Friday 31 August 2012

THE PHANTOM 2009




சிறு வயதிலிருந்தே எனது ஆதர்ச காமிக்ஸ் கதாபாத்திரம் ஃபேண்டம்.  ஃபேண்டம் போல குதிரையெல்லாம் சரிப்பட்டு வராது, ஆனால் டெவில் போல ஒரு ஓநாய் இருந்தால் நிறைய விஷயங்களுக்கு வசதி என்று, நானும் ஒரு ஓநாயை வளர்க்க வேண்டும் என்று தீர்மாணித்து இருந்தேன். குடும்பமே சேர்ந்து வீட்டுக்கு ஒரு ஓநாய்க்கு மேல் வளர்க்க முடியாது என்று தடுத்துவிட்டார்கள். பிறகென்ன, ஓநாயின் நெருங்கிய சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட்டை வளர்த்தேன். அந்த ஜெர்மன் ஷெப்பர்டிற்கும் “டெவில்” என்று பேர் வைக்கப் போகிறேன் என்று சொன்னதற்கு,  வீட்டிலிருந்த அத்தனை பேரும் என்னை ஒரு டெவிலைப் பார்ப்பது போல பார்த்து, என் மண்டைக்குள்ளே டெவில் நுழைந்து விட்டது என்று சொல்லி, பிடி பிடி என்று ஒரு பிடி பிடித்து விட்டனர் (சண்டைதான்). கடைசியில் முதலுக்கே மோசம் வந்ததுபோல, ஜெர்மன் ஷெப்பர்டும் பறிபோகும் நிலை வந்ததும், டெவில் பெயரை கைவிட்டு, வேறு ஒரு சாத்வீகமான பெயரை வைத்து பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். வீடும் அமைதி ஆனது. ஆனால் மிஸ்டர் ஜெர்மன் ஷெப்பர்டோ, சாத்வீகத்திற்கும் அதற்கும் ரொம்ப தூரம் என்று தீர்மாணித்து, ஃபேண்டமின் டெவிலைப் போலவே குணம் கொண்டு, எங்கள் ஏரியவிலேயே மிகவும் பேமஸாக ஆகிவிட்டார்.

நமது எடிட்டர் திரு விஜயன் ஏன் ஃபேண்டமிடம் பாராமுகமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. எடிட்டரின் கடைக்கண் பார்வை இவர் மேல் எப்போழுது விழும் என காத்திருக்கின்றேன். அப்படி ஒரு விஷயம் நடந்தால், நம் எல்லோருக்கும் புதிய சைசில், கலரில் ஃபேண்டம் காமிக்ஸ் கிடைக்கும். எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு ஸ்ட்ராங் அப்பீல் போட்டுவிட்டு, போட்டுவிட்டு வேறென்ன செய்ய, எடிட்டரைப் போல் Fingers Crossed. காத்திருப்போம் நம்பிக்கையுடன் நண்பர்களே.


டாம் டைலர் (Tom Tyler) என்ற நடிகர், 1943-ல் ஃபேண்டமாக நடித்து இருந்த படத்தை, வட சென்னையில் இருக்கும் மகாராஜா திரையரங்கத்தில் 1970-களின் வாக்கில் (தோராயமான வருடம்) திரையிடப்பட்டபோது (அந்த திரையரங்கம் பாண்டியன் என்று பெயர் மாறி, இன்று வாகனங்கள் மட்டும் பார்க் செய்யும் இடமாக இருப்பதாக கேள்வி). அந்த படத்திற்கு, என்னை எனது தந்தை அழைத்துச் சென்றார். அந்த படம் பார்க்கும் போது அதில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு படத்தில் துண்டு துண்டாக கதைகள் வந்த படி இருந்தது. அந்த படத்தில் இருந்த பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளும், அதில் நடித்தவர் பெயரும் மட்டுமே நினைவில் இருந்தன. தந்தையிடம் படத்தைப் பற்றிய எனது கேள்விகளுக்கு அவர் சொன்னது, இது ஃபேண்டம் படம் என்று கூறினார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு பேண்டம் காமிக்ஸ் அறிமுகம் ஆகவில்லை. காலப் போக்கில் அந்த படத்தின் பெயர் டாம் டாலர் என்று எனது நினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த நினைவோடு எப்போதும் பேண்டமும் கலந்தே இருந்தார். என்னைப் பொறுத்தவரை, இந்த நினைவு ஒரு குழப்பமான நினைவு.


கம்ப்யூட்டர் யுகம் ஆரம்பித்த பின் இந்த டாம் டாலரை வலையுலகத்தில் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தேன்.  தேடலின் முடிவு எனக்கு தந்த விடை, நான் தேடுவது டாம் டாலர் என்ற திரைப்படமல்ல, நான் சிறுவயதில் பார்த்தது டாம் டைலர் என்ற நடிகர் நடித்த தி பேண்டம் படம் அது என்ற ஞானத்தைத்தான். அது மட்டுமல்ல, அது திரைப்படம் அல்ல, அது ஒரு டிவி சீரியல். ரேடியோவே பிரபலமாகாத காலத்தில் டிவி சீரியலை திரையரங்கத்தில் பார்த்ததால் விளைந்ததே எனது  குழப்பம்.

ஃபேண்டம் கதைகள் பல முறை திரையாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. எனக்குத் தெரிந்த விவரங்களை கிழே வரிசைப்படுத்தி உள்ளேன்.

  1. டாம் டைலர் நடித்த, தி ஃபேண்டம் – 1943
  2. ரேஜர் க்ரீட் நடித்த தி ஃபேண்டம் – 1961
  3. 2040: ஃபேண்டம் அனிமேட்டட் டிவி ஸீரிஸ் - 1994
  4. பில்லி ஸேன் நடித்த தி ஃபேண்டம் – 1996
  5. ரையான் கார்னெஸ் நடித்த தி ஃபேண்டம் – 2009
மேலுள்ள ஐந்து படங்களுள், 1996ல் பில்லி ஸேன் நடித்து வெளிவந்த ஃபேண்டம் படம் தவிர மற்ற அனைத்தும் டிவி சீரியல்கள்.

