Tuesday, 17 July 2012

DARK KNIGHT - A BEGINNING
DEAR FRIENDS,

அனைவருக்கும் வணக்கம்,

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்து விட்டு, என்னடா இது, கிரிஸ்டோபர் நோலனுடைய டார்க் க்னைட் சீரிஸின் கடைசி தவணை படமான தி டார்க் க்னைட் ரைசஸ் இந்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது, இந்த நேரத்தில் எ பிகினிங் என்று ஒரு பதிவா என்று நண்பர்கள் நினைப்பது தெரிகின்றது. சற்று பொறுங்கள், விஷயத்திற்கு வருகின்றேன்.

சின் சிட்டி பற்றிய பதிவில் ஓவியர் ப்ராங்க் மில்லரை பற்றியும் கூறியிருந்தேன். அந்த பதிவிற்கான பின்னூட்டத்தில் நண்பர் இரவுக்கழுகு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அந்த பின்னூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்து ”சின் சிட்டி காமிக்ஸோடு, சினிமாவை ஒப்பீடு செய்தது சிறப்பாக இருந்தது என்றும் ஆனால் அவருக்கு சின் சிட்டி காமிக்ஸும் சினிமாவும் பிடிக்கவில்லை” என்று கூறினார். இதற்கு நான் பதிலளிக்கும் போது, சின் சிட்டி பற்றிய கருவை பதிவிட எடுத்துக் கொண்டதற்கு மற்றுமொரு காரணம் இருக்கின்றது என்று மட்டும் கூறினேன், ஆனால் அப்போது காரணத்தை கூறவில்லை. 

அந்த காரணத்தை இப்போது கூறுகின்றேன். இந்த டார்க் க்னைட் பதிவை வந்தடைய துவக்கப் பட்ட பயணம்தான் சின் சிட்டி பற்றிய பதிவு.

மீண்டும் ப்ராங் மில்லரைப் பற்றிய புராணம்தான். ஆனால் அவரைப் பற்றி மீண்டும் எழுத வலுவான காரணங்கள் இருக்கின்றது. அதாவது அவரும் நம்மைப் போலத்தான். அதை அவர் விவரிக்கும்படி சொல்வதென்றால் கீழே சில வார்தைகள்.

டார்க் க்னைட் டேஸ்-பை ப்ராங் மில்லர், தேதி:16.09.1996.
1963 (அல்லது அது 64? சரியான வருடம் எது என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் அந்த சம்பவம் என்னுள்ளே பசுமை மாறா உணர்வுடன், வண்ணங்கள் மங்கிப் போகாமல் என்றும் உயிருடன் உலவுகின்றது.)

வெர்மாண்ட் என்ற ஊரில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் 80 பக்கங்கள் கொண்ட ஜயண்ட் பேட்மேன் காமிக்ஸ் புத்தகத்தை கண்டேன். அதை திறந்தேன், புரட்டிப் பார்த்தேன், அதனுள்ளே விழுந்து விட்டேன், அன்றிலிருந்து இன்றுவரை பேட்மேனை விட்டு வெளியே வரவில்லை.

நான் சிறு வயதில் டைரி எழுதும் பழக்கத்தை கடைப்பிடிக்காததை நினைத்து இன்று வருந்துகின்றேன். ஏனெனில் யாருக்குத்தான் தெரியும், யாருக்குமே தெரியாது பின் வரும் நாட்களில் என் ஆதர்ச ஹீரோ பேட்மேனை நானே வரைய நேரிடும் என்று.

