
வாழ்வில் வந்து டிவியை சிறிது ஓரம் கட்டி உலகத்தையே நம் வீட்டுக்குள் கொண்டு
வந்தது என்றால், அனைத்தையும் பின்னுக்கு தள்ளி, அதற்கும் மேலே ஒரு படி போய்விட்டது
செல்போன். லயனும், முத்து காமிக்ஸூம் புதிய உத்வேகத்துடன் வெளிவருவதற்கு
கம்ப்யூட்டருக்கும், செல்போனுக்கும் முக்கிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்று
நினைக்கின்றேன்.
இவ்விடத்தில்
நான் சொல்ல விழைவதை எல்லாம் வரிசை படுத்திவிடுகிறேன்.
டியர் எடிட்டர் சார்,
- லயன் கம்பேக் ஸ்பெஷலைப் படித்தேன். இந்த புத்தகத்தை வாங்கிய போது மனது
மிகவும் சந்தோஷப்பட்டது. லக்கி லூக்கும் கேப்டன் பிரின்ஸும் சூப்பர். அதாவது
பாதி புத்தகம் சூப்பர். கருப்பு வெள்ளை கதைகளான இரும்புக்கை மாயாவியையும்,
சீக்ரெட் ஏஜெண்ட் காரிகனையும் தவிர்த்திருக்கலாம். இப்படி சொல்வதால் நான்
கருப்பு வெள்ளை கதைகளை வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொண்டிட வேண்டாம்.
- இனி உங்கள் வெளியீடுகள் அனைத்தையும் கம்பேக் ஸ்பெஷல் மற்றும் என்
பெயர் லார்கோ சைசிலேயே கலரில் வெளியிட வேண்டும்.
- பாக்கெட் சைஸிலிருந்தும் ரூ.10/- காமிக்ஸிலிருந்தும் வெளியே
வாருங்கள். குமுதம் வார பத்திரிகையின் இன்றைய விலை தமிழகம் மற்றும்
புதுவைக்கு ரூ.10/- பிற மாநிலங்களில் ரூ.12 (அட்டையுடன் சேர்த்து 118
பக்கங்கள்). ஆனந்த விகடன் வார பத்திரிகை தமிழகம் மற்றும் புதுவைக்கு ரூ.17/-
பிற மாநிலங்களில் ரூ.19 (அட்டையுடன் சேர்த்து 100 பக்கங்கள் பெரிய சைஸ்
புத்தகம்). ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் எப்போதும் ஒரு ஆரோக்கியமான
போட்டி இருந்துவரும். இரண்டு வார பத்திரிகைகளின் விலையிலும் அதிக வித்தியாசம்
இல்லாமல் இருந்துவந்தது. சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஆனந்த விகடன்
தன்னுடைய சைசை மாற்றி விலையையும் மாற்றிவிட்டது. இந்த விலையிலும் ஆனந்த
விகடன் அட்டையில் தமிழ் வார இதழ்களில் நம்பர் 1 என்றும் போட்டுக் கொள்கிறது. இது
ஒரு சிறிய உதாரணம். இந்த இரண்டு பத்திரிகை குழுமங்களும் பல பத்திரிகைகள்
வெளியிடுகின்றன. இதை இங்கே சொல்வதற்கு காரணம் ரூ.5/- ரூ.10/- காமிக்ஸ்களை
தவிர்த்து விடுங்கள்.
- என்னுடைய தாழ்மையான கருத்து, இன்றைய நிலவரப்படி விற்பனையை விலை
நிர்ணயிப்பதில்லை. உயர்ந்த தரமும் விளம்பரமும்தான் விற்பனையை தீர்மானிக்கிறது.
விளம்பரம் இருந்தாலும் தரமற்ற பொருட்கள் விற்பனையாவதில்லை.
- மற்றுமொரு உதாரணம் – மொபைல் போன்கள் எல்லாம் சில ஆயிரம் ரூபாய்
விலையில் விற்றுக் கொண்டிருந்த போது, ஆப்பிள் கம்யூட்டரின் ஸ்டீவ் ஜாப்ஸ்
ஐபோனை வெளியிட்டார். அதன் விலை ஏறத்தாழ ரூ.50,000/-. இண்டர்நெட் உலகில் ஒரு
கதை உண்டு. அதாவது ஐபோன் ஐடியா ஸ்டீவ் ஜாப்ஸுடையது, ஆனால் அதை உருவாக்கியது
ஆப்பிள் லேப்பில் இருந்த பல எஞ்சினியர்கள். ஒவ்வொரு புரோட்டோ டைப்பையும்
ஸ்டீவ் ஜாப்ஸ்சிடம் கொடுப்பார்களாம், அவரும் அதை உபயோகப்படுத்திவிட்டு
இன்னும் மேம்படுத்தவேண்டும் என்று திருப்பி லேப்பிலேயே கொடுத்து விடுவாராம்.