இப்பொழுது ரையான் கார்னெஸ் நடித்த தி ஃபேண்டம் (2009) படத்தைப் பற்றி இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இது இரண்டு பாகங்களைக் கொண்ட டிவி சீரியல். இதில் சொல்லப்பட்டு இருக்கும் கதை, நமது 21ஃபேண்டம் இறந்து (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 1), அவருடைய மகனான 22-வது பேண்டம், கிட் வாக்கர், ஃபேண்டமாக பொறுப்பேற்பதை காட்டுகிற கதை.


கதை:

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் தன் சிறு மகனுடன் காரில் செல்கையில், பல கார்களால் விரட்டப்படுகிறார். துரத்தும் கார்கள், முன்னால் செல்லும் காரில் இருப்பது ஒரு பெண்ணும் குழந்தையும் என்று கூட பார்க்காமல் பேய் வேகத்தில் விரட்டி, இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள், வெகு தூர துரத்தலுக்குப் பின் கார் ஓட்டிவந்த பெண் நிலை தடுமாற கார் வேகமாக துறைமுகக் கடலுக்குள் பாய்கிறது. விரட்டி வந்த காரிலிருக்கும் நபர்கள், காரிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அந்த தகவலை அவர்களது தலைவனுக்கு போனில் தெரிவிக்கின்றான். கொலைக் கும்பல் அங்கிருந்து அகன்றதும், துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள், துறைமுக சுவற்றில் இடித்து சேதமாகிவிடாமல் இருக்க தொங்க விடப்பட்டு இருக்கும் பெரிய டயருக்குள் உயிர் தப்பிய சிறுவன் இருப்பதை கேமிரா காட்டுகிறது.

அடுத்து நாம் பார்ப்பது அந்த சிறுவன் க்ரிஸ் மூர் என்ற பெயரில் ஒரு தம்பதியினரால் வளர்க்கப் படுகிறான். க்ரிஸ் மூருக்கு தான் அனாதை என்ற விவரம் தெரியாது. அவன் அடிக்கடி பயங்கரமான, கார் தண்ணீருக்குள் பாய்வது போலவும், யாரோ துப்பாக்கியால் சுடுவது போலவும், ஒரு பெண்ணின் உருவமும் கொண்ட கனவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. அவையெல்லாம் வெறும் கனவுகள் என்று அவனது வளர்ப்புப் பெற்றோர்கள் கூறுகிறார்கள். க்ரிஸ்சும் அதை நம்புகிறான். க்ரிஸ் மூர்தான் 22-வது ஃபேண்டம் என்கிற உண்மை அவனுக்கும், அவனது வளர்ப்புப் பெற்றோருக்கும் தெரியாது.

க்ரிஸ் மூர், பார்கோர் (Parkour) என்னும் ஓட்டக் கலையில் தேர்ந்தவராக இருக்கிறார். பார்கோர் என்னும் வார்த்தையை இதுவரை கேட்டிராத நண்பர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பார்கோர் பிறந்த இடம் ஃப்ரான்ஸ் நாடு. பார்கோர் என்றால் ஃப்ரீ ரன்னிங், தமிழில் கட்டு தாண்டுதல் என்று அழைக்கின்றார்கள். இந்த பயிற்சியை கடைப்பிடிப்பவர்கள் சென்னையிலும் இருக்கின்றார்கள். இதை வைத்து பல ஆங்கில படங்கள் வெளிவந்திருக்கிறாது. இது சம்பந்தமாக ஒரு சிறந்த படம் இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் ”யாமகாசி” (Yamakasi) என்ற ஃப்ரெஞ்சு படம் (ஆங்கில சப்டைட்டில் உண்டு), பார்கோருக்கு சிறந்த படம் அது. அது தவிர பார்கோருக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டேனியல் க்ரேய்க் ஜேம்ஸ்பாண்ட்டாக நடித்த கேசினோ ராயல் துவக்க காட்சியில் ஒரு ஆப்ரிக்கரை துரத்திக் கொண்டு ஓடுவார். தமிழில் வெளிவந்த கே.வி. ஆனந்தின் “அயன்” படத்தில் சூர்யாவிடமிருந்து டைமண்ட்களை கவர்ந்து செல்லும் பல ஆப்ரிக்கர்களை துரத்திப் பிடிப்பரே அந்த முறையெல்லாமே பார்கோர் ஸ்டண்ட் மேன்கள் செய்ததுதான். நம்ம கேப்டன் கூட சுவரில் ஜாக்கிசான் போல ஒரு எத்து எத்தி எதிரிகளை பந்தடுவாரே அதன் பெயர் என்ன என்று நண்பர்கள் யாரும் கேட்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

உதாரணத்துக்கு இரண்டு யூடியூப் லிங்க் கொடுத்துள்ளேன்.




பார்கோர் முறையில் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. கரணம் தப்பினால் மரணம் என்ற சொல் வழக்கு தமிழில் உண்டு. குட்டிக் கரணம் போடும் போது தவறினால் மரணம் என்பதை நமது பெரியவர்கள் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள்!. உயிருக்கு உத்திரவாதமில்லாத இந்த ஆபத்தான விளையாட்டு தடை செய்யப்பட்ட ஒன்று.