நண்பர்களே, இதற்கு மேல் அவருடைய எழுத்தை அப்படியே ஆங்கிலத்தில் கீழே கொடுத்திருக்கின்றேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையில் ப்ராங் மில்லர் அவரது வயதைப் பற்றி சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதாவது 1964ல் அவருக்கு வயது 6 அல்லது 7 என்கிறார் ஆனால் 1985ல் அவருக்கு 13 வயது என்கிறார். அவருடைய முந்தய கணக்குப்படி எடுத்தால் அவர் பிறந்த வருடம் 1957 அல்லது 58, அப்படி பார்த்தால் அவருக்கு 1985ல் 28 வயது இருக்க வேண்டும். மேலும் அந்த வருடமே விமானபயணத்தில்  வெள்ளை ஒயினை சுவைப்பதாக சொல்கிறார். இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முடிவை அவரவரிடமே விட்டுவிடுகின்றேன்.
50 வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த பேட்மேன் காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை மெல்ல மெல்ல சரிந்து 1985 வாக்கில் விற்பனையில் ஒரு தேக்க நிலை நிரந்தரமானது (பேட்மேன் மட்டுமல்ல, சூப்பர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் காமிக்ஸுக்கும் விற்பனை குறைந்ததால்,  சூப்பர்மேன் மற்றும் ஸ்பைடர் மேன் காமிக்ஸ் வெளியீட்டாளர்களே அந்த ஹீரோக்களை  சாகடிப்பதும் நடந்தது.) டிசி காமிக்ஸின் எடிட்டர் டிக் ஜியோர்டனோ உடனான மில்லரின் சந்திப்பின் போது, எடிட்டர் ஒரு கருத்தை மில்லரிடம் தெரிவிக்கின்றார். அதாவது பேட்மேன் காமிக்ஸ் விற்பனை தேக்கமடைந்தாலும், மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்ததில் வந்த புள்ளிவிவர முடிவு தெரிவித்தது என்னவென்றால், அது பெரும்பாலான மக்களின் ஆதர்ச ஹீரோவாக பேட்மேனே இருக்கின்றார்.

இந்த புள்ளி விவரம் தந்த உற்சாகத்தில் டிசி காமிக்ஸ் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறது. அது பேட்மேன் காமிக்ஸை ஆரம்ப நிலையிலிருந்து மறு சீரமைப்பு செய்து, மீண்டும் மறுவிற்பனையை மாபெரும் அளவில் ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. 

அதன்படி உருவானதுதான் டார்க் மேன் சீரிஸ். இந்த கதைகளே இப்போது கிரிஸ்டோபர் நோலனுடைய இயக்கத்தில் வெளியிடப்பட்ட பேட்மேன் படங்கள். திரைக்கதையை உருவாக்கியவர் கிரிஸ்டோபர் நோலனுடைய சகோதரர்.ஒரு பேட்டியில் டைரக்டர் கிரிஸ்டோபர் நோலனிடம், டார்க் க்னைட் பட திரைக்கதைக்கு எது அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், சார்லஸ் டிக்கன்ஸின் எ டேல் ஆஃப் டூ சிட்டிஸ் கதையே இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருக்கிறார்.


நம் எல்லோருக்கும் பேட்மேனின் மூலக் கதை தெரிந்திருக்கும். அதையே சிறிது மாற்றி, ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பழிதீர்க்க அலையும் கதாபாத்திரமாக ப்ரூஸ் வெய்ன் வருகிறார். ப்ரூஸ் வெய்னின் பயமே அவரின் பெற்றோர்கள் மரணமடையும் சம்பவத்திற்கு காரணாமாகி விடுகின்றது.


இதன் காரணமாக ஏற்படும் குற்ற உணர்ச்சியில், அவருக்கு அவர் மீதே வெறுப்பு ஏற்படுகின்றது.  பின்னாளில் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களினால், சிறிது சிறிதாக பண்பட்டு, தீமையை எதிர்க்கும் ஒரு வீரனாக உருமாறுகின்றார். அவர் ஏன் பேட்மேன் உடையில் மறைந்திருக்கின்றார் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.