அப்படி பல முறை மெருகூட்டப்பட்டு பின்புதான் ஐபோன் வெளிவந்தது. ஆனால் அதன்
விலையை பார்த்து அனைவரும் சொன்ன கருத்து இது, இந்த விலையில் விற்பனையாகாது.
இது சொற்பமான பணக்காரர்களின் விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள் என்று
கூறினார்கள். அனைத்து செல்போன் விற்பனையாளர்களும் கூறிய கருத்து ”ஐபோன்
எங்களுக்கு போட்டியில்லை”.
இன்றைய நிலையில் ஐபோன்
அனைத்து செல்போன் விற்பனையையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கின்றது. ஐபோனைப்
போல மற்றோரு டச் போனை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர மற்ற செல்போன்
கம்பெனிகளுக்கு 6 வருடம் பிடித்தது. அதுமட்டுமல்லாமல் இன்று அனைத்து செல்போன்
கம்பனிகளும் சிறிது கூட தயக்கமே இல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றால்
அது – ஐபோனை போலவே மற்றொரு போனை காப்பி அடித்துத் தயாரித்து சந்தைப்படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து
கொண்டிருக்கின்றன. இந்த உதாரணம் எதற்கு சொல்கிறேன் என்றால், தரம் இருந்தால் போதும்
அதுவே விற்பனைக்கு விளம்பரம்.
- கருப்பு வெள்ளை காமிக்ஸ்களுக்கு வேண்டுமானால் காமிக்ஸ் கிளாசிக்ஸ்
லேபிளில் வெளியிடலாம் அல்லது வேறு ஒரு புதிய லேபிளில் ( VINTAGE COMICS
- விண்டேஜ் காமிக்ஸ் என்று பெயர்
வைத்துக் கொள்ளலாம் அல்லது எவர்க்ரீன் காமிக்ஸ்). பெயர் எதுவாக இருந்தாலும் சைஸ் புதிய சைஸ்
மட்டுமே. அதாவது கம்பேக் ஸ்பெஷல் அண்ட் என் பெயர் லார்கோ சைஸ்.
- கடைசியாக ஒரு விஷயம். மறுபதிப்புகளைப்பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து. நான் மறுபதிப்புகளுக்கு எதிரி இல்லை. மறுபதிப்புகள் வந்தால் அதை முதலில் வாங்க க்யூவில் நிற்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். நாம் கவனம் செலுத்த வேண்டியது, புதிய வெளியீடுகளையும் புதிய கதைகளையுமே. முத்துவிலும் லயனிலும் பழய கதை போடுவதை முற்றிலுமாக தவிர்க்கலாம். மறுபதிப்புகளை ஒரு ஆர்டரில் செய்யலாம் என்பது என் கருத்து. உதாரணத்திற்கு மறுபதிப்புகளை கலெக்டார்ஸ் எடிஷனாக வெளியிடுங்கள். இரத்தப்படலம் ரூ.200/- விலை புத்தகத்தைப்போல ஆனால் சைஸ் புதிய சைஸ்ஸில் இருக்க வேண்டும் மற்றும் கலரில் இருந்தால் குரங்கு கள்ளையும் குடித்து தேளும் கொட்டிய கதைதான் வாசகர் நிலை. கலெக்டார்ஸ் எடிஷனுக்கு கதை தேர்ந்தெடுப்பதென்றால், முத்துவில் வெளி வந்த 10 கதையோ அல்லது 5 கதைகளையோ வரிசைப்படி தேர்வு செய்து ஒரே புத்தகமாக பெரிய சைசில் கனமான அட்டையுடன் 100 விலையிலோ அல்லது 200 விலையிலோ வெளியிடலாம். கலர் பாதி கருப்பு வெள்ளை பாதி வேண்டாம். ஒன்று முழுக்க கலர் அல்லது முழுக்க கருப்பு வெள்ளை. இந்த ஒட்டு மொத்த மறுபதிப்பிற்கு பேட்மேன், இரவுக்கழுகு டெக்ஸ் வில்லர், கேப்டன் பிரின்ஸ், டைகர், சீக்ரெட் ஏஜெண்ட் காரிகன், PHANTOM, MANDRAKE AND FLASH GORDON ஆகிய குழுவிற்கு விதி விலக்களிக்கலாம். இவர்களை மட்டும் கூட்டத்தில் இருந்து விடுவித்து ஒவ்வொரு தனி வீரரின் சாகசங்களையும் இரத்தப்படலத்தைப் போல ஒரே புத்தகமாக போடலாம். இரத்தப்படலத்தை நீங்கள் ஒரே புத்ததகமாக போட்ட சாதனை அதன் மூல கர்த்தா பப்ளிஷர்களே செய்யாத ஒரு விஷயம். அந்த புதிய முயற்சியே இன்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் விதத்தில் வேன் ஹெம்மியின் லைப்ரரியிலே நம் தமிழ் இரத்தப்படலம் மெகா இஷ்யூ. என்னைப் பொறுத்தவரை இரத்தப்படலம் மெகா இஷ்யூ ஒரு புதிய முயற்சி ஆனால் அந்த புதிய முயற்சியே காமிக்ஸ் ஜாம்பவான்களையே உங்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. (ஆர்வக் கோளாரில் ப்ளாஷ் கார்டனையும் சேர்த்துவிட்டேன்.)