நண்பனுடன் போட்டி போட்டு ஃப்ரீ ரன்னிங்கில் ஓடும் க்ரிஸ், பந்தயம் முழுக்க முன்னிலையிலேயெ இருக்கிறார். பந்தயத்தின் ஒரு கட்டத்தில், தொடர்ந்து வரும் நண்பன், உயரத்திலிந்து குதிக்கும் போது தவறி விழுந்து அடிபடுகிறது. விழுந்த இடத்திலிருந்து நண்பனால் எழுந்திருக்க முடியாத நிலையில் க்ரிஸ்சும் அங்கேயே நின்று விடுகிறார். ஆம்புலன்ஸ் வந்து அடிபட்ட நண்பனுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அதே நேரத்தில், ஆபத்தான விளையாட்டை விளையாடியதற்கும், தனியார் பேக்டரிக்குள் ட்ரஸ்பாஸிங் செய்ததற்கும் க்ரிஸ் கைது செய்யப்படுகிறார்.

போலிஸ் நிலையத்தில் க்ரிஸ்ஸை போட்டோ எடுத்து, ரத்த சாம்பிளும் எடுக்கிறார்கள். போலிஸ் துறையை சேர்ந்த டிடெக்டிவ், லாக்கப்பில் இருக்கும் க்ரிஸ்ஸை அழைத்துச் சென்று, பிறகு விடுவித்து விடுகிறார். க்ரிஸ்சின் நண்பனுக்கு முதல் உதவி செய்ய வந்த ஆம்புலன்சில் இருந்த ரென்னி டேவிட்சன், கிரிஸ்ஸுடன் பள்ளியில் ஒன்றாக படித்த பெண்.  ரென்னி டேவிட்சனின் தந்தைதான் தன்னை விடுவித்த போலிஸ் ஆபிஸர் என்பது க்ரிஸ்ஸுக்கு தெரிய வருகிறது. க்ரிஸ்ஸும், ரென்னியும் நெருக்கமாகிறார்கள்.


ஒரு நாள் இரவு நேரத்தில் ரென்னியை அவள் வீட்டில் விட்டு திரும்பும் போது, ஏபெல் என்பவரால் க்ரிஸ் கடத்தப் படுகிறார். க்ரிஸ்தான் கிட் வாக்கர் என்றும், அவர்தான் 22-வது ஃபேண்டம் என்றும், அவருடைய உண்மையான பெற்றோர், 21-வது ஃபேண்டமும், டாயானா வாக்கரும்தான் என்று ஏபெல் கூறுகிறார். மேலும் 21-வது பேண்டம் இறந்து 22 வருடங்கள் ஆகின்றது என்றும் (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 2), முதலாம் ஃபேண்டமினல் தோற்றுவிக்கப்பட்ட ஜங்கிள் பேட்ரோல் என்ற வனக்காவல் படை என்னும் குழுவை இன்று ஒரு உலகளாவிய பெரிய இயக்கமாக தான் உருவக்கியிருப்பதாகவும், அதன் தலைமையிடம் பென்கல்லா என்ற இந்தோனேஷிய தீவில் இருப்பதாகவும் ஏபெல் கூறுகிறார்.


சிங் ப்ரதர்ஹூட் எனப்படும் கடல் கொள்ளையர்கள் கும்பல் இன்று ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளந்திருக்கிறது என்றும், அவர்களே க்ரிஸ்ஸின் தாயாரான டயானா இறக்கக் காரணம் என்றும், 21-வது ஃபேண்டம் கேன்சரினால் இறந்ததாகவும், க்ரிஸ் தன்னுடன் வந்து அடுத்த ஃபேண்டமாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். க்ரிஸ் இவை அனைத்தும் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு செல்கிறார். வீட்டில், தன் பெற்றோரை தேடும் க்ரிஸ், அவர்கள் இருவரும் பாத் டப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்க்கிறார். கொலையாளிகள் க்ரிஸையும் தீர்த்துக் கட்ட முயலும் போது, அவர்களிடமிருந்து தப்பித்து செல்கிறார். க்ரிஸ்ஸை துரத்தும் இரு கொலையாளிகளில் ஒருவன் துரத்தும் முயற்சியில், க்ரிஸ்ஸால்  ஏற்படுத்தப்படும் விபத்தில் இறக்கிறான். ஏபெல்தான் ஆட்களை வைத்து தன் பெற்றோர்களை கொலை செய்தார் என்று நினைத்து, ஏபெல் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்று, ஜன்னல் வழியாக உள்ளே க்ரிஸ் நுழைய, சலனத்தினால் எச்சரிக்கையடைந்த ஏபெல், க்ரிஸ்ஸை மடக்குகிறார். பின் விஷயம் அறிந்து, கொலைகளுக்கு தான் காரணம் இல்லையென்றும், க்ரிஸ் இனியும் இங்கிருப்பது மிகவும் ஆபத்து என்றும் கூறி க்ரிஸ்ஸை தன்னுடன் பென்கல்லா வருமாறு கட்டாயமாக கூறுகிறார். வேறு வழியின்றி க்ரிஸ்ஸும் சம்மதிக்க, விமானம் பென்கல்லா செல்கிறது. அங்கே, க்ரிஸ் மண்டையோட்டு குகைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அங்கே க்ரிஸ்ஸுக்கு அனைத்து விதமான பயிற்சியும் தரப்படுகிறது. 



பயிற்சியின் முடிவில் க்ரிஸ்ஸுக்கு, இனி அவரை கிட் வாக்கர் என்று அழைக்கலாம். பயிற்சியின் முடிவில் வாக்கருக்கு புதிய குண்டு துளைக்காத ஃபேண்டமின் உடைகளை கொடுக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை ஃபேண்டமின் அந்த புதிய முகமூடி யூனிபார்ம். (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 3).