அதாவது, ப்ரூஸ் வெயினாக போராடினால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு நேரிடும் ஆபத்தை தடுக்க முடியாது, ஒரு கிரிமினலை ப்ரூஸ் வெய்னாக சந்திக்கும் போது வெய்ன் தாக்கப்படுவதுமில்லாமல், கிரிமினல் அவரை எப்படி மிரட்டுகிறான் என்றால் “வெய்ன் உனக்கு என்று யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா, உன் எண்ணத்தை மாற்றிக் கொள், இல்லையென்றால் உனது வயதான பட்லரையும், உனது பால்ய காலத்து சினேகிதி ரேச்சலையும் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டுகிறான். அதனால் ஒரு முகமூடிக்குள் மறைந்து பேட்மேனாக எதிரிகளை தாக்கினால் அவர்களுக்கு பேட்மேன் யார், அவருக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் யார் என்று தெரியாது. வவ்வாலின் உருவத்தை தேர்ந்தெடுத்தற்கு காரணம், ப்ரூஸ் வெய்ன், சிறுவனாக இருக்கும் போது, ரேச்சலுடன் விளையாடும் ஒரு சமயத்தில், ரேச்சல் துரத்த வெய்ன் தப்பித்து தோட்டத்தில் ஓடுகிறார். பயண்பாட்டில் இல்லாத பல காலம் முன் பலகைகளினால் மூடப்பட்ட பழைய கிணற்றின் மீது ஓடும் போது, பலவீனமாக இருக்கும் மரப்பலகை உடைந்து பாழடைந்த கிணற்றினுள் சிறுவன் வெய்ன் விழுந்து விடுகிறார். இதில் வெய்னின் காலில் முறிவு ஏற்படுகிறது, அதே சமயத்தில் கிணற்றின் உள்ளே இருக்கும் குகையில் வசிக்கும் பெரிய பெரிய வவ்வால்கள் சிறுவன் வெய்னின் மேல் வந்து மோதி அவனை திகில் கொள்ளச் செய்கின்றது. இந்த சம்பவத்திற்குப் பின் ப்ரூஸ் வெய்னுக்கு வவ்வால்கள் என்றால் வளர்ந்த பின்பும் பயம் ஏற்படுகிறது. TO CONQUER FEAR, YOU MUST BECOME FEAR, என்ற வாசகம் பின் நாளின் பயிற்சியின் போது போதிக்கப்படுகிறது. அதாவது நீ உன் எதிரிகளை வெல்ல வேண்டும் என்றால், முதலில் நீ உன் பயத்தை வெல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் எதிரி அவனது பயமே. அவன் அதை வெல்லாமல், மற்ற  எதிரிகளை வெல்ல முடியாது.இதுவே ப்ரூஸ் வெய்னுக்கு செய்யப்படும் முதல் போதனை. அதனால் வெய்ன் தன்னுடைய பயத்தையே தன்னுடைய பலமாக மாற்றி, பேட்மேனாக அவதாரம் எடுக்கிறார்.


அதனால் ப்ரூஸ் வெய்ன்,பேட்மேன் உடையில் தன் போராட்டத்தை நடத்துகின்றார். அதே போல் டார்க் க்னைட் என்று அழைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் கூறுகின்றார். இந்த உலகில், அதாவது கோதம் சிட்டியில் இருக்கும் அத்தனை கிரிமினல்களும் வாழ்வது எப்படி என்றால், ஒவ்வொரு சாதாரண மனிதனின் பயத்திலும் வாழுகின்றார்கள். அப்படியென்றால் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கிரிமினல்கள் எப்படி ஒவ்வொரு மனிதர்களையும் பயப்படுத்தி வைத்திருக்கின்றார்களோ அந்த பயத்தையே ஆயுதமாக பயன்படுத்தி இந்த கிரிமினல்களை அழிக்கின்றேன் என்று முடிவெடுக்கிறார். 


பழைய பேட்மேன் கதைகளில் இருந்து டார்க் க்னைட் சிறிது மாறுபடுகின்றது என்றால், அது பேட்மேன் சில கட்டங்களில் மன சஞ்சலம் அடைந்து தனது முகமூடியை தூக்கி எறிந்துவிடுகிறார். பல சமயங்களில் நடக்கும் குற்றங்களை கண்டு இயலாமை அவரை பாதிப்பது போல சில காட்சிகளும் இருக்கின்றது. பேட்மேன் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனிதன்தான் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த சீரிஸின் வெற்றி.


பேட்மேனின் டார்க் க்னைட் ஸீரிஸ் வெளிவந்த 10வது வருட நிறைவுக்காக டிசி காமிக்ஸ், 200 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை 1996ம் வருடம் வெளியிட்டிருக்கின்றது. இதில் படங்களை வரைந்தவர் ப்ராங் மில்லர். ஓவியங்களும், கதையின் தெளிவும் சுமார்தான். ஆனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஒரு முறையேனும் படிக்கவும். இதை படிக்கும் போது இந்த புத்தகம் முதலில் வெளிவந்தது 1985 என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலே கொடுத்துள்ள மில்லரின் 3 பக்க கட்டுரை இந்த புத்தகத்தில் தான் இடம் பெற்றுள்ளது.