- PHANTOM, MANDRAKE AND FLASH GORDON இவர்களது கதைகளையும் தனித்தனியாக பெரிய சைசில் நல்ல பேப்பரில், கலரில் வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும் என்பது எனது மற்றுமொரு தாழ்மையான கருத்து. பேண்டம் மற்றும் மாண்ரெக் கதைகளில் நல்லதொரு ஒழுக்கம் மறைபொருளாக இழையோடும். இந்த கதைகள் சிறுவர்கள் வாழ்வில் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவும். ப்ளாஷ் கார்டன் கதைகளில் அறிவியல் சார்ந்த சுவாரசியமான பல விஷயங்கள் வெளிப்படும். இவை தவிர மற்றுமொரு சாகச வீரர் இருக்கின்றார் அவர் ZORRO. வாசகர் கருத்துக்குப் பின் அவரையும் ஒரு பெரிய சைஸ் புத்தகத்தில் முயற்சிக்கலாம். சமீபத்தில் வந்த க்ரிஸ்டபர் நோலனுடைய பேட் மேன் பிகின்ஸ்ஸையும், டார்க் நைட்டையும் முயற்சிக்கலாம். இந்த வரிசையில் மூன்றாவது படமான டார்க் நைட் ரைசஸ், ஜுலை மாதம் 20ம் தேதி வெளிவருகிறது. அந்த சமயத்தில் இரண்டு பாக கதையோ அல்லது மூன்று பாகமோ நன்கு விற்பனையாகலாம்.
Thats all for now friends,
see you soon in your comments.
Balaji Sundar.
சமீப காலத்தில் நான் படித்ததிலேயே மிகச் சிறந்த காமிக்ஸ் பதிவு. ஓரிரு விஷயங்களில் நான் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும்,இது ஒரு சிறந்த பதிவு என்பதில் இருவேறு கருத்தில்லை.
ReplyDeleteடியர் கிங்,
Deleteஇன்று 9-5 கரண்ட் இல்லை, மேலும் ஒரு சிறு வேலை காரணமாக வெளியே செல்ல நேரிட்டது. அதனால் காலையிலேயே உங்களது பின்னூட்டத்திற்கு உடனே பதிலளிக்க முடியவில்லை. Sorry for the delay. உங்களது பாராட்டிற்கு மிகவும் நன்றி. இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கின்றது. P. Karthikeyan and ஜெகன் என்ற இரண்டு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். உங்கள் கமெண்ட்டுகளுக்கு நன்றி. உங்களது அனைத்து மாற்றுக் கருத்துக்களுக்கும் நான் மிகுந்த மதிப்பளிக்கின்றேன்.
கலக்குறே கார்த்திக்... நண்பர் விஸ்வா சொல்ற மாதிரி எனக்கும் சில விஷயங்களில் மாற்று கருத்து இருக்கு. உங்கள் காமிக்ஸ் காதல் உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதை நீங்கள் உடனே எடிட்டர் க்கு மெயில் பண்ணுங்களேன் அல்லது எடிட்டர் ப்ளாக் ல் கொண்டுவாருங்களேன் - அனைவர் கருத்துகளையும் அறிந்துகொள்ளமுடியும்.