இதற்கிடையே சிங் ப்ரதர்ஹூட் & தொலைக்காட்சி கம்பெனி, டாக்டர் பெல்லா லிதியா என்ற பெண் ஆராய்ச்சியாளரின், புதிய விதமான, சாட்டிலைட் டிவி மூலம் மக்களை மூளைச் சலவை செய்து அவர்களை தாங்கள் விரும்பும் முறையில் கட்டுப்படுத்தி, தங்களின் சுவடே தெரியாத அளவுக்கு தங்களின் குற்ற நடைமுறைகளை செயல்படுத்திக் கொள்ளுகிறார்கள். இதில் பல கொலைகளும் அடக்கம். பல பேர் காரணமே இல்லாமல் இறப்பதிலும், கொலைகளை செய்வதினாலும் போலிஸ் எந்த துப்பும் கிடைக்காமல் திண்டாடுகிறது.

வாக்கரின் (அதாங்க க்ரிஸ்) காதலி ரென்னி, தன் தந்தையுடன் பேசி, க்ரிஸ் காணாமல் போனதை கண்டுபிடிக்க கேட்டுக் கொள்ள, அவரும் சம்மதிக்கிறார். ரென்னியின் தந்தையின் முயற்சியில் சில விஷயங்களை கண்டுபிடிக்க, அந்த விவரத்தை  டிவியில் வாக்கர் பார்க்கிறார். உடனே அவர் ஏபெலிடம் சென்று தன் நண்பர்களுக்கு சிங் பிரதர்ஹுட்டினால் ஆபத்து என்றும், அவர்களை காப்பாற்ற தான் நியூயார்க் செல்ல வேண்டும் என்றும் கேட்கிறார். இதற்கு ஏபெல் மறுத்துவிடுகிறார். மண்டையோட்டு குகையில் இருந்து வெறுப்புடன் வெளியேறும் வாக்கரை அங்கு மறைந்திருக்கும் ஆதிவாசி கும்பல் பிடித்து கீழே தள்ளி, சூழ்ந்து கொக்கரிக்கின்றனர். எழ முயற்சிக்கும் வாக்கரிடம், ஆதிவாசிகளின் தலைவன், அவன் கையை நீட்டி எரியும் நெருப்பை சுட்டிக் காட்டுகிறான். எரியும் நெருப்பின் நடுவே, ஃபேண்டமின் மண்டையோட்டு முத்திரை மோதிரம் இருக்கிறது. வாக்கரும் எரியும் நெருப்பில் கையை நுழைத்து மண்டையோட்டு மோதிரத்தை எடுக்க, நெருப்பும், நெருப்புப் பிழம்பாக இருக்கும் மோதிரமும், வாக்கருடைய கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


ஏபெலுக்குத் தெரியாமல், ஏபெலின் உதவியாளரின் உதவியோடு, வாக்கர் பென்கல்லாவை விட்டு நியூயார்க் செல்கிறார். அங்கே ரென்னியின் தந்தையை சாலையில் பார்த்து, அவருக்கு ஆபத்திருப்பதாக எச்சரிக்கை செய்யும் நேரத்தில், ரென்னியின் தந்தையை அவரது தந்தையின் இன்னொரு நெருங்கிய நண்பரான போலிஸ் ஆபிசர், சிங் பிரதர்ஹுட்டினால் மூளை கண்ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், ரென்னியின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தலையில் சுட்டுக் கொண்டு இறக்கிறான். குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தந்தைக்கு முதலுதவி செய்ய ரென்னியே வர நேரிடுகிறது. ரென்னியின் தந்தை பிழைத்தாலும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையின் எதிர் கட்டிடத்தில் ஒருவன் ரென்னியையும், அவர் தந்தையையும் கொல்ல டெலஸ்கோப் துப்பாக்கியினால் குறிபார்க்கும் நேரத்தில் அங்கே ஃபேண்டம் தோன்றுகிறார். கொலையாளி கட்டிடத்தின் மேல் இருந்து கீழே விழுந்து இறக்கிறான். ஃபேண்டம் ரென்னியிடம் பேசி, இங்கிருந்தால் ரென்னிக்கும், அவள் தந்தைக்கும் ஆபத்து என்று கூறி அவர்களை வனக்காவல் படையின் மூலம் பென்கல்லா அனுப்பிவிடுகிறார்.


இதன் பிறகு சிங் பிரதர்ஹூட்டினுடைய சாட்டலைட் கம்பெனியை ஃபேண்டம், ஏபெலின் உதவியொடு தரைமட்டமாக்குகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி உடன்படிக்கைக்காக வரும் ஒரு முக்கியமான நபரை கொல்ல சிங் பிரதர்ஹுட் திட்டத்தை சாதூர்யமாக முறியடிக்கிறார். கடைசியில் மண்டையோட்டுக் குகைக்கே வந்து சேர்ந்து, தன் காதலியுடன் இணைகிறார். கடைசி காட்சியில் ஏபெலின் உதவியாளரான பெண், அவர் தான் குரானாம் (ஏற்றுக் கொள்ள முடியவில்லை பாயிண்ட் - 4) ஃபேண்டமிடம் கூறுகிறார், “ஒவ்வொரு ஃபேண்டமின் முக்கியமான பல கடமைகளுள் ஒன்று, அடுத்த ஃபேண்டமிற்காக சந்ததியை உருவாக்குவதும் ஒன்று என்று.

நண்பர்களே ஃபேண்டம் ரசிகராக இருந்தால் ஒரு முறை இந்த டிவி படத்தை பார்த்துவிடுங்கள். ஒரு ஃபேண்டம் படம் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். அவெஞ்சர் படத்தில் ப்ரூஸ் பேன்னராக இருக்கும் நபர், ஹல்க்காக மாறி எதிரிகளை துவம்சம் செய்யும் போது நமது மனதில் ஒரு உற்சாக உணர்வு பீரிடும். அது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தும் சில காட்சிகள் இந்த ஃபேண்டம் படத்தில் இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை பில்லி ஸேன் நடித்து 1996-ல் வந்த தி ஃபேண்டம் படம் மிகச் சிறந்த படம். அதைப் பற்றிய பதிவை வேறு ஒரு சமயம் இடுகிறேன்.