பேட்மேன் இயர்-ஒன்.டார்க் க்னைட் ரிட்டர்ன்ஸ் கதையின் ஆரம்ப கட்டத்தை சிறிது விரிவாக சொல்வதற்கு, மில்லரும், டேவிட் என்பவரும் இணைந்து பேட்மேன் இயர் ஒன் என்னும் ஒரு தொடரை உருவாக்கினார்கள். இந்த தொடரும் பழைய பேட்மேன் கதையின் தழுவலே. இந்த புத்தகங்கள் நான்குதான் வந்தது அதாவது ஆரம்ப கதை. இந்த நான்கு புத்தகங்களில் சாதாரண ப்ரூஸ் வெய்ன் எப்படி பேட்மேன் ஆகிறார் என்றும், ஒரு சாதாரண போலீஸ் ஆபிஸரான கார்டன் அதிகாரி ஆகி, எப்படி குற்றத்திற்கு எதிரன போராட்டத்தில் பேட்மேனுடன் இணைகின்றார் என்றும் விவரிக்கின்றது. இந்த கதைகளும், இன்னும் சில கதைகளையும் சேர்த்து திரைக்கதைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்திய பின் உருவானதுதான் கிரிஸ்டோபர் நோலனின் முதல் பேட்மேன் படம் ”பேட்மேன் பிகின்ஸ்”.


TO CONQUER FEAR, YOU MUST BECOME FEAR....

இந்தப் படம் வெளிவந்த பின்பு அந்த படத்தின் திரைக்கதையை, அதே பெயரில், ஒரு காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டனர். அந்த புத்தகத்தின் முதல் பக்கம் இங்கே. இந்த புத்தகம் அட்டகாசமாக இருக்கின்றது. அப்படியே சினிமாவின் தழுவல். முதலில் காமிக்ஸை படமாக்குகின்றனர், பின் படத்தை மீண்டும் காமிக்ஸாக வெளியிடுகின்றனர். திரைப்படத்தை தழுவிய காமிக்ஸ் புத்தகத்தின் அட்டை.

பேட்மேன் பிகின்ஸுக்கு அடுத்து வந்த தி டார்க் க்னைட் படம் வசூலில் சாதனை ஏற்படுத்திய படம். 
இந்தப் படத்தில் பேட்மேனுடன் ஜோக்கர் மோதுகின்றார். ஜோக்கரின் பிரபலமான வாசகம், WHY SO SERIOUS!.  கோத்தம் சிட்டியின் டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி ஹார்வி டெண்ட், குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு ஒன்றினைந்த போரை துவக்குகிறார். ஜோக்கரின் தொடர்ந்த சூழ்ச்சி நிறைந்த தாக்குதல்களால் கோத்தம் சிட்டி நிலை குலைகிறது. இதனால் கோத்தம் சிட்டியின் அமைதி இழக்கப்படுகிறது. வண்டிச் சக்கரத்தின் அச்சானியை பிடுங்குவதுபோல ஜோக்கர் ஹார்வி டெண்டையும், அவரது உதவியாளரும், காதலியுமான ரேச்சலையும் தனித்தனி இடங்களில் அடைத்துவைத்து ஒரே நேரத்தில் வெடிக்கும்படி டைம் பாமும் வைத்துவிடுகின்றான். 


இதில் ரேச்சல் பேட்மேனின் பால்ய காலத்து மற்றும் நிகழ்காலத்து தோழி. ரேச்சல், ப்ரூஸ் வெய்ன் மற்றும் ஹார்வி டெண்ட் மூவருமே ஒரு முக்கோன காதலில் இருக்கின்றனர். இதற்கு மேல் இங்கு இந்த அருமையான படத்தின் கதையை நான் சொல்லப் போவது இல்லை. இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் இருந்தால் எனது பதிவு அவர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை சிதைத்துவிடும்.