ReplyDeletesorry பாலாஜி சுந்தர் உணர்ச்சிவசப்பட்டு உங்க நேம் மாத்தி டைப் பண்ணிட்டேன்
Deleteடியர் திரு.கார்திகேயன்,
Deleteமேலே திரு கிங் விஸ்வா அவர்களுக்கு என்னுடைய ரிப்ளையை படிக்கவும். sorry for the delay in replying. இந்த வலைப்பூவைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள் பல.
எடிட்டரின் ப்ளாக்கில் அதிகமாக Flame throwing நடக்கின்றது. பாவம் திரு கிங் விஸ்வா, இரண்டு மூன்று முறை அங்கே கல்லடி பட்டுவிட்டார். காய்த்து பழுத்த மரம் அவர், கல்லடி படத்தான் செய்யும். அதைப்பார்த்த பின் ஏற்பட்ட தயக்கத்தாலும், பல சிரமத்திற்கு பிறகு இப்போதுதான் எடிட்டர் காமிக்ஸ்களை வெளியிட ஆரம்பித்துள்ளார், இந்த சமயத்தில் எனது கருத்துக்கள் காமிக்ஸ் விற்பனையை பாதிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சமுமே இந்த கருத்துக்களை எடிட்டரின் ப்ளாக்கில் வலையேற்றம் செய்யாமல் தடுக்கின்றது. எடிட்டரின் வொர்க்கிங் இமெயில் என்னிடம் இல்லை. கிடைத்தால் அவருக்கு இமெயில் செய்கின்றேன்.
மேலும் உங்களைப்போலவும் திரு. கிங் விஸ்வா அவர்களைப்போல இன்னும் சில பேர் கருத்துக்களின் பல்ஸைப் பார்த்துவிட்டு சில மாற்றங்களுடன் இந்த வலைப்பதிவை எடிட்டரின் ப்ளக்கில் ஏற்றலாம் என்றும் எண்ணம் உள்ளது. உங்களது மாற்றுக் கருத்துக்களுக்கு நான் மிகவும் மதிப்பளிக்கின்றேன். நீங்களும் விஸ்வாவும் பாராட்டுதல்களை முன் வைத்து மாற்றுக்கருத்துக்களை ஒரே வார்த்தையில் தெரிவித்திருக்கின்றீர்கள். அது போலவே இந்த என்னுடைய கருத்துக்களும் எடிட்டரின் ப்ளாக்கில் மாற்றுக் கருத்தாகிவிடுமோ என்றும் தயக்கம் இருக்கின்றது.
முக்கியமாக மறுபதிப்புகளைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள் அங்கு பலமாக எதிர்ப்பை சம்பாதிக்கும் என்பது எனது உள்ளுணர்வு.
என்னைப் பொறுத்தவரை இந்த வலைப்பதிவில் என் அத்தணை எண்ணங்களையும் முழுமையாக வெளிக்கொண்டுவர முடியவில்லை. அதனால் சில கருத்துக்கள் வேறு விதமான அர்த்தத்தைக் கொடுக்கின்றது. இந்த பதிவு முழுமையுற இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனது. இதை வெள்ளிக்கிழமை இரவு முழுக்க தூங்காமல் உட்கார்ந்து, வலையேற்றம் செய்யும்போது நேரம் சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி. (சனிக்கிழமை முழுக்க மின்தடை என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்). அதன் பிறகு சில எடிட்களும் செய்தேன்.
உங்களைபோல இன்னும் சில பல நண்பர்களின் கமெண்ட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
மிக நல்ல கருத்துக்கள்.
ReplyDelete- ஜெகன்
உங்களது கனிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல திரு ஜெகன். தொடந்த உங்களது ஆதரவை நல்குங்கள். உங்கள் வலைப்பூ/இமெயில் முகவரி என்ன? தெரிவிப்பீர்களா?
Deleteநண்பரே நல்லா உட்கார்ந்து யோசிச்சுருகீங்க.
ReplyDeleteபல கருத்துக்கள் நம்மை போன்ற காமிக்ஸ் விரும்பிகளின் மனதை பிரதிபளிபதாக பட்டது.
வாழ்த்துக்கள்
நண்பரே மற்றும் Subscribe பண்றதுக்கு option கொடுங்க பாஸ்.
ReplyDeletegood post friend
ReplyDeleteடியர் அருன் பிரசாத்,
Deleteஉங்களுக்கு மட்டும் ரிப்ளை செய்ய தவறிவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சில புத்ய பதிவுகளை செய்திருக்கின்றேன். அவற்றையும் பார்த்து பின்னுட்டமிடுங்கள்.