இது ஒரு ஃபேண்டம் படம். ஆனால் இதில் இல்லாதவை லிஸ்ட் கீழே;
  1. ஆப்ரிக்காவின் ஆழநடுக்காடு
  2. வெள்ளைக் குதிரை கேசரி இல்லை.
  3. ஓநாய் வாலி இல்லை
  4. தனுஷ் சொல்வது போல பார்க்கப் பார்க்க கூட பிடிக்காத வேதனையை உண்டாக்கும் மண்டையோட்டு குகை. குகை அமைப்பையும் அதன் இருப்பிடத்தையும் பார்த்தால் நமது மனம் பேதலித்துவிடும். அவ்வளவு கொடுமை.
  5. வழக்கமான பேண்டம் உடைகளும், முகமூடியும் இல்லை
  6. விஷ அம்புடன் இருக்கும் பந்தர் குள்ளர்கள் இல்லை
  7. வம்பேசி இனத்தவராக காட்டப்பட்டு இருப்பவர்கள் கொடுமைக்கு கொடுமை சேர்க்கிற ரகம்.
  8. குரான் என்ற கேரக்டரை பெண்ணாக மாற்றியவர்களுக்கும், ஃபேண்டம் கதையின் அஸ்திவாரத்தையே கொத்து பரோட்டா போல ஆக்கியவர்களுக்கும், ஃபேண்டமைச் சார்ந்த எந்த விஷயங்களும் (மோதிரத்தைத் தவிர) இல்லாமல், ஃபேண்டம் படம் எடுத்தவர்களுக்கு   பாப விமோசனமே கிடையாது. இதுபோன்ற யோசனைகளின் சொந்தக்காரர்களுக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனை ஜென்மங்களும் அவர்கள் கரண்ட் என்பதே என்னவென்று தெரியாத இருண்ட கண்டத்தில் காட்டுவாசிகளாகத்தான் பிறப்பார்கள், அந்த இருண்ட கண்டத்தை விட்டு வெளியே போகாமல் அங்கேயே இருப்பார்கள். (நண்பர்களே இருண்ட கண்டம் என்று நான் இந்தியாவை சொல்லவில்லை). 


சிங் பிரதர்ஹுட்டைப் பற்றி சில வார்த்தைகள். ஃபேண்டம் கதைகளில், ஃபேண்டமின் முக்கிய எதிரியாக, கடற்கொள்ளையர்களாக காட்டப்படும் சிங் பிரதர்ஹுட்டின் தலைவன் ஒரு இந்திய சிங். நாம் என்னதான் ஃபேண்டம் காமிக்ஸ்களை விரும்பினாலும் அதில் ஒரு குறை இருக்கும். அந்த குறை ஃபேண்டம் காமிக்ஸில் மட்டும் அல்ல, அந்த சமயத்தில் வந்த மற்ற சில மேலை நாட்டு காமிக்ஸ்களிலும் இருக்கும். அது என்னவென்றால், மறைமுகமாக இழையோடும் நிறவெறிதான் அது. பல காமிக்ஸ்களில் பார்த்திருக்கின்றேன். ஒரு இந்தியரை சித்தரிப்பதென்றாலே அவரின் உருவம் கருப்பாகத்தான் சித்தரிக்கப்படும். ஏதோ ஒரு கதையில், ஒரு சீக்கியரைக் கூட டர்பன் கட்டிய கருப்பான நபராகத்தான் வரையப்பட்டிந்தது.

ஃபேண்டம் காமிக்ஸ் கதைகள் உருவான போது பென்கல்லா என்னும் அடர்ந்த கானகத்திலிருக்கும் ஊரை, இந்தியாவில் இருக்கும் பெங்கால் பிரதேசத்தை மனதில் வைத்து உருவாக்கம் செய்ததாக எப்போதோ படித்த ஞாபகம். பின் அது அடர்ந்த ஆப்ரிக்க கானகமாக காட்டப்பட்டது. ஃபேண்டம் இந்தியாவில் இருந்தால் கடற்கொள்ளையனாக ஒரு சிங் காட்டப்படுவது பொருத்தமானதே. இந்த படத்தில் வில்லன் ரதிப் சிங்காக, காஸ் அன்வர் என்ற கனடா நடிகர் நடித்திருக்கிறார். அப்புறம், இந்த பதிவிற்கு, ஃபேண்டம் தலையில் கை வைத்திருப்பது போன்ற படத்தை போட்டதற்கு காரணம், அவர் இந்த படத்தினைப் பார்த்தால், நம் கதையை இப்படி பண்ணிப்புட்டானுங்களே இந்த SyFy சேனல்காரனுங்க, என்று எண்ணி இப்படித்தான் உட்கார்ந்திருப்பார். இவனுங்க அத்தனை பேர் முகத்திலும், மண்டையோட்டு முத்திரையை போடாவிட்டால் என் பெயர் ஃபேண்டம் இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்பார்.



அவ்வளவுதான் நண்பர்களே, இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட்டுகளாக இடுங்கள். கட்டாயம் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தயாரிப்பாளர்களை மட்டும் திட்டும் உங்கள் கமெண்ட்டுகளையும் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.


அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

23 comments:

  1. மீண்டும் ஒரு நல்ல பதிவு.
    உங்களுடைய அனைத்து பாயிண்டுகளும் உண்மை.
    நான் இதன் முதல் பாகம் மட்டும் பார்த்துள்ளேன்.
    இரண்டாம் பாகம் கிடைக்கவில்லை.
    முகமூடி வரும் சமயம் பொருத்தமாக இந்த பதிவு.
    எனக்கு முதலில் அறிமுகமானது மாயாவி தான்.
    அதனால் எனக்கு ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. பழைய மொக்கையான காமிக்ஸ் என்றாலும், அதை பழைய புத்தக கடையில் பார்த்தாலோ அல்லது மறுபதிப்பு வரும் போதோ, உள்ளத்தில் எழும் ஒரு உந்துதலினால், அதையும் ஒரு பிரதி வாங்கி நமது கலக்‌ஷனில் வைப்போம். அந்த கேட்டகரியில் சேர்ந்ததே இந்த படமும். களவும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு முறை பார்த்து மறக்க வேண்டிய வகையறாவை சேர்ந்த படம் இது.

      // ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும்//

      என்னைப் போலவே உங்களுக்கும் ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற உணர்வு ஏற்பட்டது என்பது ஃபேண்டமின் ரசிகர்கள் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை எனக்கு உணர்த்தியது.

      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. தெளிவான ஸ்கேன்கள், தெரியாத தகவல்கள், தெளிவான குழப்பமில்லாத பதிவு என்று ஒவ்வொருமுறையும் போட்டுதாக்குகிறீர்கள். இப்போதெல்லாம் பாலா-ஜி யோட அடுத்தபதிவு என்ன என்று எதிர்பார்ப்பை எகிரவைக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, வருகைக்கும் பாரட்டுகளுக்கும் நன்றி. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன், எகிறும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போலவே கைகொள்ளும் அளவுக்கு அடுத்த சில பதிவுகளை தயாரித்துக் கொண்டு உள்ளேன். ஒரு வேளை அடுத்த பதிவு மொக்கையாக போனால் இருக்கவே இருக்கிறது கண்டன கமெண்ட்டுகள்.

      Delete
  3. மிக்க நன்றி சார்... பதிவை நான் வாசித்தேன்... கண்ணொளியை வீட்டில் குழந்தைகள் பார்த்தார்கள்...

    கீழே உள்ள (WARNING) போல் நானும் ஆகி விடுவேன் போலிருக்கு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      எனது பதிவில் உங்களது பின்னூட்டத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      நெடுநாளாக உங்களின் பின்னூட்டங்களை பல வலைப்பூக்களில் பார்த்திருக்கிறேன். உங்களின் பின்னூட்டத்தை சமீப காலமாக காமிக்ஸ் வட்டத்தை சேர்ந்த நண்பர்களின் தளங்களிலும் பார்த்திருக்கிறேன். ப்ளாகுகளுக்கான பல விருதுகளைப் பெற்ற நீங்கள் என்னைப் பாராட்டுவது என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்துவிட்டது. மேலும் என்னுடைய பழக்கம் உங்களையும் தொற்றிக் கொள்ளும் போல் இருக்கிறது என்று சொன்னது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது.

      சார் என்ற வார்த்தைக்கு பதில் நீங்கள் என்னை பெயரைச் சொல்லியோ அல்லது நண்பன் என்றோ விளிக்கலாம்.

      உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி உங்களால் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்களையும் இட்டுக் கொண்டு, தொடர்ந்து பதிவுகளையும் செய்கின்றீர்களோ தெரியவில்லை. அந்த ரகசியத்தையும் ஒரு பதிவாக போட்டீர்கள் என்றால் எங்களுக்கு எல்லாம் உபயோகமாக இருக்கும்.

      நன்றி, நன்றி.

      அன்புடன்,

      பாலாஜி சுந்தர்.

      Delete
    2. நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர்களும் இட்ட இரண்டு பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சிரமத்திற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.

      Delete
    3. நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர்களும் இட்ட இரண்டு பின்னூட்டங்களும் ஸ்பேமாக நினைத்து, ப்ளாகர் அதை ஸ்பேம் போல்டரில் போட்டுவிட்டது. ஸ்பேம் போல்டரை அனுகி, அங்கிருந்து இந்த இரண்டு பின்னூட்டங்களையும் மீட்டெடுத்து வந்தேன்.

      Delete
  4. நல்ல பதிவு..நிறைய தகவல்கள்..உங்க உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
    ஒரு சிறு விண்ணப்பம்...உங்கள் டெம்ப்ளேடில் படங்கள் வெளியே தெரிகிறது. படிக்க ஒரு மாதிரியாக உள்ளது. கொஞ்சம் மாற்றினால் படிக்க இன்னும் நன்றாக் இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜ் அவர்களுக்கு,

      உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக படங்களின் அளவை சிறிதாக்க முயற்சி செய்ததன் விளைவாக, எழுத்துக்களின் பார்மேட்டிங்கில் இடம் மாறி வேறு விதமான சிக்கல் எழுகிறது. அதனால் அந்த முயற்சியை கைவிட்டேன். நீங்கள் மாற்றச் சொல்வது, படங்களின் அளவையா, அல்லது
      ப்ளாகர் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்கிறீர்களா? படங்களின் அளவை என்றால், அடுத்த பதிவின் போது நினைவில் கொள்கிறேன். இது போல் படங்களை சேர்த்ததற்கு காரணம்,
      திரைப்படம் சம்பந்தப் பட்ட காட்சிகள் வைட் ஆங்கிளில் தெரிந்தால், பார்ப்பவர்கள் மனதில் சினிமாவின் உணர்வு ஏற்படுத்துவதற்காக. இந்த ப்ளாகர் டெம்ப்ளேட்டை தேர்வு செய்ததற்கு காரணம், டார்க் பேக்ரவுண்டில் வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் பைஃபேக்கல் கண்ணாடி இருப்பவர்களும் எளிதில் சிரமமில்லாமல் படிக்க முடியும், கண்களும் சோர்வடையாது என்பதாலேயே இந்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்தேன். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிரமமில்லாமல் படிக்க முடியும். இந்த டெம்ப்ளேட் பெரிய மார்ஜின் ஸ்பேஸ் கொண்டுள்ளது, அந்த அளவையும் ஒரு முறை மாற்ற முயற்சித்தேன், அப்போதும் சிக்கல் ஏற்பட்டது, அதனால் ரீசெட் செய்து அது இருக்கும் போக்கிலேயே விட்டு விட்டேன். அதிக அளவிலான மார்ஜின் ஸ்பேசினாலேயே படங்கள் எழுத்து இருக்கும் இடத்தை விட்டு வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. பெரும்பாலும் திரைப்பட காட்சிகளை பதிவில் சேர்க்க நேரிடும் போது இந்த நிலை தவிர்க்க முடியாததாக சிக்கலை தருகிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். சிரமத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  5. சற்றே வித்தியாசமான பதிவு! ஒரு பிடிக்காத படத்தை விலாவாரியாக விவரித்து, கடைசியில் இதைத் தயாரித்தவர்கள் 'நாசமாகப் போக' என்ற ரீதியில் திட்டுவதெல்லாம் வேதாளரின் மீதான உங்களது நேசிப்பை வெளிச்சம் போடுகிறது. கதை சொன்ன விதத்தில் மீண்டும் ஒரு 'சபாஷ்' பெறுகிறீர்கள். தகவல் சேகரிப்பும் அப்படியே! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி எனக்கு!
    நன்றிகளும், வாழ்த்துக்களும்...!