டார்க் க்னைட் திரைப்படத்திற்கு ஏதும் காமிக்ஸ் வெளிவந்ததாக தெரியவில்லை. நண்பர்களுக்கு தெரிந்தால் மெயில் செய்யவும்.
மேலும் ஒரு குறுந் தகவல். டார்க் க்னைட் திரைப்படத்தில் ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜரின் நடிப்பு வெகு சிறப்பு. இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜொக்கராகவே வாழ்ந்திருப்பர்.  நடிப்பைப் பார்த்து நான் மிகவும் வியந்தேன். நடிப்பென்றால் அப்படி ஒரு அபாரமான நடிப்பு. இந்தப் படத்துக்காக மட்டும் இவர் 35 பல்வேறு அவார்டுகளை வென்றுள்ளார். இதில் ஒரு சோகமான விஷயம் ஹீத் லெட்ஜர் 28 வயதிலேயே 22.01.2008 அன்று இறந்துவிட்டார். தி டார்க் க்னைட் படம் வெளியான தேதி 18 ஜுலை 2008. ஆம், படம் வெளி வருவதற்கு முன்பே இவர் இறந்துவிட்டார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதற்கேற்ப இவரின் நடிப்பு, வேறெந்தப் படத்தை விடவும் இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தது. இவருடைய பல படங்களை நான் ஏற்கெனவே பார்த்திருந்தாலும், இந்த நடிகர் யார் என்று என்னை தேடிப் பார்க்க வைத்த நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தினார். ஆனால் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இவர் இறப்பதற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. என் மொபைல் ஸ்கிரீனிலும், கம்ப்யூட்டரின் ஸ்க்ரீனிலும் பேட்மேனை விட ஹீத் லெட்ஜர்  ஜோக்கர் வேடத்திலிருக்கும் படங்களே வால்பேப்பராக அதிக நாட்கள் இருந்திருக்கின்றது என்பதே உண்மை.

இப்போது இந்த டார்க் க்னைட் பற்றிய பதிவின் இறுதிக்கு வந்துவிட்டோம். கிறிஸ்டோபர் நோலன் டார்க் க்னைட்டை மூன்று பாகங்களாக எடுத்திருக்கின்றார். இந்த படத்தை பார்க்கும் போது பல உளவியல் தத்துவங்களை எடுத்து பல கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் டைரக்டர். அந்தந்த கேரக்டர்களைப் பார்த்தால் அவை கெட்ட கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டருக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷனை கொடுத்திருக்கின்றார் டைரக்டர்.

நானும் சின் சிட்டியில் ஆரம்பித்த இந்த பதிவுக்கான ஓட்டத்தை இங்கு நிறுத்திக் கொள்கிறேன். 20ம் தேதி ஜூலை மாதம் 2012ல் பேட்மேனின் மூன்றாவது தவனையான டார்க் க்னைட் ரைசஸ் படம் ரிலீஸ் ஆகின்றது. முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் இந்த மூன்றாவது படத்திற்கு மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ப்ராங் மில்லரைப் பற்றி, மூன்று பதிவுகளில் கொண்டு வந்ததற்கு காரணம், அவர் நம்மைப் போலேவே ஒரு சிறுவனாக இருக்கும் போது பேட்மேன் காமிக்ஸின் ரசிகனாக மாறி, பின்னாளில் அந்த பேட்மேனையே ஓவியமாக வரையும் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கின்றார். சிறு வயதில் அவர் படித்த பேட்மேன் காமிக்ஸில் எவையெல்லாம் சரியில்லை என்று நினைத்தாரோ, எவையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் பின்னாளில் கலந்து உருவாக்கியதுதான் டார்க் க்னைட். மில்லர், ஒரு வாசகனாக, ரசிகனாக பேட்மேன் காமிக்ஸில் செய்த கரெக்‌ஷன் இன்று டிசி காமிக்ஸுக்கு நல்ல கலெக்‌ஷன் பேட்மேன் டார்க் க்னைட்டின் வெற்றி, ஒரு காமிக்ஸ் ரசிகனின், வாசகனின் வெற்றி.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். இங்குள்ள தகவல்களில் ஏதேனும் குறையிருந்தால் தவறாமல் உங்கள் கமெண்டுகளில் குறிப்பிடுங்கள்.