    ReplyDelete
  6. நண்பரே, வருகைக்கு நன்றி.

    தேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளரைப் போல் இந்த பதிவினுள் மறைந்திருக்கும் எனது ஆதங்கத்தை தோண்டி எடுத்துவிட்டீர்கள்.


    படத்தை எடுத்தவர்களுக்கு விமோசனமே இல்லை என்று திட்டியதற்கு காரணம், குள்ளமாக, செம குண்டாக, சொல்லுங்கன்னே சொல்லுங்க நிகழ்ச்சி நடத்துனர் இமான் அண்ணாச்சியைப் போன்ற உருவத்தை ஒத்திருக்கும், மரத்தால் ஆன தொப்பியும், இடையுடையும் அணிந்திருக்கும் குரான் கேரக்டருக்கு, கார்னியர் விளம்பரத்தில் வரும் மாடலைப் போல இருக்கும் பெண்ணைப் போட்டு இதுதான் குரான் என்றதால் வந்த வேதனையில் சேர்த்த பாயிண்ட் அது.

    //வேதாளரின் மீதான உங்களது நேசிப்பை வெளிச்சம் போடுகிறது// அதுவே உண்மை. எனக்குப் பிடித்த மூன்று கேரக்டர்களில் வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக், ஃப்ளாஷ் கார்டன், இந்த மூவரில் முதலிடம் வேதாளருக்கே. இதன் பிறகு மற்றவர்கள் நிறைய பேர்கள் உண்டு.

    //மீண்டும் ஒரு 'சபாஷ்' பெறுகிறீர்கள்// நன்றி நண்பரே.
    அடுத்த பதிவையாவது கட்டாயம் நிங்கள் என் பாக்கெட்டில் 10 ரூபாயாவது அழுத்தும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும்படி தயாரிக்க முயற்சி செய்கிறேன்.

    வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் உங்களுக்குத் தரவேண்டிய மொத்தத் தொகை ரூ.200 ஆகிறது!

      Delete
    2. நன்றி நண்பரே,

      உங்கள் தாராள மனதுக்கு மிகவும் நன்றி.:-))

      Delete
  7. நன்றி. உங்க புண்ணியத்துல இங்கேயும் விஜயன் சார் ப்ளாக் லயும் கானாமபோன என்னோட கமெண்ட் உம் வெளிப்பட்டுவிட்டது. அதற்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இமெயிலில் பின்னூட்டம் வந்ததால் தெரிந்தது, இல்லையென்றால் தெரியாமலே போயிருக்கும். உமது கமெண்ட் எனது பதிவில் காணாமல் போய் கண்டு பிடித்ததனால், எடிட்டர் ப்ளாகிலும் அதே தான் நடந்திருக்கும் என்று ஊகித்து, எடிட்டரை மீட்டெடுக்கும் படி கேரிக்கை வைத்தேன், இல்லையென்றால், எனது பின்னுட்டத்தை எடிட்டர் மாடரேட் செய்துவிட்டார் என்று தவறாக நினைத்து மனம் வருந்தியிருப்பேன்.
      பின்னூட்டத்தை போட்ட பிறகு லாக் இன் செய்வதால் இந்த பிரச்சனை வருகிறது என்று நினைக்கின்றேன். அதனால் முதலிலேயே லாக் இன் செய்து, பின் கமெண்டை இடவேண்டும் என்று நினைக்கின்றேன். நீங்களும் லாக் இன் செய்யாமல் பிறகு லாக் இன் செய்தீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.

      Delete
  8. பாலாஜி சுந்தர் அவர்களே,

    ஒரே ஒரு வார்த்தை - அட்டகாசம்.

    பதிவிட நீங்கள் ஏன் விண்டோஸ் லைவ் ரைட்டர் யூஸ் செய்யக்கூடாது?

    ReplyDelete
    Replies
    1. விஷ்வாஜி, எவ்வளவு நாட்களாகிவிட்டது உங்களைப் பார்த்து!

      இப்படி ஒரு ஆப் லைன் ப்ளாக் க்ரியேட்டரை, பல நாட்களாக தேடாத இடம் இல்லை, மைக்ரோஸாஃப்டைத் தவிர.
      லைவ் ரைட்டரை முயற்சித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன்.

      பாராட்டுகளுக்கும்,சஜெஷனுக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி, நன்றி.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
  9. அனைத்து சித்திரக்கதைகளும் திரைப்படமாக வரும்பொழுது சரியாக வாய்பதில்லை. இதுவும் அந்த ரகத்தில் வந்தது கொடுமைதான்.....
    world best parkour வியக்கவைக்கும் வீடியோ இணைப்பு...

    இந்த அற்புதத்தை படைத்த உங்களின் தேடல்களை சபாஷ் என்ற ஒரு வார்த்தையில் பாராட்ட முடியாதுதான்

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஈரோட்டாரே, வணக்கம்.

      உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பான பாராடுதல்களுக்கும் மிகவும் நன்றி. எனது அடுத்த பதிவையும் நீங்களும், மற்ற அனைவரும் பாராட்டும் விதத்தில் உருவாக்க வேண்டும் என்ற ஆசை எண்ணம், உங்கள் அனைவரின் பாராட்டுதல்களினால் அதிகரிக்கின்றது. அதற்காக அடியேனுக்கு இறைவன் அருள் புரிவாராக.

      யாராவது Parkour-ஐப் பற்றி ஏதாவது சொல்வார்களா என்று ஆவலுடன் காத்திருந்தேன். நீங்கள் அந்த காட்சியை ரசித்திருந்தால், Yamakasi என்ற படத்தை பாருங்கள். அந்த படத்தில் 4, 5 மாடி உயரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யும் ஒரு பெண்ணை, Parkour இளைஞர்கள் குழு ஒன்று காப்பற்றும் ஒரு காட்சி இருக்கின்றது. நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சி அது. ஆனால் அது ஒரு ப்ரெஞ்சு படம், ஆங்கில சப்டைட்டில் உண்டு. ஆக்‌ஷன் படத்திற்கு மொழி தடையாக இருக்காது. முடிந்தால் பாருங்கள்.

      நன்றி
      அன்புடன்,

      பாலாஜி சுந்தர்.

      Delete
  10. Yamakasi பட இணைப்பு கிடைக்குமா? நண்பரே!

    ReplyDelete
  11. நல்ல பதிவு சேர்..முகமூடி என்ற படத்தின் டைட்டிலைக்கேட்டதுமே எனக்கு மாயாவியின் நினைவுதான் வந்தது என் சிறியவயது ஹீரோ மண்டையோட்டு மோதிரம் வாங்க சிறிய்வயதில் அப்படி அலைந்திருக்கின்றேன்...இப்பொழுது நினைக்க சிரிப்பாக இருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. திரு. கிருத்திகன் யோகராஜா அவர்களுக்கு வணக்கம்.

      உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி. வேதாளரின் பரம ரசிகரான உங்களின் பின்னூட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சியுற செய்தது.

      பல திரைப்பட டைரக்டர்கள், காமிக்ஸ் புத்தகத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மிஷ்கினும் ஒருவர். மிஷ்கினின் முகமூடி திரைப்படத்தில் பல காட்சிகள், வேதாளரின் ஸ்டைலை பிரதிபலிப்பதாக இருக்கும்.

      நானும் சிறிய வயதில் வேதாளரின் கபால முத்திரை மோதிரத்தை வாங்குவதற்கு அலைந்திருக்கின்றேன். பொங்கல் விழா சமயத்தில் நடத்தப்படும் சுற்றுலா பொருட்காட்சியில், அப்படி ஒரு மோதிரத்தை வாங்கிவிட முயற்சித்த போது, பெரியவர்களின் சம்மதம் கிடைக்காமல், அந்த மோதிரத்தை இழந்த வருத்தத்தில், பொருட்காட்சியில் சந்தோஷத்தை தொலைத்து விட்டு வந்தது, நினைவில் கபால முத்திரையைப் போல் அழிக்க முடியாமல் இருக்கிறது.

      காபால முத்திரையை விட, வேதாளர் தன் நண்பர்களை அடையாளம் காட்டுவதற்கு உபயோகிக்கும், நமது ஸ்வஸ்திக்கைப் போல இருக்கும் அந்த நான்கு திசையை நோக்கி இருக்கும், சுற்றி வரும், எதிர் எதிரான P டிஸைன் மோதிரத்தையும், டாலரையும் மிகவும் தேடி இருக்கின்றேன், ஆனால் அது கிடைக்கவில்லை.

      ஒரு வெள்ளை டீ ஷர்ட்டில் நானே பேப்ரிக் பெயிண்டை உபயோகித்து, முன், பின் பக்கங்களில் வேதாளரின் அந்த நட்பு டிசைனை வரைந்து, அதை பெருமிதத்துடன் உடுத்திக் கொண்டு திரிந்திருக்கிறேன். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால்;

      1. அந்த டிஸைனை தத்ரூபமாக கொண்டுவரும் அளவு எனது ஓவியத்திறமை இல்லை.

      2. அந்த டீஷர்டை அணிந்தபடி ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லை, போட்டோ இருந்திருந்தால், அதை இந்த பதிவில் கட்டாயம் நுழைத்திருப்பேன்.

      3. கொடுமையிலும் கொடுமை அந்த டீஷர்ட் டிசைனை பார்த்து அடையாளம் கண்டு பிடித்தது இரண்டு பேர்கள் தான் என்று நினைக்கின்றேன், ஏனெனில் இரண்டே பேர்கள் மட்டுமே என்னைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு சென்றனர். ஒரு சிலர் மட்டும் அது என்ன டிஸைன் என்று விசாரித்தனர். விளக்கிச் சொன்ன பிறகு, அப்படியா வேதாளரா, யார் அது என்றனர். அதன் பிறகு அந்த டீஷர்ட் மேலிருந்த என் ஆர்வம் முற்றிலும் கரைந்து விட்டது. இது நடந்தது எனது கல்லூரி நாட்களில்.

      திருப்பூரில் சிபி, சிபி என்று ஒரு நண்பர் இருக்கிறார். கத்தரிப்பூ கலரில் அந்த டிஸைனில் ஒரு டீஷர்ட் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்கலாம் என்று இருக்கின்றேன். அகப்படுவாரா என்று பார்க்கிறேன்.

      அன்புடன்,

      பாலாஜி சுந்தர்.

      Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.