Friends,
பாலாஜி சுந்தர்.


15 comments:

 1. நல்ல விளக்கங்கள் நண்பரே.
  நீங்கள் பதிவிடும் தொனி நன்றாக உள்ளது.
  நான் பேட்மேன் காமிக்ஸ் படித்ததில்லை.
  நண்பர் ராஜேஷ் அவர்களது பதிவில் கூறியிருக்கும் Dark knight சீரீஸ் மட்டும் டவுன்லோட் செய்து படிக்கவேண்டும் என்று உள்ளேன்.
  பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இரவுக்கழுகாருக்கு வணக்கம்,

   என்னுடைய பேவரிட் நாயகர்களில் பேட்மேனும் ஒருவர். கோதம் சிட்டி என்ற கற்பனை நகரத்தில்/நரகத்தில் நடக்கும் கதை. சின் சிட்டியின் கதை பேசின் சிட்டி என்ற கற்பனை நரகத்தில்/நகரத்தில் நடக்கும். கோதம் மற்றும் பேசின் சிட்டி இவை இரண்டுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு, அது இரண்டுமே கற்பனையென்றாலும் அது மறைமுகமாக கூறிப்பிடுவது, நியூயார்க் நகரத்தைத்தான்.
   பேட்மேன் கதைகளைப் பொறுத்தவரை அதில் வரும் வில்லன்களைப் பார்த்தால் அனைவருமே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்தான். இன்னும் சற்று மேலோ சொல்ல வேண்டுமென்றால் அனைத்துமே பைத்தியங்கள்தான். பேட்மேனும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்தான். டைரக்டர் பாலா பார்த்தால் உடனே படமாக எடுத்துவிடுவார். ஏனோ தெரியவில்லை கௌதம் வாசுதேவ் மேனன் இன்னும் பேட்மேனை விட்டு வைத்திருக்கின்றார். இந்த பாயிண்ட் ஆப் வியூவில் சிறிது அனலைஸ் செய்து பாருங்கள். நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். மேலும் கோதம் சிட்டியில் ஆர்க்ஹேம் அஸைலம் என்னும் ஒரு இடம் வரும் அது கோத்தம் சிட்டியில் இருக்கும் பைத்தியங்களை அடைத்து வைக்கும் இடம்.

   நண்பர் ராஜேஷ் என்பது யார்? அவர் பதிவு எது?
   welcom to WhatApp Club. நண்பர் கார்த்தியேயனுக்கும் உங்களுக்கும் தான் மெசேஜ் அனுப்பினேன். அவர் இன்னும் டவுன்லோடவில்லை.
   வாழ்த்துக்களுக்கு நன்றி

   Delete
  2. நண்பரே கருந்தேளாறாய் தான் நான் கூறி இருக்கிறேன்

   Delete
 2. என்ன ஆச்சர்யம், கடந்த ஞாயிறு அன்றுதான் டார்க் நைட் மறுபடியும் (மூன்றாவது தடவை) பார்த்தேன். ஸ்பைடர் மென் படங்களைவிட எனக்கு பேட்மென் படங்கள் பிடிக்கும்.

  என்னடா சில நாட்களா உங்க ப்ளாக்ல ஒரே ரத்தகளறியா இருக்கேன்னு பயத்தோட இருந்தேன். நல்லவேளயா ஜோக்கர் வந்து மேலும் ரத்தக்களறி ஆகாம தடுத்துட்டார்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே தவறாக நினைகிறீர்கள்.
   ஜோக்கர் வந்தாலும் ரத்தக்களறி தான்.
   Why so serious இல் எவளவு ரத்தம் பார்த்தீர்களா.

   Delete
  2. பாலாஜி சுந்தர் ஒரு முடிவோடதான் இருக்கார்னு நினைக்கிறேன். இந்த சின்ன பையன ரொம்பதான் பயமுறுத்துராறு..:)

   Delete
  3. நண்பர் கார்திகேயனுக்கு வணக்கம்,

   எனக்கும் ஸ்பைடர் மேனை விட பேட்மேனே மிகவும் பிடிக்கும். ஆனால் பாருங்கள் பேட்மேனை(DC) விட ஸ்பைடர்மேனோ அல்லது ஸ்பைடர் உமனோ (Marvel Comics), அடுத்த அவெஞ்சர்ஸ் படத்தில் வர வாய்ப்பு இருக்கின்றது. அவெஞ்சர்ஸ் காமிக்ஸை படித்தீர்கள் என்றால் தெரியும். ஏறக்குறைய 12 ஹீரோக்கள் இருக்கின்றார்கள் அவெஞ்சர்ஸ் காமிக்ஸில்.
   // இந்த சின்ன பையன ரொம்பதான் பயமுறுத்துராறு//
   நண்பரே உங்களுக்கு பால்ய காலத்திலேயே கல்யாணம் நடந்துவிட்டதா?

   நீங்கள் 10 வயதை கடந்த சின்ன பையனா அல்லது இரண்டு 10 வயதை கடந்த சின்ன பையன்களோட சின்ன பையன்களின் தந்தையா?
   உங்களது ஆக்ரோஷமான பின்னூட்டத்தினை எடிட்டரின் ப்ளாகில் கண்டேன்.
   9 வயது பையன் 10 வயது பையனை பயமுறுத்த முடியுமா?
   ஒகே கார்த்திகேயன், அதிகமா நமது பால்ய வயது பற்றி பேசினா கழுகாருக்கு மூக்கில் வேர்த்துவிடும். ஜாக்கிரதை. எப்போதும் சினிமா நடிகைகளும், கல்யாணம் ஆன ஆண்களும் வயதைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது.

   Delete
 3. நண்பரே..முதல் முறையாக உங்கள் வலைப்பூ வருகிறேன்....
  உங்கள் பதிவை படித்த போது எனக்கு TDK படம் பார்த்தது போல் உள்ளது.......
  உங்க WARNINGகை மீறி உங்க follower ஆகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் நண்பரே,

   உங்கள் பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

   வார்னிங்கை மீறி எனது வலைத்தளட்தில் Follower ஆக இணைந்துள்ளீர். உங்களது வலைப் பக்கத்தையும் பார்த்தேன், அருமையாக உள்ளது. உங்கள் வலைப்பக்கத்தை நன்றாக மெருகூட்டி வருகிறீர்கள்.

   இங்கு இணைந்து இன்னும் நாம் போதையில் திளைக்க வாழ்த்துக்கள். CHEERS.... KLUNG..KLUNG..

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
 4. TDKR படத்தை பார்த்து விட்டீர்கள் என்றால் உங்கள் கருத்தை சொல்லுங்க...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,

   TDKR படத்தை பார்க்க இன்னும் இரண்டுவாரங்களுக்கு மேல் ஆகும் என்று நினைக்கின்றேன். பார்த்த உடன் கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

   உங்கள் தளத்தைப் பார்த்தேன். ஆங்கிலப் படங்களின் விமர்சனங்களைப் படித்தால், அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்படி எழுதியிருக்கிறீர்கள்.
   IMDB TOP 250 பாலோ செய்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். வாழ்த்துக்கள்.
   உங்களிடம் ஒரு கேள்வி, காமிக்ஸ்களைப் பற்றிய உங்களது கருத்துக்கள் எப்படி, பேட்மேன் காமிக்ஸ் படித்த அனுபவம் இருக்கிறதா?

   www.lion-muthucomics.blogspot.com என்ற வலைப்பூ ஒன்று உள்ளது. ஒரு முறை அங்கு சென்று பார்த்து வாருங்கள். நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்த காரணங்களில் இந்த தளமும் ஒன்று. மேலும் இந்த தளத்தில் உங்களைப்போன்ற பாலோயர்ஸ்களாக இணைந்திருப்பவர்களின் தளங்களையும் ஒரு முறை நோட்டமிடுங்கள் என்று உங்களிடம் ஒரு அன்புக் கோரிக்கை வைக்கின்றேன்.

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
 5. Replies
  1. Thank you very much for your compliments Mr.Arul.

   Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.